’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, இவ்வுலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த பெருமை உடைய நம் தமிழினம் மற்றும் தமிழ் மொழியோடு பயணித்த பல மொழிகள் இன்று எழுத்து வடிவில் இல்லை. இன்னும் சில மொழிகள் பேச்சு வழக்கில் கூட இல்லாமல் அழிந்துவிட்டது...
தமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி பாதுகாப்பது உலகின் மூத்த குடிமக்களாகிய தமிழர்களின் தலையாய கடமையாகும். தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், மேற்கத்திய நாகரீக கலப்பாலும் தமிழ் மொழியில் அநேக கலப்படம் வந்து விட்டது. பலரும் தங்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழியை தவிர்த்து, வேறு மொழிகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
இந்த மொழி இடைவெளியை குறைக்க, தமிழ் கலாச்சாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு தாய்மொழியை வளர்க்கும் சிறு முயற்சியில் இறங்கியுள்ளனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள்.
“பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்` என்ற குறிக்கோளுடன் குறள் ஆடை 2017 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது,”
என்று நிறுவனர்களில் ஒருவரான அருண் பால் பகிர்ந்தார். இவர் தன் நண்பர்கள் கோபால கிருஷ்ணன், குமார் ஆகியோருடன் குறள் ஆடை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
கல்லூரி காலத்தில் சமூக சேவை அமைப்புகள் வழிநடத்தி சென்றதன் மூலம் இணைந்த இந்த மூன்று நண்பர்களும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர். கோபால கிருஷ்ணன் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்தவர். மெரிடியன் மற்றும் கே.பி.ஆர் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிவர். கோபாலகிருஷ்ணனுக்கு கார்மெண்ட்ஸ் துறையில் அனுபவம் உள்ளதால் அது சம்பந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் வந்துள்ளது.
அருண் சந்தை நிலைபடுத்துதல் (மார்கெட்டிங்) துறையில் அனுபவம் பெற்றவர். குறள் ஆடையில், கோபாலகிருஷ்ணன் ஆடைகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, அருண் அவற்றை சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளார். குமார் திட்டமிடுதல் மற்றும் செயல்பாடுகளை கவனித்து கொள்கிறார்.
”மூன்று லட்ச ரூபாய் முதலீட்டுடன் ’குறள் ஆடை’ தொடங்கப்பட்டது. ஆங்கில எழுத்துகள் மற்றும் அநாகரீக வார்த்தைகள் அச்சிடப்பட்ட ஆடைகளை பலர் அணிகின்றனர். இவற்றுக்கு பதிலாக தமிழ்மொழியின் பெருமைகளை பதித்த ஆடைகள் வெளியிடுவதன் மூலம் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று இதைத் தொடங்கினோம்,” என்றார் கோபால கிருஷ்ணன்.
“ஆள் பாதி... ஆடை பாதி ...” என்ற தமிழ் பழமொழி உண்டு. நாம் அணியும் ஆடை தான் நமக்கான தனித்துவத்தை காட்டுகிறது. அந்த வகையில் தமிழ் மொழியின் பெருமையையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு மக்களிடையே கொண்டு சேர்ப்பதே குறள் ஆடையின் நோக்கம் ஆகும் என்கின்றனர் நிறுவனர்கள்.
இப்படிப்பட்ட தமிழ் ஆடைகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தாய்மொழியின் பெருமையை ஏந்தி நிற்கும் டி-சர்டுகளை மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
”நகர்ப்புறங்களில் மட்டுமில்லாது கிராமப்புறங்களிலும் இருக்கும் தமிழ் ஆடைகளை நேசிக்கும், எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இதனை கொண்டு சேர்ப்பது மிகுந்த மன திருப்தியை ஏற்படுத்துகிறது.”
“உலகத்தின் அனைத்து நாகரீகமும் அழிந்தாலும் திருக்குறள் என்ற ஒற்றை நூலின் மூலம் அதனை மீட்டுவிடலாம்,” என்று திருக்குறளின் பெருமை உலகம் அறிந்தவை. இத்தகைய பெருமைக்குரிய தமிழரின் நூலான திருக்குறளையும் நமக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களின் முக்கிய ஆயுதமான ஏர்கலப்பையையும் பெருமைப்படுத்தும் விதமாக, இவ்விரண்டையும் சேர்த்து உருவாக்கபட்டதே குறள் ஆடையின் சின்னம்.
உலகத்தின் கடைக்கோடி தமிழர்களுக்கும் இந்த தமிழ் ஆடைகளை கொண்டு சேர்ப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்கின்றனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள். இதற்காக தங்களின் வியாபாரத்தை உலகமெங்கும் கொண்டு செல்லவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பாரதியாரின் வரிகள், திருவள்ளுவர் மற்றும் அப்துல் கலாம் ஐயா உருவம் பதித்த வடிவம் மற்றும் ஆத்திச்சூடி வரிகள் மற்றும் பல வடிவ ஆடைகளை 100% பருத்தியில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
www.kuralaadai.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். குறள் ஆடையில் டி-சர்டுகள் 300 ரூபாய் முதல் கிடைக்கின்றது. மக்கள் விருப்பதிற்கு ஏற்பவும் டி-சர்ட், சர்டுகளை தயார் செய்து கொடுக்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனம் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் அடிப்படையில் தயார் செய்து கொடுக்கின்ற இவர்களுக்கு எல்லா துறைகளில் போட்டி இருப்பது போல் இங்கும் உள்ளது.
”போட்டியாளர்களை விட உயர்ந்த தரம் மற்றும் மக்களை ஈர்க்கும் அழகிய வடிவங்களை குறைவான விலையில் தருவதன் மூலம் போட்டியை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்,” என்கின்றனர்.
தொடங்கிய ஓர் ஆண்டில் சுமார் 3000 தொடர்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங் தீவிரமாக செய்து வாடிக்கையாளர்களை பெருக்கி வருகின்றனர்.
எதிர்கால திட்டங்கள்:
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ‘குறள் ஆடை’ பிராண்டை முதல் இடத்தில் கொண்டு செல்வது, 40க்கும் மேற்பட்ட கடைகளை தமிழ்நாட்டின் முன்னணி நகரங்களில் தொடங்குவது, 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதே தங்களின் எதிர்கால திட்டங்கள் என்று பகிர்கின்றனர்.
தமிழால் இணைவோம் !!! தமிழராய் வாழ்வோம் !!! தமிழ் வளர்க!!! தமிழ் வெல்க!!!
வலைதள முகவரி: www.kuralaadai.com | ஃபேஸ்புக் : www.facebook.com/kuralaadai/