உயிரியியல் பாடத்தை ஈசியாக புரியவைக்க ஆசிரியை எடுத்த ஆச்சரிய முயற்சி!
மனித உடல் உள்ளுருப்புகளை தன் மாணவர்களுக்கு கற்பிக்க, ஸ்பெயின் ஆசிரியை எடுத்த புதிய முயற்சி.
பணிகளில் சிறந்தது அகவிருள் அகற்றி அறிவொளியேற்றும் ஆசிரியர் பணி. களிமண்ணாய் இருக்கும் மாணவர்களுக்கு தமது போதனைகள் மூலம் உருக்கொடுத்து, உயிர் கொடுத்து சமுதாயத்தில் சிறந்த குடிமகன்களாய் உருவாக்கும் உன்னதப் பணியே இந்த ஆசிரியர் பணி. இதனை தவமாய் செய்து தரணி போற்ற வாழ்ந்த ஆசிரியர்கள் ஏராளம்.
நமது தமிழக பள்ளிகளில் ஆடல், பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஏராளமான ஆசிரியர்களை நாம் பார்த்திருப்போம். ஓவ்வொரு ஆசிரியரும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் ஓருவர்தான் ஸ்பெயினில் வசித்து வரும் வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை. 40 வயதான இவர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வித்தியாசமான முறைகளைக் கையாண்டு பாடங்களைக் கற்பித்து மாணவர்களின் அறிவுத் தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்கிறார்.
அவரின் தற்போதைய ஓர் புதிய முயற்சி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, உலக அளவிலும் வைரலாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
அவர் மாணவர்களுக்கு மனித உடற்கூறியல் பாடம் நடத்துவதற்காக மனித உடல் உள்ளுருப்புகளை தத்ரூபமாக அச்சிடப்பட்டுள்ள ஓர் உடையை அணிந்து வந்து, அதனை காட்டியே மாணவர்களுக்கு விளக்கமளித்து பாடம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை, அறிவியல். சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களை கற்பித்து வருகிறார் ஆசிரியை வெரோனிகா. இவர், தான் கற்பிக்கும் பாடங்கள் மாணவர்களை சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு வித்தியாசமான நடைமுறைகள் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது மாணவர்களுக்கு உயிரியியல் பாடத்தில் உடல் உள்ளுருப்புகள் குறித்து விளக்குவதற்காக உடல் உள்ளுருப்புகளைத் தத்ரூபமாக விளக்கும்வகையில் அச்சிடப்பட்ட ஓர் ஆடையை அணிந்து வந்து அதை வைத்தே மாணவர்களுக்கு எளிமையாக பாடம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அந்த ஆசிரியை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,
சிறு குழந்தைகளுக்கு உடல் உள் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி, அவர்களுக்கு அதனை புரிந்து கொள்ளச் செய்வதென்பது மிகக் கடினம். அதனால்தான் நான் இம்முறையை முயற்சித்துப் பார்த்தேன் என்கிறார்.
ஆசிரியை வேரோனிகாவின் கணவர், தனது மனைவியின் வகுப்புக்குச் சென்று உடற்கூறியல் விளக்கப்படங்கள் அடங்கிய உடையுடன் அவர் பாடம் நடத்தியதை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டார். இது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறு ட்வீட் மற்றும் 66 ஆயிரம் லைக்குகள் பெற்று உலக அளவில் வைரலாகிவிட்டது.
ஓர் ஆசிரியை தனது மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிய கருத்துக்களையும், பாடங்களையும் பயிற்றுவிக்கவேண்டும். அப்போதுதான் அந்த கல்வி அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல மனதில் பதியும் என்பதே ஆசிரியையின் கருத்தாகும்.
மேலும், இதுகுறித்து ஆசிரியை கூறும்போது,
நான் இணையத்தில் செய்திகளை படித்துக் கொண்டிருந்தபோது, நீச்சலுடை குறித்த விளம்பரத்தை பார்த்தேன். அப்போதுதான் மனித உள்ளுருப்புகளை கொண்ட இந்த ஆடைத் தேர்வு செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடிவு செய்தேன்,” என்கிறார்.
எழுதுவதைக் காட்டிலும், பேசுவதைக் காட்டிலும் செய்முறைக் கல்வி மிகவும் பலனளிக்க கூடியது. அதனால்தான் நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். வரலாற்றுப் பாடங்களுக்கு மாறுவேடங்களை பயன்படுத்தி வரலாற்று நிகழ்வுகளை மாணவர்களின் கண்முன் நிறுத்தி கற்பிக்கவேண்டும். இலக்கணங்களுக்கு இதேபோன்று அட்டை கிரீடங்களை மாணவர்களுக்கு அமைத்துக் கொடுத்துதான் பாடம் சொல்லித் தருவேன் என்கிறார்.
மாணவர்களை அறிவில் சிறந்தவர்களாக உருவாக்குவதே ஆசிரியர்களின் கடமை. நான் என் கடமையை திறம்பட செய்து வருகிறேன் என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்
ஆசிரியை வேரோனிகா.