சுவைமிகு திருநெல்வேலி அல்வா-வை உலகெங்கும் ஆன்லைன் மூலம் எடுத்துச் செல்லும் இளைஞர்!
சென்னையில் நடைப்பெற்ற சில்லறை வியாபார தொழில்முனைவர் கூட்டம் ஒன்றில் தங்களது முதல் கடையை அமைத்து, அல்வா விற்பனை செய்தனர் மாணவர்கள். அந்த கடையில் அவர்கள் விற்பனை செய்த அல்வா அனைவரிடத்திலும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர்கள் குழுவிற்கு ’இன்டிஜுவல் மார்க்கெட்டர் விருது’ (individual marketer award) கிடைத்தது.
”மேலும் நாங்கள் அளித்த அல்வாவை சாப்பிட்டவர்கள் அசல் பாரம்பரிய அல்வா சுவை போல் உள்ளது என்று எங்களை பாராட்டியது, மறக்க முடியாத அனுபவம்,” என்று விவரித்தார் மோசஸ் தர்மபாலன்.
’அல்வா கடை.காம்’ எங்கள் குழுவின் கடின உழைப்பால் உருவானது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த கையோடு இதை உருவாக்கினார் தர்மபாலன். அந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்துவிட போகிறோம் என்று அனைவரும் எங்களை விமர்சித்ததை மறக்க முடியவில்லை. இருந்தாலும் எங்கள் தயாரிப்பு மீதும் எங்கள் வாடிக்கையாளர்கள் மீதும் நாங்கள் வைத்து இருந்த நம்பிக்கை எங்களை ஏமாற்றவில்லை.
”நாங்கள் தயாரிக்கும் அல்வாவில் அசல் திருநெல்வேலி அல்வாவில் இருக்கும் அனைத்து பொருட்களும் சேர்த்திருக்கிறோம். இது எங்களின் வெற்றியின் தொடக்கம் மட்டுமே,” என்றார் தர்மபாலன்.
ஏன் அல்வா கடை?
சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மோசஸ் தர்மபாலன், கோடை விடுமுறைக்கும், செமஸ்டர் விடுமுறைக்கும் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விடுவது வழக்கம். ஒவ்வொரு முறை அங்கு சென்று வரும்போதும் தன்னுடன் பயிலும் சக நண்பர்கள் ஊரிலிருந்து அல்வா வாங்கி வரச் சொல்வார்கள், வாங்கி வரவில்லை என்றால் தன் மேல் கடும் கோபம் கொள்வார்கள் என்று பகிர்ந்தார்.
அந்தளவிற்கு நகர வாசிகள் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இந்த சம்பவம் தான் என்னை அல்வாவை கொள்முதல் செய்து விற்பனை செய்ய காரணமாக இருந்தது, என்றார் தர்மபாலன். அப்படி செப்டம்பர் 2014-ல் உருவானதே Halwakadai.com
நாங்கள் அல்வாவை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது முதல் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டே போனார்கள். மேலும் சமூக ஊடகத்திலும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
80,000 மேற்பட்ட வாடிக்கையாளர்களை அல்வா கடை இன்று பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்களிடம் அல்வா ஆர்டர் செய்த 24 மணிநேரத்தில் அவர்களிடம் போய் சென்று விடுகிறது. இது எங்களுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
நாள் ஒன்றுக்கு 300கிலோ அல்வா இவர்கள் தயாரிக்கின்றனர். காலம்காலமாக அல்வா தயாரிப்பவர்கள் தயாரித்து திருநெல்வேலில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அமெரிக்கா, மலேசியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும் சென்னையில் ஆறு கிளைகளை அல்வா கடை அமைத்து உள்ளது.
“இந்தியா முழுவதும் அல்வா கடை கிளைகளை திறக்க வேண்டும் என்பதே எங்களின் கனவு,” என்றார் தர்மபாலன்.