Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

#100Unicorns | 'யுனிக்' கதை 17 - OYO Rooms: பயணங்கள் காட்டிய பாதையில் 18 வயதில் வென்ற ரித்தேஷ் அகர்வால்!

தொழில்முனைவுக் கனவில் கல்லூரியில் இருந்து பாதியில் நின்று இந்தியர்களுக்கான பட்ஜெட் ஹோட்டல் ஸ்டே தேவையை ‘Oyo Rooms' மூலம் பூர்த்தி செய்த இளைஞன் ரிதேஷ் அகர்வாலின் கதை இது!

#100Unicorns | 'யுனிக்' கதை 17 - OYO Rooms: பயணங்கள் காட்டிய பாதையில் 18 வயதில் வென்ற ரித்தேஷ் அகர்வால்!

Wednesday January 11, 2023 , 6 min Read

#100Unicorns | 'யுனிக் கதை 17 | OYO Rooms

17 வயதிலேயே ஒரு நிறுவனத்திற்கு சிஇஓ, டாடா நிறுவனத்தின் 2013ம் ஆண்டுக்கான First Dot Awards-ல் டாப் 50 இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம், உலக அளவில் இளம் வயதில் மிகப்பெரிய தொழில்முனைவர்களாக அறியப்பட்ட 8 பேரில் ஒருவர் என இளம்வயதில் பல பெருமைகளை அடைந்த ரித்தேஷ் அகர்வாலின் முயற்சியும், அதன்விளைவாக யூனிகார்ன் அந்தஸ்து எட்டிய 'ஓயோ' (Oyo) ரூம்ஸ்ஸும்தான் இந்த அத்தியாயத்தின் யூனிகார்ன் பார்வை.

OYO உருவாக்கிய ரித்தேஷ் அகர்வால்

8-ம் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் மாணவர்களின் எதிர்கால ஆசை குறித்து கேள்வி கேட்க, அங்குள்ள ஒவ்வொருவரும், வழக்கம்போல் டாக்டர், என்ஜினியர் என்று அடுக்க, ஒருவர் மட்டும் தொழில்முனைவர் ஆக வேண்டும் என்று சொல்கிறார். Entrepreneur என்ற வார்த்தைக்கு உண்மையில் அப்போது அந்த மாணவருக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், சொன்னதுபோலவே அந்த மாணவர் தொழில்முனைவோர் ஆனதுதான் சரித்திரம். அந்த மாணவர் வேறுயாருமல்ல, ரித்தேஷ் அகர்வால்தான்.

ரித்தேஷின் சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ராயகடா அருகே உள்ள பிஸ்ஸம் கட்டாக். பொதுவாக நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதி இது. ராயகடா நகரத்தில் பள்ளிப்படிப்பை பயின்ற ரித்தேஷ் படிப்பில் படுசுட்டி. படிப்பில் மட்டுமல்ல, பிசினஸிலும்தான். நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணி என்பதாலோ என்னவோ, 13 வயதிலேயே தனக்கான பணத்தைத் தானே சம்பாதிக்க ஆர்வம் உண்டாக, சிம் கார்டுகளை விற்று அப்போதே தொழிலைத் தொடங்கியவர் ரித்தேஷ்.

இதுபோன்ற செயல்களால் மாணவப் பருவத்தில் மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டார். குறிப்பாக கற்றல் திறன் அவரை மற்றவர்களைவிட தனித்து காட்டியது. 

Oyo Rithesh Agarwal

கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை, ஆர்வமிருந்தால் போதும் எந்த வயதிலும் எதையும் செய்ய முடியும் என்பதற்கான உதாரணம் ரித்தேஷ். 8 வயதிலேயே ரித்தேஷுக்கு கம்ப்யூட்டர் மீது ஆர்வம். சில ஆண்டுகளிலேயே இவருக்கு பிடித்ததெல்லாம் கம்ப்யூட்டரை பிரித்து மேய்வது. கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது அல்ல இவரின் ஆர்வம், மாறாக கோடிங் செய்வதில் இருந்தது.

கூகுளை தனது ஆஸ்தான வாத்தியாராக கொண்டு, தனது அண்ணனின் லேப்டாப் உதவியுடன் கோடிங் கற்றுக்கொண்டார்.

"நான் 8வது படிக்கும் போது ஆசிரியர் நாங்கள் என்னவாக வர வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினியர் என்று சொல்ல நான் மட்டும் Entrepreneur என்று சொன்னேன். அந்த வார்த்தைக்கான அர்த்தம் அப்போது தெரியவில்லை என்றாலும் அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது," என்கிறார் ரித்தேஷ்.

தனது அண்ணனின் கம்ப்யூட்டர் புரோகிராமிங் தொடர்பான புத்தகங்கள் கூடுதலாக கைகொடுக்க அதை படிக்கத் தொடங்கி மென்பொருள் தேடலுக்கான தாகத்தை தீர்த்துக் கொள்ள முயன்றதன் விளைவு 8 வயதில் இருந்தே கோடிங் செய்வதை தொடங்கியுள்ளார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கம்ப்யூட்டர் கோடிங் தான் தனது எதிர்காலம் என்பதை உணர்ந்தார் ரித்தேஷ்.

‘பயணம்’ காட்டிய பாதை

2009-ல், ஐ.ஐ.டி-யில் இணைந்தார். ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்வியில் கற்றுக்கொடுத்தது எல்லாம் ரித்தேஷ், பள்ளியில் படிக்கும்போதே கூகுள் மூலம் தெரிந்துகொண்ட கோடிங் குறித்துதான். இதனால், நேரங்கள் நிறைய இருக்க, தனது தந்தை சேர்த்துவிட்ட பன்சால் டுடோரியல்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். இடையிடையே, கிடைத்த நேரத்தில் ஒரு புத்தகம் எழுதினார். ‘Indian Engineering Colleges: A Complete Encyclopaedia of Top 100 Engineering Colleges’ என்ற ஃப்ளிப்கார்ட்டில் நல்ல விற்பனை.

பயணங்களை அதிகம் விரும்பும் ரித்தேஷ், கல்லூரி நாட்களில் ஓய்வு கிடைக்கும் போது பயணிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஒரு பேக்கும் சிறிது பணமும் இருந்தால்போதும் கிளம்பிவிடுவார். எங்கே தங்குவது என்பது பற்றிய யோசனை எல்லாம் இருக்காது. ஏனென்றால், பட்ஜெட் ஹோட்டல் முதல் டார்மெட்ரி வரை எங்கு இடம் கிடைத்தாலும் தங்கிவிடுவார்.

உண்மையில் இப்படியான பயணங்கள் தான் அவரின் தொழில்முனைவோர் வாழ்க்கைக்கான பாதையை திறந்துவிட்டன எனலாம். டெல்லி போன்ற முக்கிய இடங்களில் இரவு தங்குவதற்கும், காலையில் சாப்பிடவும் மட்டும் வழி செய்யும் Bed & Breakfast தங்குமிடங்கள் வித்தியாசமாக தெரிய, அவரை வேறுவிதமாக சிந்திக்க வைத்தது.

ஹோட்டல்களை பொறுத்தவரை சுற்றுலா செல்பவர்களை தவிர்த்து அனைவரும் வசதிக்காக மட்டும் வர மாட்டார்கள். ஆனால், ஹோட்டல்களில் இருக்கும் நீச்சல் குளம் தொடங்கி பார் வரை நாம் பயன்படுத்தாத சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏதோ ஒரு அவசரத்துக்கு வெளியூர் சென்று திரும்பும் பலருக்கு இப்படியான தேவையில்லாத கட்டணங்கள் சிரமங்களை கொடுக்கும். சிரமத்தை கண்டுகொள்ளாமல் கேட்கின்ற கட்டணத்தை கொடுத்தாலும் தரமான ஹோட்டல்கள் சில சமயங்களில் அமைவதில்லை. இது மாதிரியான பிரச்சனைகளுக்கான தீர்வே ரித்தேஷின் தொழில்முனைவுக்கான ஐடியாவாக உதித்தது.

இந்த ஐடியாவை யோசித்தபோது அவர் வயது 17. அதைச் சாத்தியப்படுத்தியபோது வயது 18.
OYO Ritesh Agarwal

இந்த ஐடியா உதித்தது டிவி ரிமோட் மூலம் என்றால் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை என்கிறார் ரித்தேஷ்.

“ஒரு சமயம் உறவினர்கள் வீட்டில் இருந்தபோது அவர்கள் வீட்டில் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு கார்ட்டூன் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், எனது விருப்பத்திற்கு ஏற்ற சேனலை பார்க்க ரிமோட் என்னிடம் இல்லையே என நினைத்தேன். இதே பார்முலாவைத் தான் சுற்றுலாவிற்கு செல்லும் போது பயணிகள் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தங்குமிடம் என்ற புள்ளியை நோக்கி நகர்ந்தது,” என்று ஒருமுறை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரித்தேஷ்.

2012-ம் ஆண்டு அது. தன் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனமாக 18ம் வயதில் Oravel stays-ஐ தொடங்கினார் ரித்தேஷ். பயனர்களுக்கான பட்ஜெட் ஹோட்டல்களை புக்கிங் செய்வதற்கு உதவுவதே இந்த தளத்தின் நோக்கம். சுற்றுலாத் துறையில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்த இந்த ஐடியாவுக்கு உதவ முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, பிரபல நிறுவனமான Paypal-இன் இணை நிறுவனர், ஃபேஸ்புக்கின் ஆரம்பகால முதலீட்டாளரான Peter Theil ரித்தேஷுக்குப் பண உதவி செய்ய, கல்லூரிப் படிப்பையே பாதியில் கைவிட்டு 24 மணி நேரமும் Oravel stays-ஐ முன்னேற்ற பாடுபட்டார். எதிர்பார்த்தது போல் அனைத்தும் நடக்கவில்லை. சிக்கல்கள் சூழ்ந்தன. மனம் உடைந்துபோனார். 

களத்தில் இறங்கிய தருணம்...

வர்த்தகக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால், அவர் நினைத்திருந்தால் இந்த ஐடியாவை மண்ணில் புதைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று ராஜா போல் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அப்படி முடிவெடுக்கவில்லை. மாறாக, தனது ஐடியாமேல் நம்பிக்கை கொண்டு அவற்றை வெற்றியாக்கும்வரை உழைக்க நினைத்தார்.

ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் பெரும்பாலும் இணையத்தை மையம்கொண்டே உருவாகின்றன. ஆனால், அவற்றுக்கு எல்லாம் இணையம் ஒரு கருவி மட்டுமே. இணையம் என்ற அந்த கருவியின் மூலம் எந்த மாதிரியான சேவையை வழங்குகிறோம் என்பதை பொறுத்தே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றி அடைகின்றன. இந்த புள்ளியை உணர்ந்த ரித்தேஷ், முதல் வேலையாக இணையத்தை மட்டுமே நம்பாமல் களத்தில் இறங்கினார். வடஇந்தியா முழுவதும் பல ஊர்களுக்குப் பயணித்து பலதரப்பட்ட ஹோட்டல்களில் தங்கி, அதன் நிறைகுறைகளைக் கூர்மையாகக் கவனித்தார். 

Oravel stays நடத்தி வந்தபோது ரித்தேஷ், ஏறத்தாழ 100 விடுதிகளில் தங்கி இருந்துள்ளார். இந்த அனுபவம் Oravel stays இணையதளம் ஏன் பிரபலமடையவில்லை என்ற காரணத்தை புரிந்து கொள்ள அவருக்கு உதவியாக இருந்தது. ஒவ்வொரு தரத்தில் இருந்த ஒவ்வொரு ஹோட்டலின் குறைகளை வாடிக்கையாளர்கள் ஹோட்டலின் குறையாகப் பார்க்காமல், Oravel stays குறையாகப் பார்த்தது புலப்பட Oravel stays-க்கு மூடுவிழா நடத்திவிட்டு, ’ஓயோ ரூம்ஸ்’ (OYO ROOMS) தொடங்கினார். இதன்பின், ரித்தேஷின் பயணம் சூர்யவம்சம் படத்தில் வரும் நட்சத்திர ஜன்னலில் பாடல்போலத் தான்.

அதற்காக முதலாளி என்ற கர்வம் இல்லாமல், களத்தில் இறங்கி வேலை செய்தவர் ரித்தேஷ். குர்கானில ஒரே ஒரு ஹோட்டலுடன் இணைந்து முதலில் தொடங்கிய அவரின் தொழில்முனைவுப் பயணம், ரூம் புக் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அறையை சுத்தம் செய்து கொடுப்பதில் இருந்து வரவேற்பாளர், நிறுவனத்தின் சிஇஓ என அனைத்தையும் தானே முன்நின்று செய்துகொடுப்பது என்று படிப்படியாக முன்னேறியது.

ஒரு முறை சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு குழந்தையை அவரிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். சுவாரஸ்யமாக அந்தக் குழந்தையை நன்றாக கவனித்துக்கொண்டதற்காக ரூ.50-ஐ டிப்ஸாக பெற்றும் உள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகுவதால் மூலம் அவர்களின் விருப்பு, வெறுப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த யுக்தியில் கவனம் செலுத்த ஓயோ ரூம்ஸ் வளர்ச்சி சில ஆண்டுகளிலேயே மேலும் மெருகேறியது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஓயோ ரூம்ஸ் பிரபலமடைந்து, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் அடைந்தன.

ஓயோ

ஓயோ ரூம்ஸ் எப்படி செயல்படுகிறது?

ஓயோ என்பதன் விளக்கம் on your own. தங்கும் விடுதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் ஓயோ ரூம்ஸ்ல் விடுதி புக் செய்பவர்களுக்கு பட்ஜெட் விலையில் ஒரே மாதிரியான வசதிகளை அளிப்பதே இதன் நோக்கம்.

ஒரு நெட்வொர்க்கான ஓயோ ரூம்ஸில் இணைய வேண்டும் என்றால் ஓயோ பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு வந்து அதன் தரத்தைச் சோதனையிடுவார்கள். அதில் ஓகே என்றாலே ஓயோ ரூம்ஸில் இணைய முடியும். இப்படியான தீர்க்கமான சிந்தனைகளால் ஓயோ வேகமாக வளர்ந்தது. 2018ல் இந்தியாவின் 17-வது யூனிகார்ன் என்ற அந்தஸ்தைப் பெற்றது.

தற்போதைய நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய விருந்தோம்பல் செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ள ஓயோ ரூம்ஸ், இந்தியாவின் 350 நகரங்களில் ஒரு லட்சம் ஹோட்டல்கள் உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமல்ல, நேபாளம் மலேசியா, சீனா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஹோட்டல்களுடன் கைகோர்த்து சேவை செய்து வருகிறது.

18 வயதில் தொழில்முனைவுக் கனவோடு ஆன்லைன் யுகத்தில் நுழைந்த ரித்தேஷ் அகர்வாலின் ஓயோ ரூம்ஸ் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகளில் ரூ.2,600 கோடி ஆண்டு வருமானம் ஈட்டி வருகிறது. ஆசியாவில் மட்டும் 8000-க்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்கள். 14 மில்லியன் நபர்கள் ஓயோ ஆப் ஐ டவுன்லோடு செய்துள்ளனர். 

ஓயோ ரூம்ஸ் என்பது ஒரு நெட்வொர்க். அதில் ஒரு ஹோட்டல் இணைய வேண்டுமானால், ஓயோவின் ஆட்கள் வந்து எவையெல்லாம் தேவையில்லை எனச் சொல்வதன் மூலம் ஹோட்டலின் செலவைக் குறைப்பார்கள். எவை தேவை எனச் சொல்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையைத் தீர்க்க உதவுவார்கள். இந்த ஐடியா இந்தியச் சந்தைக்குத் தோதாக இருந்தது. அதனால் வேகமாக வளர்ந்தது. கூடவே சர்ச்சைகளும்.

Ritesh Agarwal, OYO Rooms

திருமணமாகாத இளம் ஜோடிகளை அனுமதிக்கும் கிண்டல்களுக்கு மத்தியில் 2018 -19ம் நிதியாண்டில் 335 மில்லியன் டாலர் நஷ்டத்தினால் சமீபத்தில் பல ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்த, நிதி நிலைமையினால் இந்த முடிவு தவிர்க்க முடியாதது என்று விளக்கினார்.

சாப்ட் பேங்க் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க தற்போது லாப பாதையில் திரும்பியுள்ளது ஓயோ ரூம்ஸ். இதனால் மீண்டும் ஊழியர்களை பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளது.

1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடன் உலகின் இரண்டாவது இளம் வயது கோடீஸ்வரன், உலக அளவில் குறைந்த வயதில் சி.இ.ஒ ஆனவர் என பல பெருமைக்கு சொந்தக்காரரான இவருக்கு வீடு என்பது இன்னும் அவரின் முதுகுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பேக் தான். ஆம், பயணங்களே அவரை துடிப்புடன் தொடர்ந்து செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது. 

இளம் வயதில், இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கின்ற ரித்தேஷின் அம்மாவின் கவலையோ “பயோடேட்டாவில் ஒரு டிகிரி கூட இல்லையென்றால் திருமணம் யார் செய்துகொள்வார்கள்" என்பதாம்.

“இந்தியாவில் மட்டும் தான் படிப்பை பாதியிலேயே விட்டுவிடுபவர்கள் திறமைசாலிகள் என்ற அங்கீகாரம் கிடைக்காமல், உயர் தரத்திற்கு வராமல் இருக்கின்றனர். நிச்சயமாக இனி வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என நினைக்கிறேன். அதற்கு நானே ஒரு சாட்சி.” - ரித்தேஷ் அகர்வால்.

யுனிக் கதைகள் தொடரும்...