சுனாமி; ஆணாதிக்கம்; மதுவுக்கு அடிமையான கணவர்கள் - உழைப்பால் தலைவிதியை மாற்றிய 6 மீனவப் பெண்கள்!
சுனாமி தந்த பேரிழப்பு, ஆணாதிக்கம், மதுவுக்கு அடிமையான கணவன், பணியிடத்தில் துஷ்பிரயோகம் என வாழ்க்கையில் வீசிய புயல்களை கடந்து, தங்களது சமையல் திறமையால் உணவகத் தொழில் தொடங்கி, தலைவிதியை மாற்றியுள்ள ஆறு மீனவப் பெண்களின் ஊக்கமிகு பகிர்வு.
சுனாமி தந்த பேரிழப்பு, ஆணாதிக்கம், மதுவுக்கு அடிமையான கணவன், பணியிடத்தில் துஷ்பிரயோகம் என வாழ்க்கையில் வீசிய புயல்களை கடந்து, தங்களது சமையல் திறமையால் உணவகத் தொழில் தொடங்கி, தலைவிதியை மாற்றியுள்ள ஆறு மீனவப் பெண்களின் ஊக்கமிகு பகிர்வு.
ஸ்டெல்லா கிரேசியும், அவரது சக மீனவப்பெண்களும் அன்றாடம், கடலுக்கு சென்ற கணவன்மார்களின் வருகைக்காக காத்திருந்து, பிடித்து வந்த மீன்களை சந்தையில் விற்று, கையில் காசு பார்த்து சூரியனின் மறையும் தருவாயில் அன்றைய நாளை தொடங்குவர். சில அந்தி பொழுதுகள் மீன்கள் விற்று தீர்ந்த மகிழ்ச்சியில் கழியும். சில நாட்களோ விற்பனைக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால், அவர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடி, அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்படும்.
பூம்புகார் துறைமுகத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கான மனிதர்கள் உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யும் நிலையில், அவர்களுக்கோ ஓய்வெடுக்கவோ, சாப்பிடவோ அல்லது இளைப்பாறாவோ இடமில்லை. இந்த கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த கிரேசி, 2016ம் ஆண்டு மீனவப் பெண்களான சில்வராணி, உமா, ராஜகுமாரி, சரோஜா, ராஜா ரமணி மற்றும் கீதா ஆகியோருடன் சேர்ந்து நிலைமையை சரிசெய்ய முடிவு செய்தார்.
"எங்களால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடியவில்லை. ஆனால், எங்களது தாய்மார்களும், பாட்டிகளும் எங்களுக்கு அளித்த கடல்உணவுகளை சமைக்கும் கலை எனும் செல்வம் எங்களிடம் இருந்தது..." என்று பெருமையுடன் கூறினார் கிரேசி.
அவர்களது பலத்தை உணர்ந்த கிரேசி, 50,000 ரூபாய் நுண்கடன் பெற்று குடிசையில் இயங்கும் உணவகத்தை தொடங்கினார். கடற்கரைக்கு வருகை தரும் லோடுமேன்கள் மற்றும் மீனவர்களுக்கு சிற்றுண்டிகள், முழு நேர உணவுகள் மற்றும் மீன் குழம்பு ஆகியவற்றை விற்கத் தொடங்கினர்.
முன்னெப்போதும் காண வெற்றி!
குடிசையில் தொடங்கிய சிறிய சிற்றுண்டி இன்று 'டால்பின் உணவகம்' எனும் பெயரில் முழுவீச்சில் இயங்கும் உணவகமாக வளர்ந்துவிட்டது. முதலீட்டிற்காக வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தியது மட்டுமின்றி, குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களும் மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். அன்றாட உணவு விற்பனையைத் தாண்டி, மீன் மற்றும் இறால் ஊறுகாய்களை விற்று மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.
குழுவினரில் கிரேசி மட்டுமே பட்டதாரி மற்ற அனைத்து பெண்களும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள். அதற்கு அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவைகள் காரணங்களாக உள்ளன. பல ஆண்டுகளாக ஆணாதிக்கத்தால் கட்டுப்பட்டு, மதுவுக்கு அடிமையான துணைவர்களுடன் நித்தம் போராடியே வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்று வணிகப் பெண்களாக உருவெடுத்துள்ளனர்.
குழுப் பெண்களில் ஒருவரான 48 வயதான ராஜா ரமணி அவரது வாழ்க்கையில் பல புயல்கள் வீசியுள்ளன. அவருடைய கணவரை கொலை முயற்சியில் இழந்துள்ளார். அவரது சகோதரி கடலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுவயதில் அம்மாவுக்கு உதவியாக இருப்பதற்காக, அவரது பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி வேலைக்கு அனுப்பியுள்ளனர். பணிபுரிந்த இடத்திலோ பலவழிகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.
வாழ்க்கையில் வீசிய இத்தனை புயல்களை கடந்துவந்தவர், மூத்த மகள் விஜயலெட்சுமியை ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் மாநில பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க செய்துள்ளார். விஜயலெட்சுமி இப்போது இந்தியாவுக்குத் திரும்பி ஒரு மருத்துவராக பணிபுரிகிறார். அவரது இரண்டாவது மகள் சிவில் சர்வீஸ் பணிகளை இலக்காக கொண்டுள்ளார்.
"சிறு வயதில் நாங்கள் இழந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பருவ வயதில் நாங்கள் அனுபவிக்காத மகிழ்ச்சியினை மீண்டும்பெறுவதற்கும் மக்களுக்கு சமைத்து உணவளிக்கும் தொழிலைத் தொடங்குவதைவிட சிறந்த வழியில்லை. எனது மகள்களுக்கு என்றென்றும் அலைகளைத் திருப்புவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளேன்," என்று அவர் கூறினார்.
2004ம் ஆண்டு சுனாமியால் தன் மகள் உட்பட அனைத்தையும் இழந்த இருளா பழங்குடியினப் பெண் ராஜகுமாரி. முதலமைச்சரின் நிவாரணத் திட்டத்தின் கீழ் கிடைத்த மீன்பிடிக் கப்பலை வாழ்வாதாரமாக்கி புதிதாக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் வெகுதூரம் கடந்து வந்துவிட்டார் என்பதை அவரே நன்கு அறிவார். மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் சில பெண்களில் இவரும் ஒருவர். மீனவக் குடும்பங்களில் பல மனைவிகள், தாய்மார்கள் குடிப்பழக்கத்தால் கணவனை இழக்கும் வேளையில், தான் பிடித்துவந்த மீன்களை சமைத்து அளிக்கும் தொழிலைத் தொடங்கிய பெருமை ராஜகுமாரிக்கு உண்டு.
தொழில் நன்கு சென்றுக் கொண்டிருந்த காலத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. சிறு பொட்டிக்கடை தொடங்கி பெரும் நிறுவனங்களை வரை அனைத்திற்கும் தொற்றுக் காலம் சோதனையாக இருந்தது. அத்தொற்று காலத்திலும், திருமணங்கள் பிறந்தநாள் விழாக்களுக்கு உணவுகளை வழங்கி, அவர்களின் வழக்கமான வணிக இழப்பை ஈடுசெய்தனர்.
மகிழ்ச்சியையும், மரியாதையையும் பெற்றுதந்த சுயதொழில்!
தொற்றுநோய் சமயத்தில் பூம்புகார் பேருந்து நிலையம் மற்றும் கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு ஸ்டால் அமைக்க கிரேசி மற்றும் அவரது குழுவினர் மாநில சுற்றுலாத் துறையிடம் இருந்து டெண்டரைப் பெற்றனர். கடந்த 3 ஆண்டுகளாக, அவர்கள் இங்கு பிரபலமான மீன் ப்ரைகளை விற்பனை செய்து, சிறந்த வீட்டு பாணியில் கடல் உணவுகளை சமைக்கும் உணவகமாக கிராமத்தில் பெயர் பெற்றுள்ளனர்.
"மீன்பிடியில் கிடைக்கும் ஒழுங்கற்ற வருவாயை நம்பி இருக்க முடியாததால் கடையைத் தொடங்கினோம். தொழிலை நடத்துவதற்கும் பொறுப்பேற்றதற்கும் ஆண்களால் கேலி செய்யப்பட்டோம். அனைத்து ஊக்கமின்மையையும் சரிக்கட்டினோம். அதுவே டால்பின் உணவகத்தினை அமைக்க எங்களுக்கு உதவியது.”
வருடங்களும் வெற்றிகளும் வீட்டிலுள்ள சூழலையும் மாற்றிவிட்டன. எங்கள் கணவர்கள் சமையல் மற்றும் சுத்தம் செய்யும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஏனெனில், அவர்கள் போதுமான அளவு சம்பாதிக்காத நாட்களில் நாங்கள் வருமானத்தை ஈடுகட்டுகிறோம். எங்கள் வீடுகளுக்குள் கண்ணியத்தையும் மரியாதையையும் பெற்றுள்ளோம், என்பதே மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது," என்ற கிரேசி, அவர்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம், அவர்களது குடும்பங்கள், கணவர்கள் மற்றும் கிராம மக்கள் அவர்களின் மிகப்பெரிய சியர்லீடர்களாக மாறிவிட்டனர் என்று ஆனந்தத்துடன் பகிர்ந்தார்.
தமிழில்: ஜெயஸ்ரீ
அடுப்பூதும் பெண்களை சிறு, குறு தொழில் முனைவராக்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் உஷா உரான்!