கிராமப்புற பெண்களின் கண்ணீர் துடைக்க என்விரோஃபிட் தயாரிக்கும் அடுப்புகள்!
மங்கலான சமையறையில், நெருப்பை உண்டு புகையை கக்கும் அடுப்பருகே அமர்ந்து தன் நுரையீரல் சேமித்து வைத்துள்ள மொத்தக் காற்றையும் கொண்டு வாய் குவித்து ஓயாமல் ஊதிக்கொண்டிருக்கும் பெண்களை இன்றும் நம் கிராமப்புறங்களில் காணலாம்.
சமீபத்தில் ஆற்றல் மற்றும் வளங்கள் மையம்(முன்பு டாடா ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விறகுகள் பயன்பாட்டில் கோவாவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா இருக்கிறது. கோவாவில் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 197 கிலோ விறகுகளை எரிபொருளாக பயன்படுத்துகிறது. கர்நாடகாவில் இந்த அளவு 195 கிலோவாக உள்ளது. தேசிய சராசரி அளவான 115 கிலோவை விட இது மிகவும் அதிகம்.
இந்த அளவிற்கு விறகுகளை பயன்படுத்துவதன் விளைவுகள் என்ன? தனிமனிதருக்கும் சரி, சுற்றுச்சூழலுக்கும் சரி இந்த நிலைமை மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கசப்பான உண்மை. முழுமையாக எரியாத இந்த எரிபொருட்கள் அதிகளவு கரியை வெளியேற்றுகின்றன. இதனால் உட்புற காற்று மாசுபடுவதோடு, பருவநிலைகளிலும் பாதிப்பு உண்டாகிறது.
இன்டோர் ஏர் பொலுயூஷன் எனப்படும் இந்த உட்புற காற்று மாசுபாடு உலகம் முழுவதிலும் ஆண்டுக்கு 4.3 மில்லியன் மக்களை பலிகொள்கிறது. இது எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய மூன்றினால் நிகழும் மரணங்களை விட அதிகம். இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் இந்த மாசுபாட்டினால் பலியாகிறார்கள். இன்னமும் 63 சதவீத மக்கள் அடுப்பெரிக்க விறகுகளையும், மாட்டுச்சாணத்தையும்தான் பயன்படுத்துவதால் வரும் வினை இது.
அதிகளவில் மண் அடுப்புகளை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர அரசும், சில தனியார் அமைப்புகளும் காலங்காலமாக முயன்று வருகின்றன. ஆனால் அத்தகைய அடுப்புகள் மக்களுக்கு பரிச்சயம் இல்லை என்பதால் அவர்கள் இவற்றை பயன்படுத்தத் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், எளிதாய் உடைந்துவிடும் தன்மை கொண்டவையாய் இருப்பதால் மண் அடுப்புகளை யாரும் விரும்புவதில்லை.
ஆனால் 2007ல் தொடங்கப்பட்ட 'என்விரோஃபிட்' (Envirofit) நிறுவனம் இந்த பிரச்சனையை வித்தியாசமாய் கையாள நினைத்தது. நீடித்து உழைக்கும் தன்மை, உறுதியான வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இவர்கள் தயாரித்த அடுப்புகள் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. இதன் மூலம் சந்தையில் ஒரு புரட்சியை நடத்திக்காட்டியது இந்த நிறுவனம்.
உட்புற காற்று மாசுபாடு பற்றி இந்நிறுவனம் சொல்வதை பாருங்கள்.
“இந்த நிறுவனத்திற்கென மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு நன்மை பயக்க வேண்டும். மாசுவை குறைக்கும் வகையில் அடுப்பை வடிவமைத்து பூமியை காப்பாற்ற வேண்டும். இந்நிறுவனத்தை நம்பியுள்ள அனைவருக்கும் லாபம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அந்த மூன்று நோக்கங்கள்” என்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் அஞ்சன். இந்நோக்கங்களை அடைய இவர்கள் கடைபிடிக்கும் வழி சுவாரசியமாய் இருக்கிறது. ஒரு சுத்தமான அடுப்பை வடிவமைத்து, தயாரித்து, விற்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் அதிகரிக்கச் செய்வதோடு சுற்றுப்புறச் சூழலையும் மேம்படுத்துகிறது. இந்நிறுவனம் கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலிருந்து இயங்குகிறது.
என்விரோஃபிட் வடிவமைக்கும் அடுப்புகள் சமைக்கும் நேரத்தை 50 சதவீதம் வரை குறைக்கிறது. புகை மற்றும் நச்சு வாயுக்கள் வெளியாவதை 80 சதவீதம் வரை குறைக்கிறது. எரிபொருள் செலவையும் 60 சதவீதம் வரை குறைக்கிறது. இதனால் விரைவாய் சமைக்க முடிவதோடு சமையலறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். விறகுக்காக காடுகள் அழிக்கப்படுவது குறையும்.
என்விரோஃபிட் வடிவமைத்துள்ள இந்த மனகாலா அடுப்புகளில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ராக்கெட் சேம்பர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எக்கினால் செய்யப்பட்ட இந்த அடுப்புகளின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை உலகம் முழுவதிலும் இவ்வகை அடுப்புகள் லட்சக்கணக்கில் விற்றுள்ளன.
2013ல் இவர்கள் அறிமுகப்படுத்திய பிசிஎஸ்-1( PCS 1) என்ற அடுப்பு சமையல் நேரத்தை வெகுவாக குறைப்பதோடு எரிபொருளையும் அதிகளவில் மிச்சப்படுத்துகிறது. யுஎஸ்பி (USP) என்ற மாடல் பிடிக்க இலகுவாய் இருப்பதோடு எடை குறைந்ததாகவும் இருக்கிறது. இந்த வகை அடுப்புகளில் அதிகளவில் காற்று உட்புகுந்து வர வசதி இருக்கிறது. மேலும் ஐந்தாண்டுகள் நீடித்த ஆயுளும் இருக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு சமைக்கும் வகையில் ஈஎப்ஐ-100எல் (EFI-100L) என்ற அடுப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்விரோஃபிட். இந்த 100 லட்டர் கொள்ளளவு கொண்ட அடுப்பில் 300 பேருக்கு சமைக்கலாம். 3,50000 வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்திற்கு இருக்கிறார்கள். இந்த ஏழு ஆண்டுகளில் 8,50000 அடுப்புகளை விற்றிருக்கிறது இந்த நிறுவனம்.
“இப்போது ஒவ்வொரு மாநிலமாய் எங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறோம். எங்கள் பார்ட்னர்ஷிப்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது. அரசு மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறோம்” என்கிறார் அஞ்சன்.
என்விரோஃபிட் இப்போது சீரான வேகத்தில் வளர்ந்துவருகிறது. இன்னும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர முடியும் என நம்புகிறார்கள் இந்நிறுவனத்தினர். “புதிது புதிதான யோசனைகள், வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ள நற்பெயர் ஆகியவற்றின் உதவியோடு இன்னும் சில ஆண்டுகளில் ஒரு மில்லியன் அடுப்புகள் விற்றுவிட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறோம்” என பெருமையாய் சொல்கிறார் அஞ்சன்.
இணையதள முகவரி: Envirofit