'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்
பெண்களின் உரிமைகளுக்கு சர்வ தேச அளவில் குரல் கொடுக்கும் எழுத்தாளர் அனு சுப்ரமணியன்
உலகெங்கும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் சர்வதேச குற்றங்களில் ஒன்றான மனித கடத்தல், தீவிரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல குழுக்களும், அமைப்புகளும் போராடி வரும் சமயத்தில் தனது எழுத்தின் மூலம் இந்த பிரச்சனைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் எழுத்தாளர் அனு சுப்ரமணியன். அது மட்டுமில்லாமல், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்தும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் சர்வதேச அளவில் ‘அல்பேனி விமென்ஸ் இன்டிபென்டென்ட் நெட்வொர்க்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் அனு.
இந்திய மண்ணில் பிறந்து தற்போது சர்வதேச தளத்தில் எழுத்தாளராக திகழும் அனு சுப்ரமணியன் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ் யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டி இதோ:

“1998-ஆம் வருடம், கோவையில் நடைப்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த சமயம் என் அம்மா கோவையில் வசித்து வந்தார். அந்த சம்பவம் நடந்தபோது ஒரு வாரத்திற்கு என்னால் அவருடன் தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவரது குரலைக் கேட்க முடியவில்லை. நான் மனித கடத்தல் குற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது இந்த சம்பவம் நடக்கவும், நான் எனது புத்தகத்தை எழுதத் துவங்கினேன்.
பாலியல் வர்த்தகத்திற்காக கடத்தப்படுவோர், குறிப்பாக பெண்கள் எவ்வாறு தீவிரவாத செயல்களுக்காக உபயோகிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி மேலும் ஆராய்ந்து, ஒரு கதையை புத்தகமாக புனைந்தேன்,”
என்று தனது எழுத்திற்கு பல சிறந்த விமர்சனங்களை வாங்கித் தந்த ‘அனதர் ஹெவன்’ (Another Heaven) புத்தகம் உருவான கதையை விளக்குகிறார் அனு.
ஐந்து தலைமுறைகளை சேர்ந்த எழுபத்தியைந்து இந்திய பெண்களுடன் உரையாடி "வெய்டிங் பார் தி பெர்ஃபெக்ட் டான்” (Waiting for the perfect dawn) என்ற தனது முதல் புத்தகத்தையும் எழுதியுள்ளார் அனு. இந்த புத்தகத்தில் பெண்கள் ஆண் ஆதிக்கப்பிடியிலிருந்து தங்களை வெளியேக் கொண்டு வர நடத்தும் போராட்டங்களைப் பற்றி விவாதித்துள்ளார்.
“எனது புத்தகங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் மனித கடத்தல் குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்கவும், அவர்களுக்கு மறுநிவாரணம் அளிக்கவும், வீட்டினுள் நடக்கும் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களையும் நேரடியாக போய் சேர்கிறது” என்கிறார் அனு.

வாழ்க்கைப் பயணம்:
பெங்களூருவில் பிறந்து, பீகார் மாநிலத்தில் சில வருடங்கள் வாழ்ந்து, பிறகு நான்கு வயதில் ஈரோடு வந்த அனு, தனது இந்திய வாழ்க்கையை பெரும்பாலும் அங்கே தான் கழித்தார். சென்னையிலும் சில வருடங்கள் வாழ்ந்துள்ளார். கல்லூரிப் படிப்பின் போது ஷேக்ஸ்பியர், மொழியியல், நாடகம், சொல்லாட்சி உள்ளிட்ட பாடங்களில் அதீத ஆர்வம் கொண்டார். எழுத்தும் இலக்கியமும் இவரை ஈர்த்தது. படிப்பு முடிந்ததும் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய அனு, எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார்.
“எனது தந்தை தான் என்னை எப்பொழுதும் ஊக்குவித்த “சியர்லீடர்” எனலாம். அவரது உந்துதலில் எழுதத் துவங்கினேன். எனக்கு இருபத்திரண்டு வயதானபோது எனது தந்தை காலமானார். அவரது மறைவால் ஊக்கமிழந்து போனேன். ஆனால் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் நான் எனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தை பெற படித்துகொண்டிருந்த போது எனது ஆய்வறிக்கை வழிக்காட்டி எனது எழுத்துத் திறமையை மீண்டும் வெளிக்கொணர்ந்தார். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் எழுதிய முதல் புத்தகம் தான் ‘வெய்டிங் பார் தி பெர்பெக்ட் டான்” (Waiting for the perfect dawn)” என்கிற அனு, தற்போது ‘தி ரைட்டிங் சென்ட்டர், ப்ரௌன் ஸ்கூல், நியூ யார்க்-கில் இயக்குனராக இருந்து பல மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியளித்து வருகிறார்.

அந்நிய நாட்டில் இந்திய எழுத்தாளராக:
“என்னைப் போன்ற இந்திய எழுத்தாளர்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனினும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் இந்திய வெளியீட்டாளர்கள் எங்களுக்குத் தேவையான ஆதரவை தருவதில்லை. எழுத்து உலகத்தில் மாற வேண்டிய ஒரு விஷயம் இது. பின்னணியை வைத்தோ, பாலினத்தை வைத்தோ எழுத்தாளர்களை வேறுபடுத்திப் பார்ப்பது குறைய வேண்டும். சர்வதேச அளவில் எல்லோரும் சமம் என்ற நிலைமை வர வேண்டும்.” என்று தனது ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார் அனு சுப்ரமணியன்.
இலக்கியம் மூலமாக மனிதத்தை பரப்பும் முயற்சிக்காக, 2011-ஆம் ஆண்டு நியூயார்க் நகர ஆங்கில மன்றம் இவருக்கு சிறந்த கல்வியாளர் விருதை அளித்து கௌரவித்தது. ‘ஸோ பேர் அண்ட் வெரி லவ்லி (So Fair and Very Lovely) என்ற தலைப்பில் வெளியான இவரது சிறுகதை, அமெரிக்காவின் சிறந்த நான்கு சிறுகதைகளின் பட்டியலில் ‘நார்மன் மெயிலர் சென்ட்டர்’ மற்றும் தேசிய ஆங்கில ஆசிரியர்களின் மன்றம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சிறுகதையில் இந்திய சமூகத்தில் நிறத்தை வைத்து ஏற்படுத்தப்படும் பாகுபாடுகளைப் பற்றி எழுதியிருந்தார்.
‘என் எழுத்திலும் தமிழ்நாட்டின் தாக்கம்’
“தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா சென்று முப்பது வருடங்கள் ஆகியிருந்தாலும் ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தாலோ, தமிழ் பாடலை கேட்டாலோ என் உள்ளம் குழந்தையாக மாறிவிடும். அந்த காவேரி நதிக்கரைக்கும், பசுமையான வயல்வெளிகளுக்கும் எப்போதும் என் புத்தகங்களில் ஒரு இடம் உண்டு. என் புத்தக அலமாரியில் ‘பாரதியார் கவிதைகள்’ இன்றும் உள்ளது".
எனது கதைகளின் சூழல் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மாறி மாறி பயணித்தாலும், தமிழ்நாட்டின் இயற்கைவளங்களை மறக்காமல் குறிப்பிடுவேன். எனது பார்வையில் தமிழ்நாட்டில் பிறந்து, உலகின் எந்த மூலைக்கு ஒருவர் சென்று வாழ்ந்தாலும், அவர் அங்கும் தமிழனாகவே வாழ்கிறார்” என்று பூரிக்கிறார் அனு. இவர் எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளையும், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவல்களையும் மிகவும் விரும்பிப் படிப்பவர்.
‘பெண்கள் மதிக்கப்பட வேண்டும்’
உலகெங்கும் உள்ள பெண்களுக்கு பல வழிகளில் உதவி வரும் எழுத்தாளர் அனுவிடம் உங்கள் மனதிற்கு மிகவும் பிடித்தமான விஷயம் எது என்று கேட்டபோது, “மனித உரிமைகள் மதிக்கப்படுவது, முக்கியமாக பெண்கள் தங்களது உரிமைகளையும், ஆற்றலையும் உணர வேண்டும் என்றார். அதே சமயம்,
"எந்தவொரு சமூகம் பெண்களை மதித்து, அவர்களது சுயமரியாதையை போற்றுகிறதோ, அந்த சமூகம் அவளுடன் சேர்ந்து உயரும். ஒரு பெண் தவித்தால், அவளது சமூகமும் சேர்ந்து தவிக்கும்” என்கிறார் அழுத்தமாக.
இன்றைய எழுத்தாளர்களுக்கு
"எல்லோராலும் பேசப்படும் தலைப்பை பற்றி எழுதவேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் மனதிற்கு நெருக்கமான விஷயத்தை பற்றி எழுதுங்கள். மனிதத்திற்கு உதவாமல் காலாகாலமாக பின்பற்றப்படும் பழக்கங்களையும், மனநிலைகளையும் மாற்றுவதற்காக எழுதுங்கள். அமைதியை உருவாக்க எழுதுங்கள். "
"நமக்காகவும், பின் வரும் சந்ததிகளுக்காகவும், இந்த உலகத்தை ஒரு வாழத்தகுதியான இடமாக மாற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்த எழுத்து ஒரு சக்திவாய்ந்த கருவி” என்று ஆணித்தரமாக தன் உணர்வை பதிவு செய்கிறார் எழுத்தாளர் அனு சுப்ரமணியன்.
வலைதளம்: அனு சுப்ரமணியன், ஃபேஸ்புக், ட்விட்டர்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்