11 பெண் துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து 250 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரிக்கு விழுந்த 10 கோடி பரிசு!
கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் ஒன்றாக இணைந்து 250 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் ஒன்றாக இணைந்து 250 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
லாட்டரியில் எதிர்பாராமல் கோடிகளில் பரிசு விழுந்து ஒரே நாளில் ஓஹோ... என கோடீஸ்வரரான தனி நபர்கள் பற்றிய கதைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கேரளாவில் ஒரு நம்பமுடியாத அதிசயம் நடந்துள்ளது.
ஆம், லாட்டரியில் விழுந்த ஜாக்பாட்டால் 11 பெண்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.
ரூ.250-க்கு வாங்கப்பட்ட லாட்டரி:
பரப்பனங்காடி பேரூராட்சிக்குட்பட்ட பசுமைப் படையான ஹரித கர்ம சேனாவைச் சேர்ந்த 11 பெண்கள் லாட்டரி சீட்டு வாங்குவதற்காக தங்களுக்குள் பணம் சேகரித்து, ரூ.250-க்கு வாங்கிய லாட்டரியில் 10 கோடி ரூபாயை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்கடியில் உள்ள துப்புரவுப் பணியாளர் ராதா, 10 கோடி ரூபாய் ரொக்கப் பரிசாகக் கிடைக்கும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டை வாங்கலாமா? என தனது சக ஊழியர்களிடம் யோசனை கேட்டுள்ளார்.
சரி நமது அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்பதை தான் சோதித்து பார்ப்போமே? என முடிவெடுத்த 11 பெண்களும், தங்களுக்குள்ளாகவே பணத்தை பகிர்ந்து 250 ரூபாய் மதிப்புள்ள பம்பர் சிறப்பு லாட்டரியை வாங்க முடிவெடுத்தனர்.
இதற்காக 11 பேரில் 9 பேர் தலா 25 ரூபாயையும், இருவர் தலா 12 ரூபாய் 50 காசுகளையும் பகிர்ந்து கொண்டனர். சிலரிடம் அது கூட இல்லாததால் சக ஊழியர்களிடம் கடன் வாங்கி லாட்டரி ஏஜெண்டிடம் ரூ.250 கொடுத்து டிக்கெட் வாங்கினார்கள்.
ரூ.10 கோடி ஜாக்பாட்:
லாட்டரியை வாங்கிய கையோடு, மீண்டும் தங்களது துப்புரவு பணிக்கு திரும்பிய பெண்களுக்கு ஜூலை 27ம் தேதி வந்த போன் கால் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
ஆம், லாட்டரி சீட்டை விற்பனை செய்த ஏஜெண்ட் போன் செய்து, பெண் குழு வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு பெண்கள் குழு உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடி போனது.

பெண்கள் குழுவில் லாட்டரி வாங்க ரூ.12.50 செலுத்திய நபர்களில் ஒருவரான பேபி என்பவர் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,
“எனக்கு சம்பளம் கிடைக்கும் போது தான் என்னிடம் பணம் இருக்கும். எனவே உறவுக்கார பெண்மணியும், சக ஊழியருமான குட்டிமாலு தான் எனக்கும் சேர்த்து 25 ரூபாயை கொடுத்தார். அந்த கடனை கூட இதுவரை நான் திரும்ப செலுத்தவில்லை. விரைவில் அதை திரும்ப செலுத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்திய பிறகு, பெண்களுக்கு தலா ரூ.63.6 லட்சம் கிடைக்கும். என்ன தான் லாட்டரியால் லட்சாதிபதி ஆனாலும், பரப்பனங்காடியை தூய்மையாக்க பாடுபடுவோம் என்கிறார்கள்.
“மலப்புரத்தில் நாங்கள் தூய்மையான நகராட்சியாக உள்ளோம், அந்த அந்தஸ்தை தக்கவைக்க தொடர்ந்து பணிகளை செய்வோம். எங்களைப் போன்ற நிலையில் உள்ள மற்றவர்களும் இதுபோல் லாட்டரியை வெல்ல வேண்டும் என விரும்புகிறோம்.”
லாட்டரி மூலம் லட்சங்களை வென்றிருந்தாலும் இங்கு ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு போராட்ட கதை உள்ளது. ஒருவர் சமீபத்தில் தனது மகளை இழந்த வேதனையில் இருக்கிறார். இரு பெண்கள் நோய்வாய்ப்பட்டு இப்போது தான் மெல்ல, மெல்ல குணமடைந்து வருகின்றனர்.

ஒருவர் அரும்பாடுபட்டு தனது வீட்டை சீரமைத்து வருவதாகக் கூறியுள்ளார். இந்த மாதிரியான நெருக்கடி நிலையில், அவர்களுக்கு கிடைக்க உள்ள பரிசுத்தொகை வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பரப்பனங்காடி பேரூராட்சித் தலைவர் உஸ்மான் அளித்த பேட்டியில்,
“பரப்பனங்காடியை தூய்மையாக வைத்திருப்பதில் முன்னணியில் நிற்கும் ஹரித கர்ம சேனாவைச் சேர்ந்த 11 பெண் பணியாளர்கள் தற்போது ரூ.10 கோடி லாட்டரியை வென்றுள்ளனர். அவர்கள் இங்கு பணிபுரியும் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுக்களில் ஒன்று. மேலும், அவர்கள் லாட்டரியை வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லாட்டரி அடித்தாலும், இங்கு பணியை நிறுத்த மாட்டோம் என்று கூறியது அவர்களின் அர்ப்பணிப்பின் அடையாளம்,” என்கிறார்.
பெண்கள் குழுவால் வாங்கப்பட்ட நான்காவது பம்பர் லாட்டரி சீட்டு இதுவாகும். கடந்த ஆண்டு பெண்கள் குழுவால் வாங்கப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி ஒன்று 1000 ரூபாய் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - நியூஸ் மினிட்ஸ்

‘2 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ்; 3 மணிக்கு ஜாக்பாட’ - மீன் வியாபாரி வாழ்வை மாற்றிய லாட்டரி சீட்டு!