கடந்த 18 ஆண்டுகளாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி வரும் மின் வாகன ஆர்வலர்!
பெங்களூருவில் வசிக்கும் ஜரைல் லோபோ 10 மின்சார கார்கள் வைத்துள்ளார். மக்களிடையே மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 2017-ம் ஆண்டு Xtra Reinforced Plastic Private Limited என்கிற சொந்த நிறுவனத்தைத் துவங்கினார். மலிவு விலை மின்சார வாகனங்களை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
உலகம் வெப்பமயமாதலின் தாக்கத்தைக் குறைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலுக்கு தீர்வுகாண நமக்கு 12 ஆண்டுகள் மட்டுமே உள்ளது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வளிமண்டலத்தில் கார்பன் துகள்களே அதிகளவில் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.
நமது வாழ்க்கையை எப்படி பசுமையாக மாற்றிக்கொள்ளமுடியும்? நாம் சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் துவங்கலாம். பசுமையான போக்குவரத்து முறைக்கு மாறுவதும் அத்தகைய வழிமுறைகளில் ஒன்றாகும். பெங்களூருவைச் சேர்ந்த 63 வயது ஜரைல் லோபோ இதைப் பின்பற்றத் தீர்மானித்தார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக மின்சார கார்களைப் பயன்படுத்தி வருகிறார். ஜரைல் 10 மின்சார கார்கள் வைத்துள்ளார். இதில் ஆறு ரேவா கார்கள். நான்கு மஹிந்திரா எலக்டிரிக் e20.
நாடு முழுவதும் பசுமையான போக்குவரத்து முறையை ஊக்குவிக்கவேண்டும் என்பதே ஜரைல் மின்சார கார்களைப் பயன்படுத்துவதன் நோக்கமாகும். இந்த ஆர்வமே 2017-ம் ஆண்டு Xtra Reinforced Plastic Private Limited என்கிற நிறுவனத்தை அவர் சொந்தமாகத் துவங்க வழிவகுத்தது. இந்திய மக்கள்தொகைக்காக மலிவு விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
என்டிடிவி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,
“ஒவ்வொருவருக்கும் மின்சார காரின் அனுபவத்தை வழங்கவேண்டும். விரைவில் இந்தியாவின் போக்குவரத்து ஜீரோ எமிஷனாக இருக்கவேண்டும். விலை மலிவான மின்சார வாகனங்களை வழங்கவேண்டும். இதுவே எனது விருப்பம். இது நிறைவேறும் என நம்புகிறேன்,” என்றார்.
இது எவ்வாறு துவங்கியது? மின்சார கோல்ஃப் வண்டியை உருவாக்குவதில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட ஜரைல் 2001-ம் ஆண்டு இத்தகைய முயற்சியைத் துவங்கினார். அந்த சமயத்தில் ரேவா கார் வாங்கிய வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் அந்தக் காரை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கினார் என Plug-In India தெரிவிக்கிறது.
ஜரைல் விரைவிலேயே தனது அன்றாட போக்குவரத்துத் தேவைக்கு அதைப் பயன்படுத்தத் துவங்கினார். மின்சார வாகனத்திற்கு மாறிவிடுமாறு அவரது குடும்ப உறுப்பினர்களையும் சம்மதிக்கவைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மின்சார கோல்ஃப் வண்டிகள் உற்பத்தியில் என் தொழில் வாழ்க்கையைத் துவங்கினேன். எனவே பசுமை தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து வந்தது. 2000-ம் ஆண்டின் இறுதியில் என்னுடைய நண்பர் ஒருவர் சேத்தன் மைனியை அறிமுகப்படுத்தினார். இவர்தான் மின்சார காரான ரேவாவை உருவாக்கி இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
திரு.மைனியை சந்தித்த பிறகு மின்சார கார்களை ஓட்டும் எண்ணம் எனக்கு உற்சாகமளித்தது. எனவே புரட்சிகரமான மின்சார காரான ரேவாவை வாங்கத் தீர்மானித்து என் பழைய பெட்ரோல் காரை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்போதிருந்து மின்சார வாகனங்கள் மீதான என்னுடைய விருப்பம் அதிகரித்துவந்தது,” என்று தெரிவித்ததாக என்டிடிவி தெரிவித்தது.
அனைத்து மின்சார வாகனங்களும் நேரடியாக ஜரைலின் 15 ஆம்பியர் சாக்கெட்டில் சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த சாக்கெட் ஏசி அல்லது மைக்ரோவேவ் இயங்குவதற்காக பயன்படுத்தப்படுவது. Plugin India உடன் ஜரைல் உரையாடும்போது தனது காருக்கு பேட்டரி பெறுவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் எப்படியோ அவற்றை வாங்கிவிடுகிறார். மின்சார கார்கள் கச்சிதமகாவும் எளிதாக ஓட்டவும் பார்க் செய்யவும் முடியும் வகையில் அமைந்துள்ளதே இதன் சிறப்பம்சமாகும். தனது மின் வாகனங்களை சார்ஜ் செய்வது குறித்து ஜரைல் விவரிக்கையில்,
“இவற்றை சார்ஜ் செய்ய 10 யூனிட் மின்சாரம் தேவைப்படும். ஜீரோவிலிருந்து முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் செய்யப்பட 6 முதல் 7 மணி நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் என்னுடைய கார் சராசரியாக 80 கிலோமீட்டர் வரை செல்லும். அதுமட்டுமின்றி இந்தக் கார்களைப் பயன்படுத்துவதால் அதிகம் சேமிக்கமுடிகிறது. ஒரு யூனிட்டிற்கு வெறும் 5 ரூபாய் மட்டும் செலவிட்டால் என்னுடைய மின்சார காரில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 50 பைசா மட்டும் செலவிட்டால் போதும். பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்கக்கூடிய கார்களை பயன்படுத்துவதோடு ஒப்பிடுகையில் என்னுடைய வருடாந்திர பயணங்களைக் கணக்கிட்டால் மிகப்பெரிய தொகையாக லட்சங்களில் சேமிக்கமுடிகிறது.
இதன்மூலம் கிடைக்கும் சேமிப்பைக் கொண்டு கூடுதல் மின்சார கார்களை வாங்கினேன். சொந்த உற்பத்தி யூனிட்டைத் திறந்தேன். இதில் எனக்கு ஆர்வம் அதிகமிருப்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மின்சார வாகனங்கள் பங்களிக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA