12,300 அடி உயரத்தில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள 78 வயது யோகா ஆசிரியை!
78 வயது பத்மினி ஜாக் அவரது கணவர் லெஃப்டினெண்ட் ஜெனரல் பிரதாப் ஜாக் மறைவிற்கு பிறகும் தனியாக வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்கள் போன்றோருக்கு யோகாசனங்களும் பிராணாயாமமும் பயிற்சி அளித்து வருகிறார்.
பத்மினி ஜாக் இவருக்கு 78 வயதாகிறது. இவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இலவசமாக பிராணாயாமம் மற்றும் யோகா பயிற்சி முகாம் நடத்துகிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆயுதப்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்.
பத்மினியின் கணவர் பெயர் பிரதாப் ஜாக். இவர் இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் கர்னலாக இருந்தார். 2005ம் ஆண்டு வரை பத்மினி தன் கணவருடன் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் பத்மினி குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இல்லத்தரசியாகவே இருந்துவிட்டார்.
பிறகு மாண்டசரி கோர்ஸ் முடித்தார். கணவருக்கு மாற்றலாகும் இடங்களில் இருக்கும் பள்ளிகளில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
பத்மினி பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் சீனியர் கேம்பிரிட்ஜ் முடித்துள்ளார். மகாராணி கல்லூரியில் பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் முடித்துள்ளார்.
பத்மினியின் கணவர் ஜாக் லெஃப்டினெண்ட் ஜெனரல் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு இந்தத் தம்பதி அவர்களது சொந்த ஊரான நாக்பூருக்கு மாற்றலானார்கள்.
“என் மாமனார் தவறாமல் யோகா பயிற்சி செய்வார். அவரைப் பார்த்து என் கணவரும் பயிற்சி செய்வார். நான் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தேன். 1983ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு நாக்பூரில் யோகா அப்யாசி முகாம் ஒன்றில் நாங்கள் கலந்துகொண்டோம். யோகா சம்பந்தப்பட்ட தேர்வு எழுதினோம். அதன் பிறகே மற்றவர்களுக்குக் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம்,” என்கிறார்.
இப்படி சிறியளவில் மற்றவர்களுக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் அளவிற்கு செல்லும் என இவர்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வரை பயிற்சியளிப்பார்கள் என்று இவர்கள் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.
ஒற்றை நோக்கம் கொண்ட தம்பதி
2004ம் ஆண்டு பத்மினி படுக்கை அறையில் யோகாசனம் செய்துகொண்டிருந்தார். அவரது கணவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஹரித்வாரில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பற்றிய விளம்பரம் அதில் வந்தது.
“நான் யோகா பயிற்சியில் இருந்தேன். அது முடிந்ததும் கணவரிடம் இதுபற்றி பேசலாம் என்று இருந்தேன். அதேபோல், என் கணவரும் அந்த ஆசிரியர் பயிற்சிக்கு போகலாமா என்று என்னிடம் கேட்க இருந்தார்,” என்று புன்னகையுடன் குறிப்பிட்டார் பத்மினி.
ஹரித்வாரில் இந்தத் தம்பதி யோகா ஆசிரியர் கேம்ப் ஒன்றில் பங்கேற்றனர். இதில் பாபா ராம்தேவிடம் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அதன் பிறகு, நாக்பூர் திரும்பினார்கள். மத்திய பிரதேசத்தில் போபால் அருகே செஹோர் பகுதியில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்ய சொல்லி இவர்களுக்கு அழைப்பு வந்தது.
“நாங்கள் ரயிலில் அங்கு சென்று சேர்ந்தோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் எங்களை வரவேற்றனர். அவர்கள் கிராம மக்களிடையே இந்த பயிற்சி முகாம் பற்றி விளம்பரப்படுத்தினார்கள். காலை 400 பேரும் மாலை நேரத்தின்போது 200 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்,” என்று பத்மினி நினைவுகூர்ந்தார்.
கூட்டத்தின் முன்பு எப்படிப் பேசப்போகிறோம் என்கிற பதட்டம் பத்மினிக்கு ஏற்பட்டது. அவரது கணவர் இந்த பயத்தைப் போக்கி நம்பிக்கையளித்துள்ளார்.
”அதுவரை 20-25 பேர் முன்னிலை பேசிய அனுபவம் மட்டுமே எனக்கு இருந்தது. திடீரென்று அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். என் கணவர் என்னை ஊக்கப்படுத்தினார். பேசும் கருத்தில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் யாருடைய கண்களையும் பார்க்கவேண்டாம் என்றும் சொன்னார். அப்படியே செய்தேன்,” என்கிறார்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து யோகாசனங்களையும் பிராணாயாமத்தையும் மக்கள் முன்பு செய்து காட்டி விளக்கினார்கள். தம்பதி இருவரில் ஒருவர் ஆசனங்களையும் பிராணாயாமத்தையும் செய்து காட்ட, மற்றவர் அதை விவரிக்கும்படி இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிக்கான கட்டணங்களை மட்டும் பெற்றுக்கொண்டு இந்தத் தம்பதி இலவசமாக யோகா பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர் இல்லங்கள், ரோட்டரி என அனைவருக்கும் பயிற்சி அளித்தனர்.
முக்கியமாக ராணுவம், கடற்படை, விமானப்படை, போலீஸ் செண்டர்கள் (CRPF, SRPF, BSF, ITBP) போன்ற இடங்களில் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்தனர். கேந்திரிய வித்யாலயா மற்றும் இராணுவ பப்ளிக் பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சியளித்தனர்.
”முகாம்கள் முடிந்து நாக்பூர் திரும்பியதும் எங்கள் தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து அடுத்த முகாமை எப்படி மேலும் சிறப்பாக ஏற்பாடு செய்யலாம் என்று நாங்கள் இருவரும் கலந்து பேசுவோம்,” என்கிறார் பத்மினி.
எல்லைப்பகுதிகள்
பத்மினியின் கணவர் ஜாக் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதுவரை இருவரும் சேர்ந்து 561 பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
“2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி காலையில் பயிற்சி முகாம் முடிந்த பிறகு நாக்பூரில் இருக்கும் School of Scholars எங்களது முயற்சியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அன்று மாலை என் கணவர் வாந்தி எடுத்தார். ராணுவ மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றோம். முந்தைய நாள் அவருக்கு மாரடைப்பு வந்திருந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள்,” என்று பத்மினி நினைவுகூர்ந்தார்.
லெஃப்டினண்ட் ஜெனரல் ஜாக் பல ஆண்டுகளாக தொடர்ந்து யோகாவும் பிராணாயாமமும் செய்து வருவதால் இது எப்படி சாத்தியம் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். இந்த பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்ததால் மாரடைப்பு 20 ஆண்டுகள் தாமதமாக வந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அன்று மாலையே ஜாக் உயிரிழந்தார்.
அடுத்த ஒரு மாதத்திற்கு பத்மினி எந்த யோசனையும் இல்லாமல் இருந்தார். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பயிற்சி முகாம்களை ஒத்திவைக்க சொல்லிவிடுமாறு மகன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டார். ஆனால் விரைவில் தனியாக வேலைகளைத் தொடரத் தீர்மானித்தார்.
“பெங்களூருவில் இருக்கும் ராணுவ பப்ளிக் பள்ளியில் ஒரு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். அது 562-வது முகாம். அப்போதிருந்து மும்முரமாக இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்கிறார்.
தனியாக பயணம் செல்லவும், தங்கவும் பயற்சியளிக்கவும் பழகிக்கொண்டார் பத்மினி.
ஜம்மு & காஷ்மீர் எல்லைப் பகுதி வரை பயணம் மேற்கொண்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 940 பயிற்சி முகாம்களை நிறைவு செய்துள்ளார்.
“செப்டம்பர் மாதம் 17-28 தேதி வரை ஜம்மு & காஷ்மீர் எல்லைப் பகுதியின் 11 இடங்களுக்கு பயணம் மேற்கொண்டேன். யோகாவும் பிராணாயாமமும் பயிற்சி அளித்தேன். இரவு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் தங்கி தூங்கினேன். கடல் மட்டத்திலிருந்து 12,300 அடி உயரம் வரை பயணம் செய்திருக்கிறேன்,” என பத்மினி பகிர்ந்துகொண்டார்.
உடல் மற்றும் மனநலன்
இந்த கோர்ஸ் ஏழு பிராணாயாமம், ஏழு மைக்ரோ உடற்பயிற்சி, ஏழு யோகாசனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் யோக நித்ரா, அமைதியான தூக்கத்திற்கான தியானம் போன்றவை அடங்கும்.
“ராணுவ வீரர்கள் மிகவும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். இந்த பயிற்சி அவர்களை அமைதிப்படுத்துவதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் கேட்கும் பட்சத்தில், அன்றாடம் பயன்படுத்தும் வகையில் ஆடியோ ஃபைல்களாகவும் கொடுக்கிறேன்,” என்கிறார்.
தினமும் பிராணாயாமா, யோகா ஆகிய பயிற்சிகள் செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை பத்மினி விவரித்தார்.
“நாம் தினமும் தூங்குகிறோம். குளிக்கிறோம். சாப்பிடுகிறோம். இதுபோன்ற அன்றாட செயல்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் தினமும் அரை மணி நேரம் பிராணாயாமம் செய்யவும் 10 நிமிடங்கள் யோகாசனங்கள் செய்யவும் ஒதுக்கவேண்டும். இந்த பயிற்சிகள் நம் உடல் நலனையும் மனநலனையும் மேம்படுத்தும். முதலில் இதை நம்மால் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள். இதற்கென பிரத்யேக ஆடைகளோ உபகரணங்களோ தேவைப்படாது. 3X6 இடம் இருந்தாலே போதுமானது,” என்கிறார் பத்மினி.
மற்ற உடற்பயிற்சிகள் செய்வதைக் காட்டிலும் பிராணாயமம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்யும்போது புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறார். உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து யோகா பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிடுகிறார்.
”பிராணாயாமம் அடி ஆழம் வரை சென்று வேலை செய்து உடலில் இருக்கும் எட்டு சக்கரங்களையும் ஆக்டிவேட் செய்கிறது. இதனால் உடலளவிலும் மனதளவிலும் வலுப்பெறுவீர்கள். இது ஆன்மீக சிந்தனைகளையும் தூண்டும். இந்த பயிற்சிகள்தான் என்னுடைய வழிபாடு என்றே சொல்லலாம்,” என்கிறார் பத்மினி.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா