5,000 பிளாஸ்டிக் பாட்டில், 450 கிலோ பாலித்தீன் பையில் ஒரு கட்டிடம்!
ஏப்ரல் 22... உலக பூமி தினம். நாம் இழைக்கும் தீங்கினை அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் பூமித்தாயினை நினைவில் நிறுத்திக் கொள்ள அனுசரிக்கப்படும் நாளில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இப்புவி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
அப்படி, புவிக்கு பேரரக்கனான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாலித்தீன்களை கொண்டு கட்டிடம் எழுப்பி பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளை இணைந்து விழிப்புணர்வு செய்தது. பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தின் வளாகத்திலே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியில், ‘ஈக்கோ ப்ரிக்ஸ்’ (Eco Bricks) கொண்டு கட்டப்பட்ட அலுவலக அறை உலக பூமி தினத்தன்று திறக்கப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதென்ன ஈகோ பிரிக்ஸ்?
பூவுலகைச் சீரழித்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில், அதன் குடும்பத்து அங்கத்தினர்களான பிளாஸ்டிக் பைகளை நிரப்பி, காற்றுபுகாமல் இறுக அடைத்தால் பாட்டில்கள் கட்டுமானத்திற்கு ஏற்ற கற்கள் போன்றாகிவிடுகிறது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தடுக்கும் அப்பிளாஸ்டிக் பாட்டில்களே ஈகோ பிரிக்ஸ் எனப்படும்.
ஈகோ பிரிக்ஸ் கொண்டு வீடு கட்டுவது அயல்நாடுகளில் வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், இந்தியாவிலும் ஆங்காங்கே அறிமுகமாகி, தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்டு செங்கலுக்கான மாற்றுப்பொருளாய் மாறியுள்ளது ஈகோ பிரிக்ஸ்.
அப்படி சில நிமிடங்கள் மட்டுமே பயன்பாட்டு பொருளாயிருந்து, தூக்கியெறியப்படும் 5,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, அவற்றில் 450கிலோ பிளாஸ்டிக் பைகளை அடைத்து 400சதுர அடி பரப்பளவில் அறையை கட்டி அசத்தியுள்ளனர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தின் நர்சிங் மாணவிகளும், ஆசிரியர்களும்.
கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தின் செயலாளர் மித்ராவின் ஊக்கத்தால், தொடங்கப்பட்ட இத்திட்டத்தை செயலாக்க, 5 மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துள்ளனர். டாஸ்மாக் கடைகள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களிலே அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படுவதால், அப்பகுதிகளுக்கு சென்று பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துள்ளனர்.
“சுற்றுச்சூழல் கேடுவிற்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது பிளாஸ்டிக். கடைக்கு சென்று ஒரு ஷாப்பிங் செய்துவிட்டு வந்தாலே பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்துவிடுகிறது. பயன்படுத்திய மறுகணம் மண்ணுக்கு செல்லும் அப்பை மக்குவதற்கு, இரண்டு தலைமுறைகளையே சந்திக்க வேண்டும். ஆனால், பிளாஸ்டிக் இல்லா வாழ்வு என்பது சாத்தியமற்றது என்னும் அளவிற்கு பிளாஸ்டிக் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.
பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்கையில் வெளியாகும் நச்சுவாயுவால் ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்கிறது ஆய்வு. அதனால், நாங்கள் பிளாஸ்டிக்கை எப்படி பயனுள்ள மாற்றுப்பொருளாக மாற்றுவது என்பது குறித்து தேடுகையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குறித்து படித்தேன். உடனடியாக கல்லூரியில் உள்ள தோட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கைகள் செய்தோம். அதன் அடுத்த முயற்சியே ஈகோ பிரிக்ஸ் அறை.” என்கிறார் அவர்.
ஈகோ பிரிக்ஸ் கட்டுமான முறை ஈகோ ப்ரெண்ட்லி மட்டுமின்றி, எக்னாமிக் ப்ரெண்ட்லி என்கிறார் மித்ரா. “
வழக்கமான கட்டுமான முறையில், 400 சதுர மீட்டர் இடத்தில் கட்டிடத்தை எழுப்புவதற்கு 6 லட்சம் ரூபாய் நிர்ணயித்தனர். ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு வெறும் ஒரு லட்ச ரூபாயில் அறையை கட்டி முடித்துள்ளோம். ஈகோ பிரிக்ஸ் சிறந்த வெயில், குளிர் கடத்தப் பொருள். பாட்டிலின் வாயிற் பகுதியை உட்புறமாக வைத்து கட்டப்படும் போது, பார்ப்பதற்கும் அழகாக காட்சியளிக்கும்.
ஒவ்வொரு பாட்டில்களுக்கும் இடையே சிமென்ட் பூசி அடுக்கியதில் வலிமையானதாக இருக்கும். அதே சமயம் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைத்து பெயர்தெடுத்து, மீண்டும் கட்டுமானத்திற்கு பயன்படும். பிளாஸ்டிக்கை இல்லாமலாக்குவது என்பது கடினம். இதுபோன்ற முறைகளில் பிளாஸ்டிக்கை முறையாய் பயன்படுத்துகையில் நிச்சயம் பூமியின் வளத்தை காத்துக்கொள்ளலாம்,” என்கிறார்.
அவரது மாணவிகளும் இணைந்து அவர்களது சொந்த முயற்சியில் எவ்வித நிதி உதவியுமின்றி ஈகோ பிரிக்ஸ் கட்டிடத்தை அவர்களே கட்டியுள்ளனர்.
இதற்கு முன்னதாகவே, கிறிஸ்டியன் கல்வி நிறுவனமும் டான் அறக்கட்டளையும் இணைந்து, இருப்போரையும் இல்லோதோரையும் இணைக்கும் ‘மகிழ்ச்சின் சுவர்’ எனும் திட்டத்தினையும் செயல்படுத்தியுள்ளது. ஆம், பழசாகிய அல்லது வெகு நாட்கள் பயன்படாத அன்றாடம் உபயோகிக்கும் ஆடை, காலணி, புத்தகங்கள் போன்றவைகளை மகிழ்ச்சியின் சுவரில் வைத்துவிட்டால், தேவையானோர் எடுத்து உபயோகித்து மகிழ்வர்.
கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தின் வளாகத்திலே அமைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியின் சுவரில், நாள்தோறும் பொருள்கள் நிரம்புவதும், காலியாகுவதுமாய் இருக்கிறது. அச்சுவரின் அருகிலே உணவுப்பொருள்களை வைப்பதற்கு ஏதுவாய் குளிர்ச்சாதன பெட்டியினையும் வைத்து உலக பூமி தினத்தை சிறப்பித்துள்ளனர்.