ரூ.10 கோடி விற்பனையை எட்டியது எப்படி - ‘பில்டிங் டாக்டர்’ ஆதன் யோகியின் பிசினஸ் கதை!
கட்டிடங்களின் பராமரிப்பு வேலைக்கு உதவும் 50+ தயாரிப்புகளை விற்பனை செய்யும் ‘பில்டிங் டாக்டர்’ ப்ராண்ட் தற்போது தமிழகமெங்கும் 13 கடைகளைக் கொண்டிருக்கிறது. விரைவில் 50 ஸ்டோர்கள் இலக்குடன் சென்று கொண்டிருக்கிறார் அதன் நிறுவனர் ஆதன் யோகி.
'வீட்டைக் கட்டிப்பார் என்று சொல்லுவார்கள்...’ ஆனால், இப்போது அதனுடன் ’வீட்டை பராமரித்து பார்’ என்று சொல்ல வேண்டிய காலம் வந்துள்ளது. ஒரு வீடு என்றால் இப்போது அவ்வளவு பராமரிப்பு வேலைகள் இருக்கின்றன.
இந்த பரப்பில் அதிக தேவை இருப்பதை உணர்ந்ததால், வீடு பராமரிப்பு வேலைகளுக்குத் தேவையானவற்றை தயாரித்து செயல்படுத்தும் நிறுவனம் ஒன்றை தொடங்கி மயிலாடுதுறையில் இருந்து நடத்தி வருகிறார் ஆதன் யோகி.
கட்டுமான பராமரிப்புக்குத் தேவையான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் ‘Building Doctor'. இந்த ப்ராண்ட் பெயரில், தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட பிரான்ஸைசி ஸ்டோர்கள் மூலம் கட்டுமானப் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்துவருகிறார் அதன் நிறுவனர் ஆதன் யோகி.
பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஆதனின் வாழ்க்கை மற்றும் பில்டிங் டாக்டர் நிறுவனம் குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் உடன் விரிவாக பகிர்ந்து கொண்டார்.
ஆதன் யோகி தொடக்கம்
இதுவரை நான் எந்த வேலைக்கும் சென்றதில்லை. ஆனால், இலக்கில்லாமல் பல விஷயங்களை செய்திருக்கிறேன். அப்படி செய்த பல விஷயங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைந்ததுதான் ’பில்டிங் டாக்டர்’ என்னும் நிறுவனமாக மாறி இருக்கிறது, என்ற இண்ட்ரோ உடன் தொடங்கினார் ஆதன் யோகி.
படிப்பது என்பது என்னுடைய முக்கியமான வேலையாக இருந்தது. அதனால் படித்ததை உடனடியாக செய்ய வேண்டும் என நினைப்பேன். நான் டிப்ளமோ படித்துக்கொண்டிருக்கும் போதே ’இளம் சிறகு’ என்னும் அறக்கட்டளை நடத்திவந்தேன். நான் டிப்ளமோ முடிக்கவில்லை. ஆனால் அறக்கட்டளை நடத்தினேன்.
பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது என்னுடைய முக்கியமான வேலையாக இருந்தது. பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு கான்செப்ட் பிடித்தேன். சர்வதேச அளவில் காகிதம் அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் காகிதத்தை மறுசுழற்சி செய்வதில் இந்தியாவின் பங்கு மிக மிக குறைவு. இந்தியா பயன்படுத்தும் காகிதத்தில் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
அதனால், மறு சுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என பள்ளிகளை அணுகினேன். அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்து அதிகளவுக்கு காகிதத்தை கொண்டுவருபவர்களுக்கு விருது கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். அது மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தது.
பலர் கிலோ கிலோவாக பேப்பர் கொண்டுவந்தனர். இந்த காகிதங்களை மறு சுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த பள்ளியின் வளர்ச்சி அல்லது எதாவது ஒரு தகுதி வாய்ந்த மாணவனுக்கு அந்த பணத்தை கொடுத்தோம். இது பெரிய அளவுக்கு விரிவடைந்தது.
இந்த சமயத்தில் ஒரு பள்ளியில் இருந்து சுமார் 80 டன் காகிதங்களை மறு சுழற்சி செய்யும் ஆலைக்கு அனுப்பி இருந்தோம். ஆனால், அப்போது இருந்த மின்வெட்டு காரணமாக அந்த ஆலையால் செயல்படமுடியவில்லை.
"எங்களுடைய காகிதங்கள் அந்த ஆலையில் மாட்டிக்கொண்டது. அதற்கான பணம் வரவில்லை. இதுவரை பணத்தை சரியாக கொடுத்துகொண்டிருந்த எனக்கு இந்த சூழல் புதிதாக இருந்தது. என்னுடைய நம்பிக்கை சரியத்தொடங்கியது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக மற்றவர்களிடம் பணத்தை திரட்டி கொடுத்துவிடலாம் என திட்டமிட்டேன். இது தொடர்பாக பலரிடம் பேசினேன். அப்போது எனக்குக் கிடைத்தது அவமானம், வாழ்க்கை பாடம் மற்றும் புரிதலை கொடுத்தது.”
’நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் உங்களது காசில் செய்ய வேண்டுமே தவிர என்னுடைய காசில் நீங்கள் என்ன நல்லது செய்வது’ என ஒருவர் கூறினார். அந்த நொடிக்கு அது கஷ்டமாக இருந்தாலும் அதுதான் உண்மை என புரியத்தொடங்கியது.
’பில்டிங் டாக்டர்’ தொடங்கிய எப்படி?
டிப்ளமோ முடிக்கும்போது ஒரு கெமிக்கல் புராஜக்ட் செய்தேன். அதாவது, கட்டிடங்களை சரிசெய்வதற்கு அந்த கெமிக்கல் பயன்படும். இது தொடர்பாக பலரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டிடத்தில் சரி செய்யும் வேலை கிடைத்தது. அப்படித்தான் இந்த துறைக்கு வந்தேன். ’பில்டிங் டாக்டர்’ தொடங்கியதும் இப்படித்தான்.
“வீடு கட்டுவதற்கு பலர் இருப்பார்கள். ஆனால் வீட்டினை பராமரிப்பதற்கு சிலர் மட்டுமே இருந்ததால் ஓரளவுக்கு ஆர்டர்கள் வந்தன.”
சில பணியாளர்களுடன் தொடங்கி சுமார் 40 பணியாளர்கள் வரை என்னிடம் இருந்தார்கள்.
இந்த சமயத்தில் மீண்டும் என்னுடைய கவனம் சிதறியது.
சோசியல் மீடியா, பல்வேறு சங்கங்களில் பேச்சுகள், படிப்பு என தொழிலில் கவனம் இல்லாமல் பல வேலைகளையும் செய்தேன். ஒரு கட்டத்தில் பிஸினஸ் என எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் சிறப்பாக இருந்த பிஸினஸ், 2016ம் ஆண்டு கடும் சிக்கலில் இருந்தது. மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது, என தொழிலில் சரிவை பகிர்ந்தார் யோகி.
மீண்டும் ட்ராக்குக்கு வந்த தொழில்
நான் எங்கும் வேலை செய்தது இல்லை என்பதால் எங்கு தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பிறகு, நிறைய தொழில்முனைவோர்கள், கருத்தரங்குகள் என பலரிடம் உரையாடி என் தவறுகள் பற்றி நான் கற்றுக்கொண்டேன்.
“இவர்கள் அனைவரும் கூறியதை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ’Focus2 இல்லை’ அதிகளவுக்கு கவனச் சிதறல் இருந்தது புரிந்தது. அதனால் மொத்த கவனத்தையும் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.”
இதுவரை கட்டுமானத்தில் உள்ள பராமரிப்புப் பணிகளை செய்துவந்தேன். அதன் அடுத்த கட்டமான பெரிய நிறுவனங்களின் புராடக்ட்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் தொடங்கினேன்.
கும்பகோணத்தில் முதல் ஸ்டோரை தொடங்கினேன் என்னுடைய மொத்த கவனமும் இதில் இருந்ததால் முதல் கடை ஆரம்பகாலத்திலே சிறப்பாக செயல்படத் தொடங்கியது. ஒருவேளை சொந்த ஊருக்கு அருகிலே தொடங்கி இருப்பதால் சிறப்பாக இருக்கிறதோ என நினைத்து, காரைக்காலில் அடுத்த ஷோரூம் தொடங்கினேன். இதுவும் வெற்றி.
ஆரம்பகட்டத்தில் கட்டிடங்களின் பராமரிப்பு வேலையை செய்தேன் அதனை தொடர்ந்து அதற்கான பொருட்களை விற்பனை செய்தேன். இந்த நிலையில் நாமே ஏன் அவற்றை தயாரிக்கக் கூடாது என்னும் யோசனை. நமக்கு ஆலோசனை வழங்குபவர்கள், நலம் விரும்பிகள் என பலரிடம் கேட்டபோது, இப்போதுதான் தொழில் வளர தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அகலக்கால் வைக்க வேண்டாம் என்பதுபோலவே அவர்களின் கருத்து. ஆனால் எனக்கு ஒரு உள்ளுணர்வு தோன்றியது.
”இப்போது தொடங்கினால் வெற்றியடையலாம் எனத் தோன்றியது. அதனால் சொந்தமாக ப்ராடக்ளை தயாரிக்க தொடங்கினோம். கட்டுமான பராமரிப்புக்குத் தேவையான 30 பொருட்களுடன் தொடங்கினோம். தற்போது 50க்கும் மேற்பட்ட பொருட்கள் ‘பில்டிங் டாக்டர்’ எனும் பெயரில் வெளிவருகிறது,” என்றார் உற்சாகத்துடன்.
வீட்டுக்குள், மொட்டைமாடி மற்றும் கட்டிடங்களில் தண்ணீர் கசிவு, சுவற்றில் கிராக், துரு பிடிப்பது, போன்ற பல பிரச்சனைகளுக்கு பில்டிங் டாக்டர் ப்ராண்ட் திரவியங்களும் கெமிக்கல் கலப்பு தயாரிப்புகள் வெளிவருகின்றன. இவற்றின் சிறப்புகளை நேரடியாக செயல்படுத்தி காட்டும் யூடியூப் சேனலும் தொடங்கி நடத்தி வருகிறார் ஆதன் யோகி. இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது.
கட்டுமான பராமர்ப்பில் முதல் பிரான்ஸைசி
சர்வதேச அளவில் கட்டுமானப் பொருட்களின் பராமரிப்புக்காக முதல் முறையாக பிரான்ஸைசி கொடுக்கப்பட்டது பில்டிங் டாக்டர்-க்குத்தான். எங்களுடைய சொந்தகடை மற்றும் பிரான்ஸைசி என மொத்தம் தற்போது 13 ஸ்டோர்கள் உள்ளன. அக்டோபரில் 12 ஷோரும் தொடங்க இருக்கிறோம். அதற்கான இறுதிகட்ட வேலைகள் நடந்துவருகின்றன.
”அடுத்த ஆண்டு முடிவுக்குள் 50 ஸ்டோர்கள் என்னும் இலக்குடன் செயல்பட்டுவருகிறோம். எங்களுடைய ஒரு பிரான்ஸைசி 10 லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஆறு மாதத்துக்குள் பிரேக் ஈவன் அடையலாம். தற்போது தொடங்கப்பட்ட அனைத்து பிரான்ஸைசிகளும் லாபத்தில் செயல்பட்டுவருகின்றன.”
கடந்த நிதி ஆண்டு ரூ.10 கோடி அளவுக்கு விற்பனை இருந்தது. நடப்பு நிதி ஆண்டுக்கு விற்பனையை நாங்கள் இலக்காக நிர்ணயம் செய்யவில்லை. எவ்வளவு ஸ்டோர்களை தொடங்குகிறோம் என்பதுதான் எங்கள் இலக்கு என ஆதன் யோகி தெரிவித்தார்.
கட்டுமானப் பராமரிப்பு என்பது அவ்வளவு பெரிய துறையா? எனும் கேள்விக்கு எறும்பு / கொசு சின்னதாக இருக்கலாம். ஆனால், கொடுக்கும் தொல்லைகள் அதிகம். அதுபோல, கட்டிடங்களை பராமரிப்பது என்பது சவாலான பணி.
தண்ணீர் கசிவு, கிராக், ஸ்டீல் துருபிடிக்காமல் இருப்பது என பல பராமரிப்புப் பணிகள் வீட்டுக்கு தேவைப்படும். அதனால்தான் எங்களால் விரிவாக்கம் செய்ய முடிகிறது என யோகி தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் தொடங்கி தமிழகமெங்கும் கால்பதிக்கும் ‘பில்டிங் டாக்டர்’ நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.