தன் படிப்பைத் தொடர 19 வயதில் உபெர் ட்ரைவராகி சம்பாத்திக்கும் கோமல்!
‘ஒன்றை நீங்கள் பெற வேண்டும் என்று முழுமனதோடு முடிவெடுத்துவிட்டால், நீங்கள் செய்யும் எல்லா காரியமும் அதை பெற்றிடும் பொருட்டு உங்களை அந்த வழியில் கொண்டு செல்லும்.’
‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் ஷாருக்கான்; ‘உண்மையிலேயே ஒன்றை நீங்கள் பெற வேண்டும் என்று முழுமனதோடு முடிவெடுத்துவிட்டால், நீங்கள் செய்யும் எல்லா காரியமும் அதை பெற்றிடும் பொருட்டு உங்களை அந்த வழியில் கொண்டு செல்லும்,’ என்று சொல்வார்.
ஆனால் ஒன்றை நினைத்தால் மட்டும் அதைப் பெற்று விடமுடியாது, அதற்கான முழு முயற்சியும், உழைப்பும் இருந்தால் மட்டுமே அது உங்கள் வசப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நம்மில் பலர் ஒரு சிக்கலோ அல்லது தடங்களோ ஏதாவது ஒன்று வந்துவிட்டால் அந்த இலக்கை அடைவதிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறோம். வசதிகள் போதவில்லை என்ற சாக்குகளுடன் அந்த இலக்கை அடையாமலேயே விட்டு விடுகிறோம். ஆனால் 19 வயது கோமல் அவர்களில் ஒருவரல்ல. கோமலின் கதை ஒவ்வொருவருக்கும் ஒரு உதாரணம் அதிலும் குறிப்பாக வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்மணிக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக்கூடியதாகும்.
கோமலின் உத்வேகக் கதை
19 வயதான கோமல், 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது பள்ளிப் படிப்பை முடிக்க கடந்த ஒரு வருடமாக உபெர் கேப் ஓட்டுகிறார். அதிலிருந்து சம்பாதிக்கும் பணத்தில், அவள் படிப்பை முடிப்பதில் ஆர்வமாக உள்ளார்.
கோமலுடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த அண்ணன்கள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். அவருடைய அப்பாவிற்கு பெண் பிள்ளை கல்வி பயில்வதில் விருப்பமில்லை. அதன் காரணத்தால் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டார். ஆனால் கோமலுக்கு அவள் படிப்பை கட்டாயம் தொடரவேண்டும் என்ற பேரார்வம் இருந்துகொண்டே இருந்தது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவர் கேப் ஓட்டுவதை தொடங்கினார் மற்றும் படிப்பையும் மறுபடி தொடங்கியுள்ளார்.
இப்படித்தான் கோமலின் கதை உலகிற்குத் தெரிய வந்தது. ஒலிவியா தேகா என்ற முகநூல் பயனர் ஒருவர், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில்,
‘நான் சாகேட் ஏரியாவிலுருந்து குர்கானிற்கு ஒரு கேப் புக் செய்தேன், அது ஒரு அற்புதமான பயணம், ஏனென்றால் அந்த கேப்-ஐ ஓட்டியது பெரியக்கனவுகளுடன் கூடிய ஒரு அழகிய சிறுமி’
டாக்சியில் செல்லும் போது கோமலுடன், ஒலிவியா உரையாடிக்கொண்டே சென்ற அப்பயணத்தில், இருவரும் நிறைய பேசியிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியை தன் போஸ்டில் அவர் பதிவிட்டிருந்தார்.
“இன்னும் நான் கல்லூரி செல்லவேண்டும், மற்றும் நான் வாழ்வில் சாதிப்பதற்கு நிறைய உள்ளது. ஆனால் என் அப்பா நான் படிப்பதையோ அல்லது இந்த கேப் ஓட்டுவதையோ விரும்பவில்லை, ஆனால் நான் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது,” என்று கோமல் கூறியுள்ளார்.
இப்பதிவிற்கு கோமலுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது, மற்றும் கோமலின் நியாயமான ஆசைக்கு மக்கள் அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
போஸ்டின் இறுதியில், “கோமலுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்ய நான் விரும்புகிறேன. நானும் அவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டோம். இப்போது நான் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன்,” என்று ஒலிவியா எழுதி போட்டோவை பதிவிட்டார்.
ஒலிவியா இந்த போஸ்ட்டை ஷேர் செய்த பிறகு அது பயங்கர வைரலாகியது. முகநூல் பயனர்கள் அந்த போஸ்ட்டிற்கு 18 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ரியாக்ஷன்ஸ்களை தெரிவித்தனர். மற்றும் இது 7,500 முறை ஷேர் செய்யப்பட்டும் உள்ளது.
கமெண்ட்களில் கோமலின் பேரார்வத்திற்கு மக்கள் சல்யூட் செய்துள்ளனர். இலக்கை அடையத் துடிக்கும் மற்ற பெண்களுக்கு கோமலுடைய வாழ்கை ஒரு உதாரணமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்தனர். அதேசமயத்தில் கோமலின் வாழ்க்கையை உலகிற்கு தெரியப்படுத்தியதற்கு ஒலிவியாவிற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.