சட்டை கசங்காமல் ஆபிஸ் போக உதவும் சிட்டிஃப்ளோ!
சிட்டிஃப்ளோ(Cityflo) என்ற இந்த நிறுவனத்தின் உதவியால் மும்பையில் அலுவலகம் செல்லும் மக்கள் அரசு போக்குவரத்தில் வியர்க்க, விறுவிறுக்க, சட்டை கசங்கி அலுவலகத்திற்கு செல்லும் அவஸ்தையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள்.
மும்பை ஐ.ஐ.டியில் படித்துவிட்டு எர்ன்ஸ்ட் அண்ட் யங்(Ernst & Young) நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெரின் வேனாட் அன்றாடம் இப்படி கசங்கிப் போய் அலுவலகம் வர அலுத்துக் கொள்ளும் சக ஊழியர்களை பார்த்து பரிதாபம் கொண்டார்.
“தினமும் அலுவலகம் செல்ல பயணம் செய்வது லட்சக்கணக்கான பேருக்கு அவஸ்தையான ஒன்றாகத்தான் இருக்கிறது. எனக்கும் அலுவலகம் செல்ல இரண்டு மணிநேரமாகும். மாலை இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தால் தூங்கத்தான் தோன்றும். மறுநாள் மீண்டும் நான்கு மணிநேரப் பயணம். என்னைச் சுற்றி இருந்த எல்லாருடைய நிலைமையும் இதுவாகத்தான் இருந்தது” என்கிறார் ஜெரின்.
இதிலிருந்து தப்பிக்க டாக்ஸியில் செல்லலாம். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை டாக்ஸியில் செல்வதற்கு செலவு நிறையவே ஆகும். ஆனாலும் நிறைய பேர் வேறு வழியில்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். இதன் அடிப்படை பொருளாதாரம் ஜெரினுக்கும் அவரது சக ஐ.ஐ.டி நண்பர்களுக்கும் புரிய அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நாம் ஏன் மினி ஏ.சி பேருந்துகளை டாக்ஸிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடாது?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெரின் தன் வேலையை துறந்துவிட்டு இந்த ஐடியாவை மெருகேற்ற தொடங்கினார். உடனே தன்னைப் போலவே அலுவலகம் செல்ல சிரமப்படும் பலதரப்பட்ட ஊழியர்களை சந்தித்து பேசினார். அனைவருக்குமே இந்த ஐடியா பிடித்திருந்தது.
இந்த ஐடியா கண்டிப்பாய் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகரிக்க, கடந்த மாதம் சிட்டிஃப்ளோ நிறுவனத்தை தொடங்கினார்கள் ஜெரின், அங்கித் அகர்வால், சுபாஷ் சுந்தரவடிவேலு, ரூஷப் ஷா, அத்வைத் விஸ்வநாத், சங்கல்ப் கெல்ஷிகர் ஆகிய இளைஞர்கள்.
ஹவுசிங்.காம்(Housing.com) இணையதளத்தைத் தொடங்கிய அத்வித்தியா சர்மாதான் இந்த இளைஞர்களை வழிநடத்துகிறார். ஹேண்டி ஹோம்(HandyHome) என்ற நிறுவனத்தை அடுத்து அத்வித்தியா வழிநடத்தும் இரண்டாவது நிறுவனம் இது.
“ரியல் எஸ்டேட் துறையைப் போலவே பஸ் பயணங்களிலும் எல்லாருக்கும் பொதுவான பிரச்னைகள்தான் நிலவுகின்றன. இந்த குறிப்பிட்ட துறையில் நீண்ட காலமாக எந்த முன்னேற்றமும் இல்லை என்ற விஷயம்தான் என்னை மிகவும் ஈர்த்தது” என்கிறார் அத்வித்தியா.
சிட்டிஃப்ளோ, மும்பையின் முக்கிய இடங்களை பத்து வழித்தடங்களில் இணைக்கிறது. மேற்கு புறநகர் பகுதிகளான மிரா பா யண்டர், பொரிவாலி, கண்டிவாலி, கிழக்கு புறநகர் பகுதிகளான தானே, முலுண்ட், வாஷி, கோப்பர் கைரானே போன்ற நவி மும்பை பகுதிகள், பாந்த்ரா என மும்பை முழுக்க திரிகின்றன சிட்டிஃப்ளோவின் பேருந்துகள். இப்போது அந்தேரிக்கும் பேருந்துகள் விடத் தொடங்கியுள்ளது இந்த நிறுவனம்.
இதற்கு முன் இப்படி ஒரு ஐடியாவை யாரும் முயற்சித்துப் பார்த்ததில்லை. பின் எப்படி இவர்கள் இந்த வழித்தடங்களை தீர்மானித்தார்கள்?
“கூகுள் மேப்ஸ் உதவியோடு ட்ராபிக் அதிகம் இருக்கும் வழித்தடங்கள் பற்றி அறிந்துகொண்டோம். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள், அலுவலகங்கள் நிறைந்துள்ள இடங்கள் ஆகியவற்றையும் பட்டியலிட்டோம். எங்கெல்லாம் எங்களது சேவை அதிகம் தேவைப்படும் என கூர்ந்து கவனித்தோம். எங்களது செயலியை தரவிறக்கம் செய்த வாடிக்கையாளர்களிடமும் கருத்துகள் கேட்டோம். வழித்தடங்கள் பற்றிய தெளிவு கிடைத்தது” என்கிறார் ஜெரின்.
சிட்டிஃப்ளோவின் செயல்முறை
சிட்டிஃப்ளோவின் செயல்முறை பற்றி ஜெரின் நம்மிடம் விளக்கும்போது ரெட்பஸ் நிறுவனத்தின் பனிந்திர சர்மா பின்பற்றிய செயல்முறை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவைதான்.
ரெட்பஸ்ஸை போல இங்கேயும் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். அதுவும் மூன்று எளிய நிலைகளில். எந்த வழித்தடம்? என்ன நேரத்தில்? போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்துவிட வேண்டியதுதான். அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக சமீபத்திய பயணம் என்ற ஆப்ஷனும் இருக்கிறது.
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கென பிரத்யேக வழித்தடங்கள் எதுவும் மும்பையில் இல்லை. நிறைய அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கான பேருந்துகளை தாங்களே இயக்கிக்கொள்கின்றன. இதனால் சிட்டிஃப்ளோ இத்தகைய பேருந்து உரிமையாளர்களை கண்டுகொண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
இப்போது வரை பத்து பேருந்து உரிமையாளர்கள் இவர்களோடு இணைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வாராவாரம் அதிகரிக்கும் என்கிறார் ஜெரின்.
ஆன்லைனில் சிட்டிஃப்ளோ
இந்திய சுற்றுலாத்துறையின் மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 10.2 சதவீதம் அளவிற்கு இதன் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்படுகிறது. ஆன்லைன் டிராவல் ஏஜென்ட்கள் இதில் 17.5 சதவீத பதிவுகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள்.
சிட்டிஃப்ளோவும் ரெட்பஸ், க்ளியர்ட்ரிப் (cleartrip), மேக்மைட்ரிப்(Makemytrip) நிறுவனங்களை போன்று ஆன்லைன் டிராவல் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. ஆனால் இதன் வட்டம் ஒரே ஒரு நகரம் என்ற அளவில்தான் இருக்கிறது. இதேபோல் குறுகிய தூர பயண நிறுவனங்களாக மும்பையைச் சேர்ந்த ஆர்பஸ்(rBus), குர்கானைச் சேர்ந்த ஷட்டில்(shuttl ), ஜிப்கோ(Zipgo) சமீபத்தில் ஓலா ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ஒரு கிலோமீட்டருக்கு மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது சிட்டிஃப்ளோ. சராசரி கட்டணம் ஒரு ஆளுக்கு 60 ரூபாய். அரசு போக்குவரத்து பேருந்துகளிலும் இதே அளவு கட்டணம்தான். தினமும் சராசரியாக 1800 இருக்கைகள் பதிவாகின்றன.
தங்களது நிறுவனத்தின் முதல்கட்ட முதலீடுகள் தற்போதுதான் முடிந்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக இன்னும் அதிகளவு முதலீடுகளை ஆர்வமாக எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார் ஜெரின்.