Women's Day Special | திரைத் துறையில் 13 ஆண்டுகள் - ‘உத்வேக’ சமந்தா பற்றிய 13 குறிப்புகள்
இந்திய சினிமாவில் சமந்தா தடம் பதித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது திரைப் பயணத்துடன் பர்சனல் பக்கங்களையும் உள்ளடக்கிய உத்வேகக் குறிப்புகள்.
இந்திய சினிமாவில் சமந்தா தடம் பதித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது திரைப் பயணம் என்பது எந்தத் துறையைச் சேர்ந்த பெண்களுக்கும் உத்வேகமூட்டும் இன்ஸ்பிரேஷனான ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. அவர் குறித்து அறிய வேண்டிய 13 தகவல்கள் இங்கே...
சமந்தாவின் சொந்த ஊர் சென்னை - பல்லாவரம். தமிழில் சரளமாகப் பேசக் கூடியவர். மாடலிங்கில் கால் பதித்து, ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர். அந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகத் தாமதமாக, அதை முந்திக்கொண்டு 2010-ல் வெளிவந்தது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாயா சேஸவே’ என்ற படத்தில் ஜெஸ்ஸியாக வந்தவர், தமிழ்ப் பதிப்பில் நந்தினி எனும் சின்ன கதாபாத்திரத்தில் தோன்றினார். பின்னர் ‘பானா காத்தாடி’ மூலம் தமிழில் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.

தெலுங்கிலும் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைக்க, ஹைதராபாத் நகரில் வசிக்க ஆரம்பித்தார். சென்னையும் தமிழும் வெகுவாகப் பிடிக்கும் என்றாலும், தன்னை தொழில் ரீதியில் அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல உதவி வகையில் ஹைதராபாத் தான் அவரது ஃபேவரிட். எந்தச் சூழலில் அந்நகரை விட்டு வெளியே வசிப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பவர்.
‘பிருந்தாவனம்’, ‘தூகுடு’ ‘ஈகா’ என தெலுங்கிலும், தமிழில் ‘நான் ஈ’, ‘நீதான என் பொன் வசந்தம்’ என ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ரெண்டிலும் சம்ந்தாவின் கிராஃப் எகிறியது. தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார். இந்த விஷயத்தில் எப்போதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என வரிசையாக விஜய் படங்களில் முக்கியத்துவத்துடன் கூடிய ஹீரோயினாக தமிழில் வலம் வந்தது, அவரது கரியருக்கு உறுதுணையாக அமைந்தது.
ஒரு படத்தில் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பவர் அல்ல சமந்தா. உறுதுணைக் கதாபாத்திரமாக இருந்தாலும், வலுவானதாக இருப்பின் தயாங்காமல் நடிக்கும் கலைஞர். இதற்குச் சான்று ‘நடிகையர் திலகம்’. தன் பேரழகால் கட்டிப் போடுவது மட்டுமின்றி, எவரும் எளிதில் ஏற்று நடிக்க தயங்கும் துணிச்சலான கதாபாத்திரங்கள் அலட்சியமாக அணுகி அசத்துவது இவரது தனி பாணி. இதற்கு, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் போன்றவை உதாரணங்கள். அதேபோல், ரசிகர்களை மகிழ்விக்க ஒற்றைப் பாடலுக்கு கூட நடனமாடிச் செல்லத் தயங்காதவர். அதில் அவருக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு, ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊ சொல்றியா’ பாடல்.

‘சூப்பர் டீலக்ஸ்’, ‘யூ-டர்ன்’, ‘Oh! Baby’ முதலான படங்களில் இவரது நடிப்புத் திறனுக்கு தீனி போடுவையாக அமைந்தவை. இப்படங்களில் நொடிக்கு நொடி பாவனைகளை மாற்றி பரவசப்படுத்துவார் சமந்தா. தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4, சாம் ஜாம் டாக் ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தன்னை ஒரு பல்கலை வித்தகராகப் பறைசாற்றி தனது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்தியவர்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவான முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். சமூகப் பிரச்சினைகளுக்கும், ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் ட்விட்டரில் துணிச்சலாகக் குரல் கொடுப்பவரும் கூட. ஒருமுறை தனது உடை குறித்த சர்ச்சை எழுந்தபோது சமூக வலைதளத்தில் சமந்தா தந்த நெத்தியடி பதில்:
“முன்முடிவோடு மனிதர்களை அணுகுவது என்றால் என்ன என்பதை ஒரு பெண்ணாக நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். பெண்கள் அணியும் உடை, இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு அவர்களை மதிப்பீடு செய்வது நீண்டுகொண்டே உள்ளது. ஒரு நபர் அணியும் ஆடைகளின் அடிப்படையில் அவரைப் பற்றி தீர்மானிப்பது எளிதான காரியமாக மாறியுள்ளது. ஒரு பெண்ணை அவரின் அலங்கார பொருட்களை கொண்டு மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமா? நம் லட்சியங்களை வேறொருவர் மீது முன்வைப்பது யாருக்கும் எந்த நன்மையையும் செய்யவில்லை. ஒரு நபரை நாம் அளவிடும், புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றுவோம்.”
தன் (பெண்) குறித்த வதந்திகளுக்கான சமந்தாவின் விளாசல் இது: “ஒரு பெண்ணைப் பற்றிய வதந்தி என்றால் உண்மை என நம்புகின்றனர். அதுவே, ஆணைப் பற்றி வதந்தி வந்தால், அதை பெண்தான் பரப்புகிறார் என்று கூறுகிறீர்கள். முதிர்ச்சியுடன் நடந்துகொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சமந்தப்பட்டவர்கள் இருவரும் பிரிந்து சென்று அடுத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அதிலிருந்து நகர்ந்து, உங்கள் வேலை, குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.”
மண வாழ்க்கையில் நுழைந்தபோதும் சரி, மணமுறிவுக்குப் பின்னரும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையால் தன் கரியரில் எந்த சரிவும் ஏற்படாதவாறு கவனித்துக் கொண்டார். இதுவே, சமந்தாவின் தொழில் - வேலை மீதான அர்ப்பணிப்புக்குச் சான்று.

சேவைகள் புரிவதிலும் என்றும் நாட்டம் கொண்டவர். சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தொட்டபோது அவர் இட்ட பதிவு இது...
“ஆஹா, 10 மில்லியன்டி..! நடாலி போர்ட்மேன் செய்ததைப் போல நானும் எனது பெரிய 10 மில்லியன் குடும்பத்தைக் கௌரவிக்கும் விதமாக அற்புதமான 10 தன்னார்வ அமைப்புகளுக்கு நன்கொடை அளித்துள்ளேன். அனைவருக்கு என் அன்பு.”
தனிப்பட்ட வாழ்க்கையில் சில பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்தவருக்குப் பேரிடியாக அமைந்தது அவரது ஹெல்த் பிரச்னை. தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வரும் அவர், வெப் தொடரான ‘சிட்டாடல்’, ‘குஷி’ படத்தில் நடித்து உத்வேகத்துக்கு உதாரணமாகத் திகழ்கிறார்.
சோஷியல் மீடியா மூலம் தனது ரசிகர்களிடம் நேரடித் தொடர்பில் இருப்பதில் விரும்புபவர். தனக்கு என்ன நேர்ந்தாலும், அதை உடனுக்குடன் தனது ரசிகர்களிடம் ஓப்பனாக பகிர்பவர். இப்படித்தான் தன் திருமணம், மணமுறிவு தொடங்கி தனக்குச் சிறிய காயம் என்றாலும்கூட பகிர்வார். தனது 13 ஆண்டு கால திரைப் பயணத்தின் நிறைவை ஒட்டி சமந்தா பகிர்ந்த போஸ்ட் இது...
“நான் இந்த அன்பை உணர்கிறேன். அதுதான் என்னைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போது மட்டுமல்ல, எப்போதும் நான் என்னவாக இருக்கிறேனோ, அது ரசிகர்களாகிய உங்களால்தான். திரைத் துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்...”.
இதுதான் நம் சமந்தா!