உங்களிடம் உள்ள பழைய செல்போன்களை ஸ்மார்ட்டாக பயன்படுத்த சில டிப்ஸ்!
பழைய போன்களை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது குறித்தும், குறைந்தபட்சம் அதனை எந்தவித தீங்கும் இல்லாமல் அப்புறப்படுத்துவது குறித்தும் அறிந்து கொள்வோம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நொடிக்கு நொடி தொழில்நுட்ப அப்டேட் நடந்து வருகிறது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) அனுப்பவும் பயன்பட்டு வந்த மொபைல் போன்கள் இன்று போட்டோ எடுக்கவும், வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளவும், டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும் என பல்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், Artificial Intelligence அம்சம் கொண்ட போன்கள் கிட்டத்தட்ட ஒரு உதவியாளரை போலவே சில ரிமைண்டர்களையும் கொடுக்கிறது.

கீபேட் (ஃபீச்சர் போன்), கேமரா போன், ஸ்மார்ட்போன் என மொபைல் போன்களின் பரிணாம வளர்ச்சி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூட ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி, ஓஎஸ் (இயங்குதள) சப்போர்ட் என பலவிதமான மாறுதல்களைப் பெற்றுள்ளது. தற்போது சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஆனால், புதிய போனுக்கு அப்கிரேட் ஆகும் மொபைல் போன் பயனர்களில் பெரும்பாலானோர் பழைய போன்களை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டி விடுவார்கள். ஒரு கட்டத்தில் பயன்படாமல் இருக்கும் அதனை தூக்கி வீசி விடுவார்கள். அப்படி வீசப்படும் போன்கள் அனைத்துமே மின்னணு கழிவாக நாம் வாழ்ந்து வரும் பூமிக்கே அச்சுறுத்தலாக அமையும்.
அதனால் பழைய போன்களை ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது குறித்தும், குறைந்தபட்சம் அதனை எந்தவித தீங்கும் இல்லாமல் அப்புறப்படுத்துவது குறித்தும் அறிந்து கொள்வோம்.

பழைய போன்களை என்ன செய்யலாம்?
கார் கேமரா: பழைய போன்களை காரின் டேஷ் போர்டில் வைத்து காரின் டேஷ் கேமராவாக பயன்படுத்தலாம். சந்தையில் புதிய கார் டேஷ் கேமரா வாங்க வேண்டுமென்றால் சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி உள்ளது. அதை தவிர்க்க எளிய வழியில் நல்ல கேமரா மற்றும் பேட்டரி திறன் கொண்ட பழைய போன்களை பயன்படுத்தலாம். இதற்கென சில பிரத்யேக செயலிகள் கூட ஆப் ஸ்டோரில் உள்ளன. பழைய போனை இப்படி பயன்படுத்துவது பயணங்களின் போது பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.
ஸ்டோரேஜ் டிவைஸ்: அனைவரும் போர்டபிள் டிரைவ்களான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றை போட்டோ, வீடியோ மற்றும் இன்னும் பிற ஃபைல்களை சேகரிக்கவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த சூழலில் பழைய போன்களை போர்டபிள் டிரைவ்களாக பயன்படுத்தலாம்.
நேவிகேஷன் சாதனமாக பயன்படுத்தலாம்: இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய ஊருக்கு பயணம் செல்வது என்றால் அதற்கு கூகுள் மேப் துணையை நாடுகிறோம். இதற்கு பழைய போன்களை பைக், கார் போன்ற பயணங்களில் நேவிகேட்டர் சாதனமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் புதிய போன்களில் பேட்டரி சக்தி விரயமாவதை தவிர்க்கலாம்.

எக்ஸ்சேஞ்ச்: புதிய போன்களை வாங்கும் போது பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த வசதி உள்ளது. பழைய போன்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் மேற்கூறிய வழிகளில் போனை பயன்படுத்தலாம். அதுவும் இல்லையென்றால் விற்பனை செய்யலாம்.
ரீசைக்கிள் (மறுசுழற்சி): பழைய போன்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் அதனை குப்பையில் வீசாமல் முறையான மறுசுழற்சி பணிகளுக்கு அனுப்பலாம். Cashify, Recycledevice, Namoewaste போன்ற தளங்கள் இந்தியாவில் மறுசுழற்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில இடங்களுக்கு டோர்-டூ-டோர் சேவைகளும் உள்ளன.
இந்த தளங்களின் மூலம் பழைய போன்களை முறையாக மறுசுழற்சி செய்யலாம். அதில் இருக்கும் உதிரி பாகங்களை எடுத்து மீண்டும் பயன்படுத்த வழி உள்ளது. அதற்கான வழி இல்லவே இல்லையெனில் சூழலுக்கு எந்தவித தீங்கும் இல்லாமல் அப்புறப்படுத்தலாம். இது அனைத்தையும் விட பழைய போன்களுக்கு ஏதேனும் சன்மானம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
என்ன வெயிட் பண்றீங்க... உடனே உங்களிடம் உள்ள பயன்படாத பழைய செல்போன்களை எடுத்து மேலே சொன்ன எதாவது ஒரு வழியில் ஸ்மார்டாக பயன்படுத்துங்க...

Edited by Induja Raghunathan