சென்னை மாநகராட்சியின் அடையளமாக மாறிய இளம் முகங்கள்: பிரியதர்ஷினி, நிலவரசி, பரிதி இளம் சுருதி பற்றி இதோ!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி படிக்கும் மாணவிகளும், பட்டதாரி இளம் பெண்களும் தேர்தலில் முதல் முறையாக களம் கண்டு வெற்றி வாகைசூடியுள்ளனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கல்லூரி படிக்கும் மாணவிகளும், பட்டதாரி இளம் பெண்களும் தேர்தலில் முதல் முறையாக களம் கண்டு வெற்றி வாகைசூடியுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து கடந்த 22 அன்று தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வழக்கமான உள்ளாட்சித் தேர்தல் போல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான நீயா? நானா? போட்டியாக மட்டும் இல்லாமல், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பலதரப்பட்ட வேட்பாளர்களும் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தனர்.
திருநங்கை, மாற்றுத்திறனாளிகள், பட்டதாரிகள், முதல் முறையாக தேர்தலில் நின்ற இளைஞர்கள் ஆகியோர் வெற்றி வாகைசூடியதை பார்த்தோம். மாமியார் - மருமகள், கணவன் - மனைவி, அம்மா - மகன், ஒரே ஊரில் அப்பா, மகன், மகள் என அசத்தலான குடும்ப காம்போ வெற்றிகளும் அரங்கேறியது.
அதிமுக, திமுக என மாறி, மாறி வாக்களித்து வந்த மக்கள் இந்த முறை அதிக அளவில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினர். குறிப்பாக கல்லூரி படிக்கும் மாணவிகளும், பட்டதாரி இளம் பெண்களும் தேர்தலில் முதல் முறையாக களம் கண்டு வெற்றி வாகைசூடினர். இந்தப் பட்டியலில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஒருவர் இளம் வயதிலேயே கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னையின் இளம் கவுன்சிலர்கள்:
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பிரியதர்ஷினி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 98 ஆவது வார்டில் சி.பி.எம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 21 வயதான பிரியதர்ஷினி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, இளம் வயது வெற்றியாளராக இந்த தேர்தலில் மிளிர்ந்துள்ளார்.
மத்திய சென்னைக்குட்பட்ட 98வது வார்டில் போட்டியிட்ட பிரியதர்ஷினி 8 ஆயிரத்து 695 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். அதேசமயம் பிரியதர்ஷினியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 3,408 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தான் வெற்றி பெற்றுள்ள 98வது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்ற உறுதி ஏற்றுள்ள பிரியதர்ஷினி,
"குடியிருப்பு மக்களின் பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதில் எனது கவனம் இருக்கும்,” என உறுதியளித்துள்ளார்.
சிபிஎம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஜி செல்வா, கூறுகையில், DYFI உறுப்பினரான பிரியதர்ஷினி, தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யவில்லை. நிச்சயம் அவர் மாற்றத்திற்கான முகமாக இருப்பார். ஒரு அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களிடையே அதிகம் உச்சரிக்கப்படும் மற்றொரு இளம் வேட்பாளர் பெயர் நிலவரசி துரைராஜ். கோடம்பாக்கம் 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதே ஆன நிலவரசி துரைராஜ் முதல் முயற்சியிலேயே வெற்றி வாகை சூடியுள்ளார். முன்னாள் கவுன்சிலர் குணசேகரனின் மனைவியும், அதிமுக வேட்பாளருமான லட்சுமி கோவிந்தசாமி ஒருபுறம், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களமிறங்கிய அறிவுச்செல்வி மற்றொருபுறம் என போட்டா போட்டி போட்ட நிலையில், இருவரையும் பின்னுக்குத்தள்ளியுள்ளார்.
நிலவரசி துரைராஜ் இந்த தேர்தலில் 7222 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அறிவுச் செல்வி 5112 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
திமுகவைச் சேர்ந்த தனது தந்தையை பார்த்து வளர்ந்த நிலவரசி துரைராஜ்,
"எனது தந்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை மூலமாக விளையாட்டில் சிறந்து விளக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்தும், பிற சமூக சேவைகளையும் செய்து வருவதை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். நான் அதை முன்னெடுத்துச் செல்ல முடியும், மேலும், பலவற்றைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். எனது வார்டில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இளம் ஆண் கவுன்சிலராக தேர்வாகியுள்ளார் பரிதி இளம் சுருதி. சென்னை மாநகராட்சியின் 99ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிதி இளம் சுருதி 4000 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தோற்கடித்துள்ளார்.
"என் அம்மா உதயகுமாரி வேலைக்கு செல்லும் படி கட்டாயப்படுத்தாமல், அரசியலில் கவனம் செலுத்த அனுமதித்த உதவியாக இருந்தது. 2011 முதல் பல வார்டுகள் மற்றும் தொகுதிகளில் பணியாற்றினேன். இறுதியாக கட்சி எனது பணியை அங்கீகரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்ல சென்னையில் 42வது வார்டில் ரேணுகா (22) வார்டு எண் 70-ல் ஸ்ரீதனி(29) ஆகியோரும் இளம் கவுன்சிலர்களாக வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.