‘கெளதம் அதானி’ - மீண்டும் மீண்டெழ முடியுமா? அவர் வளர்ந்த கதையின் வழியே ஒரு பார்வை!
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் புலனாய்வு செய்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விளைவாக, அதானி கட்டியெழுப்பிய சாம்ராஜ்ஜியம் தள்ளாட ஆரம்பித்திருக்கும் சூழலில், அவர் தன் குழுமக் கோட்டையைக் கட்டியெழுப்பிய கதையை சற்றே நினைவுகூர்வோம்.
இந்தியாவில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்த ‘அதானி’ குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானியின் கதைக்குப் பின்னால் இருப்பது கடும் உழைப்பு, விடா முயற்சி மட்டுமல்ல; அரசியல் சார்ந்த அணுகுமுறையும், புத்திசாலித்தனமான யுக்திகளும்தான்.
யார் இந்த கெளதம் அதானி?
வட குஜராத்தில் உள்ள தாராட் என்னும் சிறிய டவுன் பகுதியிலிருந்து, கெளதம் அதானியின் பெற்றோரான சாந்தா பென்னும், சாந்திலால் அதானியும் தங்கள் எட்டு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அகமதாபாத் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.
அகமதாபாத்தில் உள்ள சேத் சிஎன் வித்யாலயாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அதானி, குஜராத் பல்கலைகழகத்தில் இளங்கலை வணிகவியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு, கணக்குகளையும் புள்ளிவிபரங்களையும் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, முறையான கல்வி, தனக்குரியதாக இல்லை என உணர்ந்து கொண்டார்.
கல்வி நிலையத்தில் காலம் செலவழிப்பது வீண் என்று உணர்ந்த அவர், நேரத்தை இன்னும் சிறப்பான, பெரிய அளவிலான செயல்களை செய்வதில் செலவழிக்க முடியும் என்று எண்ணினார். ஆம், குஜராத்திய ஜைன குடும்பத்தைச் சேர்ந்த அதானி தனது குடும்பத்தின் இயல்பான குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்ததும் இத்தகைய சிந்தனைக்குக் காரணம்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டில், தனது கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்ய, அவரது அந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கையில் மொத்தமே இருந்த 100 ரூபாயுடன், பெருங்கனவுகளை சுமந்து மும்பைக்கு பயணமானார் கெளதம் அதானி.
முதல் மைல்கல்
மும்பை வந்த அவருக்கு மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தின் மும்பை கிளையில் வைர வரிசைப்படுத்துநர் வேலை கிடைத்தது. வணிகத்தில் பல நுணுக்கங்களை கற்றதுடன், சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும், தனது கணிப்புகள் மூலம் கண்டறிந்த பின்னர், 'சாவேரி பசார்' என்ற பெயரில் சொந்தமாக ஒரு வைரத் தரகு நிறுவனத்தை துவங்கினார். இவரது இந்தத் தொழில், மும்பை நகரில் தன்னிகரில்லா ஒன்றாக வளரத் துவங்கியது. இது அதானிக்கு முதல் மைல்கல்லாக அமைந்தது.
அதன் பின், ஒரு வருடம் சென்ற நிலையில், அவரது அண்ணன் அகமதாபாத்தில் பிளாஸ்டிக் தொழில் நிறுவனம் ஒன்றை வாங்கினார். அவர் ‘சொந்த ஊருக்கு திரும்பி, அதன் கிளை ஒன்றை எடுத்து நடத்து’ என்று அதானியிடம் கோரினார். இந்த முடிவு, கௌதமின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. பிளாஸ்டிக் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான பாலிவினைல் குளோரைடை இறக்குமதி செய்ய அவர் எடுத்த முடிவு, உலகச் சந்தையில் அவரது வருகையை உறுதி செய்தது.
பொருளாதார தாராளமயமாக்கல் கௌதம் அதானிக்கு அதிக அளவில் வாய்ப்பை அள்ளி வழங்கும் ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. அப்போதிருந்த சந்தையின் சூழல்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 1988ல் 'அதானி குழுமம்' (Adani Group) என்று அவர் நிறுவினார்.
எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டு கூட்டு குழுமமாக உருவெடுத்த இந்தக் குழுமம், தனது ஆரம்பக் காலக்கட்டங்களில் விவசாயப் பொருட்கள் மற்றும் மின்சக்திகளில் கவனத்தை செலுத்தியது. 1991-ஆம் ஆண்டு வாக்கில் இந்த நிறுவனம் வளங்கள் மற்றும் மின்சக்தி என இரண்டிலுமே வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணப்பட்டது. இந்த வேளையில்தான் கம்பெனியின் சரக்குகளையும், நலன்களையும் வகைப்படுத்த பொருத்தமான நேரம் என கௌதம் நம்பினார்.
அதிலிருந்து மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்தை முக்கிய நோக்கமாக கொண்ட எனர்ஜி மற்றும் லாஜிஸ்டிக் கூட்டுக் குழுமம், நிலக்கரி வர்த்தகம் மற்றும் சுரங்க தொழில், எரிவாயு விநியோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணைகள் ஆகியவற்றுடன் துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிர்வகிக்கும் ஒரு மாபெரும் குழுமமாக அதானி குழுமம் உருவெடுத்தது.
பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த வியாபார நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு அதனை நிர்வகித்தாலும், கௌதம் ஒருபோதும் தனது எளிமையான ஆரம்ப காலத்தை மறந்துவிடவில்லை. குறிப்பாக, தான் சார்ந்த சமூகத்திற்கு சேவை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார்.
அப்போதைய மோதல்கள்
அப்போதைய அதானியின் தொழில் பயணத்தில், அரசுடன் சில மோதல்களை சந்திக்க நேரிட்டது. சரியாக ஒதுக்கீடு செய்யப்படாத நிலம் சம்பந்தமான சர்ச்சையை ஒருமுறை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இத்துடன், அவரது பல தொழிற்சாலைகள் அரசின் சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழ் பெறாததால், சில நேரங்களில் உயர் நீதிமன்றத்தின் கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும், கௌதம் தனது பிரச்சினைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விழிப்புடன் செயல்பட்டார்.
“அரசுடன் செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுக்கிறீர்கள் என்பது பொருள் அல்ல.”
- இந்தக் கருத்தை தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அதானி பல முறை கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.
இத்தகைய பிரச்சினைகள் பல இருந்தும், கௌதம் அதானி உடுப்பி அனல் மின் உற்பத்தி நிலையத்தை ஜெ.டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஜ்ஜன் ஜிண்டாலிடமிருந்து 6000 கோடி ரூபாய் விலை கொடுத்து கையகப்படுத்தினார். இந்தக் கடுமையான வியாபார ஒப்பந்தத்தை கௌதம் அதானி இரண்டே நாட்களில் செய்து முடித்தார் என்ற வதந்திகளும் இந்த வியாபார ஒப்பந்தத்தின் பின்னணியில் அப்போது எழுந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.
கடந்த 1994ல் குஜராத் மாநில அரசானது, முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்க முடிவு செய்தது. அதன்படி, 1995ல் அந்தத் துறைமுக நிர்வாக ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் கைப்பற்றியது. அந்த ஒப்பந்தம் மூலம் அதானியின் வளர்ச்சி பாய்ச்சல் காட்டியது.
அதன்பின்னர்தான் துறைமுகம், மின்சார உற்பத்தி, நிலக்கரிச் சுரங்கம், விமான நிலையம், தகவல் தொழில்நுட்பம் முதலான நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள அனைத்து விதமானத் துறைகளிலும் அதானி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இதனால், அதானி சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்தது.
உலகப்பணக்காரர் ஆன அதானி
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கிடுகிடுவென மேலெழுந்த அதானியின் சொத்து மதிப்பு, 2020-ம் ஆண்டு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அது, 2022-ம் ஆண்டு ஜனவரியில் 89 பில்லியன் டாலராக மாறியது. 2021-ம் ஆண்டில் நாளொன்று அதானி ஈட்டிய வருமானம் ரூ.1,000 கோடி. ஆம், அதில் பொது முடக்கக் காலமும் அடக்கம்.
முகேஷ் அம்பானி போல் அல்லாமல், முதல் தலைமுறை தொழில்முனைவோராக தடம் பதித்த அதானியின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள பெரும் உழைப்பையும் உத்திகளையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அதேவேளையில், அரசியல் தொடர்புகள் வழியாகவே இத்தகைய வளர்ச்சியை அவர் எட்டினார் என்ற கூற்றுகளையும் புறம்தள்ள முடியாது என்பதையே சமீபத்திய காட்சிகள் காட்டுகின்றன.
தொழில் ரீதியான அதானியின் சாதனைகளும், வியத்தகு வெற்றிப் பயணக்கதையும் வெற்றிக்கு பல புதிய சூத்திரங்களை தொழில் உலகுக்குத் தந்தது. அதேவேளையில், சட்டத்தை வளைப்பதும் விதிகளை மீறுவதும் உடனடியாக தாக்கத்தைத் தராமல் போனாலும், எப்போதாவது ஒருநாள் மொத்தமாக முடக்கிவிடும் விளைவுகளைத் தரலாம் என்பதை அதானி அறிந்திடாமல் இல்லை. அதிலிருந்து மீளும் உத்திகளையும் ஏற்கெனவே அவர் வகுத்து வைத்திருக்கக் கூடும் என்பதையே அவரது கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றன.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். அப்போது எல்லாம் இருட்டுக்குள் நடந்தது. இப்போதே, அத்தனை செயல்பாடுகளும் மீதும் உலகளாவிய வெளிச்சம் பாய்ந்து வருகிறது. எனவே, ‘நேர்கொண்ட பாதை’ மட்டுமே மீளும் ஒரே வழி என்பது தெளிவு.
அதானி குழுமத்துக்கு அடுத்த ஷாக்: ரூ.5,400 கோடி டென்டரை ரத்து செய்த உபி அரசு!
Edited by Induja Raghunathan