யார் இந்த மாயா டாடா? - ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு இவரைப் பற்றி ஏன் அதிகம் பேசப்படுகிறது?
டாடா குழுமத்தின் அடுத்த தலைமைத்துவத்துக்காக 3 பெயர்கள் அடிபட்டு வருகின்றன. மாயா டாடா, லியா டாடா மற்றும் நெவில் டாடா. அவர்களில், மாயா டாடா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்களில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார்.
அக்டோபர் 9, 2024 அன்று ரத்தன் டாடா காலமானதால், டாடாவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவரது சட்டப்பூர்வ வாரிசு குறித்த விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்திய மக்களின் மிகவும் பிரியமான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் அக்டோபர் 9-ம் தேதி காலமானதையடுத்து தொழில் சமூகம் மட்டுமல்லாது நாடே சோகத்தில் ஆழ்ந்தது. இரக்கம், பரோபகாரம் மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் மாண்பு ஆகியவற்றிற்கு சான்றாக, ஆகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார் ரத்தன் டாடா.
அவர் வளர்த்தெடுத்த விழுமியங்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் டாடா குழுமத்தின் எதிர்காலத் தலைமையை நோக்கி இப்போது கவனம் திரும்பியுள்ளது. டாடா குழுமத்தின் அடுத்த தலைமைத்துவத்துக்காக 3 பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
மாயா டாடா, லியா டாடா மற்றும் நெவில் டாடா. அவர்களில், மாயா டாடா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்களில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார்.
மாயா டாடா யார்?
மாயா டாடா ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மகள். இவரது பெற்றோர் ஆலு மிஸ்ட்ரி-நோயல் டாடா தம்பதியாவர். இப்போது மாயா டாடாவுக்கு வயது 34. வார்விக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேயெஸ் பிசினஸ் ஸ்கூலில் படித்து வர்த்தகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். முதலில் டாடா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தார்.
இதில் போர்ட்போலியோ மேலாண்மை, மற்றும் முதலீட்டாளர் போன்ற துறைகளில் திறமைகளை வளர்த்தெடுத்துக் கொண்டார். அவரது மறைந்த மாமா ரத்தன் டாடா, லியா மற்றும் நெவில் டாடா ஆகியோர் எதிர்காலத்திற்கான முக்கிய தலைவராக மாயா டாடாவிற்கு ஒப்புதல் அளித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவர் Tata Neu என்ற செயலியை அறிமுகப்படுத்தினார், இது வர்த்தக உலகின் கவனத்தை ஈர்த்த செயலி என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனையை மேற்பார்வையிடும் டாடா மருத்துவ மைய அறக்கட்டளையின் குழுவிலும் மாயா டாடா பணியாற்றியுள்ளார். மனிதநேயம், பரோபகாரம் குறித்த இவரது இந்த ஈடுபாடு டாடா குடும்பத்திலிருந்து அவர் பெற்ற முக்கிய விழுமியங்களையும் பிரதிபலிக்கிறது.
மாயா டாடாவின் தாயாரான ஆலு மிஸ்திரி டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார். மிஸ்திரி குடும்பம் டாடா குடும்பத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. மாயாவின் அத்தை, ரோஹிகா மிஸ்திரி மறைந்த சைரஸ் மிஸ்திரியின் மனைவி மற்றும் தற்போது இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு ₹56,000 கோடியாகும்.
அவரது வலுவான குடும்ப உறவுத் தொடர்புகள், கல்வித்தகுதிகள் மற்றும் வணிக அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரத்தன் டாடாவின் தலைமைக்கு ஒரு திறமையான வாரிசாக மாயா டாடா கருதப்படுகிறார். ஏற்கெனவே மாயா டாடா, தன் குழுமத்தை வளர்த்தெடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் சில ஆண்டுகளாகவே செய்து வருகிறார். ஆகவே ரத்தன் டாடாவின் வர்த்தக வாரிசுக்கு இவர்தான் பொருத்தமானவர் என்று பேசப்பட்டு வருகிறது.