தமிழ் வழியில் படித்து ஐஏஎஸ் கனவை சாத்தியமாக்கிய பள்ளிக்கல்வி தாண்டாத பெற்றோரின் மகள்!
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிட்டா, தமிழ் வழியில் படித்து கடுமையான உழைப்பினால் 24 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தன்னுடைய பெற்றோருக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
வறுமையோ, வாழும் சூழலோ ஒரு பெண்ணின் கல்விக்கு முட்டுக்கட்டை போடாது. பெற்றோரின் ஒத்துழைப்பும் கடினமான உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் ஆணுக்கு நிகராக பெண்ணும் கல்வியின் மூலம் உயர் பதவியில் அமர முடியும் என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார் ஏஞ்சலின் ரெனிட்டா.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்வதர்கள் ரவி மற்றும் விக்டோரியா தம்பதி. இவரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா அதே ஊரில் இருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று அப்போதே பெற்றோருக்கும் தான் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். தமிழ்வழி கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்த ரெனிட்டா, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற லட்சிய நோக்கில் பயணம் செய்யத் தொடங்கினார். மைக்கேல்பட்டியில் தொடங்கி யூபிஎஸ்சி வரை தான் செய்த பயணத்தை ஊடகங்களுக்கு பகிர்ந்திருக்கிறார் ரெனிட்டா.
“என்னுடைய அப்பா 3ம் வகுப்பும், அம்மா 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றனர். அப்பா டிரைவராக பணியாற்றி வருகிறார், என்னையும் அண்ணனையும் பெற்றோர் நல்ல விதமாக படிக்க வைத்தனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் குறித்த பொறியியல் படித்தேன். சின்ன வயசுல இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற பெரும் கனவு எனக்குள் இருந்தது.”
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது திடீரென ஏற்பட்ட சுனாமி பேரலையால் பலர் உயிரிழந்ததை நேரில் பார்த்தேன். சடலங்களுக்கு மத்தியில் இருந்து நாங்கள் பிழைத்து ஊர் திரும்பினோம்.
இந்தப் பேரழிவின் கோரத் தாண்டவத்தால் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, அந்த ஊர் கலெக்டர் மட்டும் சுதாரித்து துரிதமாக செயல்பட்டு எஞ்சியவர்களை மீட்டு மற்றவர்களுக்குப் பாதுகாப்பு தரும் வேலையில் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதனை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்த சில நாட்களில் வேளாங்கண்ணியில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது என்கிற செய்தியை கேட்டேன்.
“ஒரு கலெக்டராக இருந்தால் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதோடு பலருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரவும் இயலும் என்ற புரிதல் ஏற்பட்டது. அந்த உந்துதல் காரணமாக “நான் ஐஏஎஸ்” ஆக வேண்டும் என்கிற ஆசையை என்னுடைய அப்பாவிடம் வெளிப்படுத்தினேன். அவரும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் நான் படிக்க வைக்கிறேன் என்று சொன்னதே என்னுடைய கனவிற்காக கூடுதலாக உழைக்கத் தொடங்கினேன்,” என்று பெற்றோர் எப்போதும் தனக்கு உறுதுணையாக இருந்ததைப் பற்றி பகிர்கிறார் ரெனிட்டா.
வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாணவப் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி ஒரு சம்பவத்தை எப்படி பல முறைகளில் அணுகுவது என்ற அனுபவத்தையும் பெற்றுக் கொண்டேன்.
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கொரோனா காலக்கட்டத்தில் 2020-ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன், ஆனால், தேர்ச்சி பெறவில்லை. படிப்பு+ அனுபவம் + தோல்வி = வெற்றி என்று சூத்திரம் வகுத்து செய்த தவறுகளை சரி செய்துகொண்டு முழு மூச்சில் படித்து இரண்டாவது முறை நம்பிக்கையோடு தேர்வை எழுதினேன்.
அதில் தான் இந்திய அளவில் 338-வது ரேங்க எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் நானும் ஒருவர் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
“விரைவில் ஐ.ஏ.எஸ் இல்லைன்னா ஐ.பி.எஸ் பணி கிடைக்க இருக்கிறது. இன்றைக்கு என்னை பலரும் பாராட்டுறாங்க. ஆனால் என்னோட ஏழு வயசு கனவை நிஜமாக்க பக்கபலமாக இருந்தது பெற்றோர்தான். நாங்கள் இருந்தது கிராமம் என்பதால் பலரும் பெண்ணை ஏன் அதிகம் படிக்க வைக்கிற என்றும் கல்லூரி படித்து முடித்ததும் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம்னும் பலர் பெற்றோரிடம் கூறினர். ஆனால் அந்த எதிர்வினைகளை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் என் மீது நம்பிக்கை வைத்தனர், அதன் பலனைத் தான் நான் 24 வயதில் அடைந்திருக்கிறேன்,” என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் ரெனிட்டா.
எதையும் முழு ஈடுப்பாட்டுடன் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம். தமிழ் வழியில் படித்ததால் ஐஏஎஸ் ஆவது சிரமம் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. என்னை நானே என் கனவை நோக்கி நடக்க பழக்கிக் கொண்டேன்.
7 வயது முதலே spoken English வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினேன். கல்லூரி காலத்தில் ஆங்கிலத்தில் தான் முழுவதும் படிக்க வேண்டும், ஐஏஎஸ்க்கு தயாராக அனைத்தையும் ஆங்கிலத்தில் படிப்பது போன்றவற்றால் தமிழ் மீடியத்தில் படித்தது எனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை.
என் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதை நோக்கி உழைத்தேன். என் கனவு இன்றைக்கு சாத்தியமாகியிருக்கிறது. பெண்கள் வீட்டில் முடங்கி இருக்கக் கூடாது, வெளி உலகுக்கு வந்து பணி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் வகையிலும், அவர்களின் நலனுக்காகவும் பணிபுரிய வேண்டும் அதுவே என் இலக்கு என்கிறார் ஏஞ்சலின் ரெனிட்டா.
ஏஞ்சலின் ரெனிட்டாவால் தங்கள் ஊருக்கே பெருமை! என மைக்கேல்பட்டி கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். பலர் நேரில் சென்றும் ஏஞ்சலின் ரெனிட்டாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான, 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தேர்வெழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற 685 பேரில் ரெனிட்டாவும் ஒருவராவார்.