மெட்டா வெரிபைடு வசதியை சிறு வர்த்தகர்களுக்கு வழங்க வாட்ஸ் அப் முடிவு!
வர்த்தக நிறுவனங்கள் மெட்டா மேடைகளில் தங்கள் கணக்கை வெரிபை செய்ய உதவும் மெட்டா வெரிபைடு வசதி இனி சிறிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்படும்.
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், சிறிய வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் மேலும் சிறப்பாக தொடர்பு கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் பிசினஸ் சேவையில் மெட்டா வெரிபைடு மற்றும் பிரத்யேக மெசேஜ் வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
“இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்கள் வாட்ஸ் அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துகின்றன. தாங்கள் தனித்து நின்று வாடிக்கையாளர்களுடன் நம்பகத்தன்மையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என அவர்கள் எங்களிடம் அடிக்கடி தெரிவித்துள்ளனர்,” என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வழங்கும் கட்டண சேவையான மெட்டா வெரிபைடு பயனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கணக்கை வெரிபை செய்ய வழி செய்கிறது. இந்த வசதி தகுதி வாய்ந்த, சிறு வணிகங்களுக்கு இனி அளிக்கப்படும்.
வெரிபை பேட்ஜ், போலிகளுக்கு எதிரான பாதுகாப்பு, இதர வசதிகள் மற்றும் பிரிமியம் அம்சங்கள் கொண்டது. வாட்ஸ் அப் சேனல் மற்றும் வர்த்தக பக்கங்களில் இந்த பேட்ஜ் தோன்றும். இதை எளிதாக சமூக ஊடகங்களில் பகிரலாம்.
மேலும், சந்திப்பு நினைவூட்டல், பிறந்த நாள் வாழ்த்துகள், விடுமுறை சலுகை தகவல்கள் உள்ளிட்டவற்றை சிறிய வர்த்தகங்கள் அனுப்புவதற்கான பிரத்யேக் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.
மெட்டா அண்ட் பைன் கம்பெனி அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 30 மில்லியன் சிறு வர்த்தகர்களில் 5 மில்லியன் வர்த்தகர்கள் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். மேலும், பல ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைய உள்ள நிலையில், இந்திய சந்தை மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் யாத்ரா திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கு சென்று சிறு வர்த்தகர்களுக்கு நேரில் பயிற்சி அளிக்கப்படும்.
“சரியான டிஜிட்டல் திறன்களோடு சிறு வணிகர்கள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவார்கள் என நம்புகிறோம். வர்த்தகங்களுக்கு வாட்ஸ் அப் பிஸ்னஸ் கணக்கு அமைப்பதில் துவங்கி, விளம்பரங்கள் உருவாக்குவதை வரை பயிற்சி அளிப்போம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சி பாடங்களை அணுக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan