ஏழைக் குழந்தைகைளின் பசியை போக்கி, கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் பேராசிரியர்!
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை போக்க FEED என்கிற என்ஜிஓ தொடங்கி ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கி வருகிறார் சந்திரசேகர் குண்டு.
2015ம் ஆண்டு, ஜூலை 6-ம் தேதி. சந்திரசேகர் குண்டு, சந்திரமா தம்பதியின் எட்டு வயது மகன் ஸ்ரீதீப்பிற்கு பிறந்தநாள். வீடே கொண்டாட்டமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. கேக் வெட்டப்பட்டது. அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
பிறந்தநாள் விழா குதூகலமாக முடிந்த பின்னர் நிறைய உணவு மீதமிருந்தது. சந்திரசேகர் கேட்டரிங் செய்தவர்களிடம் உணவைத் திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கேட்டார். அவர்கள் மறுத்துள்ளனர். வேறு வழி தெரியாமல் சந்திரசேகர் மீதமிருந்த உணவை தூக்கியெறிந்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் அருகிலுள்ள ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றார். சற்று தூரத்தில் இரண்டு குழந்தைகள் குப்பைத் தொட்டியில் எதையோ எடுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்று பார்த்தவர் அதிர்ந்து போனார். அந்தக் குழந்தைகள் பிரியாணியில் இருந்து இறைச்சி துண்டுகளைத் தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு பிரியாணியை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் அவரை வெகுவாக பாதித்தது.
அடுத்த நாளே இதுகுறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார். உலகில் பசியோடு இருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இந்த நிலையில் நாட்டில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மிக அதிகளவாக 40 சதவீத உணவு வீணாக்கப்படுகிறது. இந்தத் தகவலை தனது ஆய்வின் மூலம் சந்திரசேகர் தெரிந்துகொண்டார்.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் 67 மில்லியன் டன் உணவு வீணாக்கப்படுவதாகவும் இதன் மதிப்பு 92,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுவதாகவும் ‘க்ளீன் இந்தியா ஜர்னல்’ சுட்டிக் காட்டுகிறது.
இந்த புள்ளிவிவரங்களைக் கண்டு வருந்திய 43 வயது சந்திரசேகர் தன்னால் இயன்ற வகையில் இந்த முயற்சியில் பங்களிக்க விரும்பினார். இவர் அசன்சால் பொறியியல் கல்லூரி பேராசிரியர் என்பதால் கல்லூரி வளாகத்திலேயே தனது முயற்சியைத் தொடங்கத் தீர்மானித்தார்.
“கல்லூரி வளாகத்திற்கு ஒரு பெரிய டிஃபன் பாக்ஸ் எடுத்துச் சென்றேன். கல்லூரி கேண்டீனில் மீதமான உணவை அதில் சேகரித்துக்கொண்டேன். அந்தப் பகுதியின் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இந்தச் சின்ன செயல் எனக்கு அளித்த ஆத்ம திருப்தி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது,” என்றார்.
சில மாதங்களுக்குப் பிறகு தனது முயற்சியை விரிவுபடுத்தி 2016-ம் ஆண்டு FEED (Food Education and Economic Development) என்கிற என்ஜிஓ நிறுவினார். குழந்தைகளிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.
இன்று நகர் முழுவதும் உள்ள குழந்தைகளின் பசியைப் போக்குவதுடன் அவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.
ஆரம்ப நாட்கள்
சந்திரசேகர் கொல்கத்தாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றார். அதன் பிறகு அசன்சாலில் ஆசிரியர் ஆனார்.
சந்திரசேகரின் FEED முயற்சியில் அவரது நண்பர்கள், சக பணியாளர்கள் என பலரும் தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டினார்கள். தினசரி வீணாகும் உணவை சேகரித்து தேவையானவர்களுக்கு வழங்க பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்தனர்.
“ஹோட்டல்கள், திருமண ஏற்பாட்டாளர்கள் போன்றோர்களுடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு விருப்பமில்லை. அவர்களது பணி முடிய இரவு வெகு நேரமாகிவிடும். அந்த உணவை சேகரித்தால் மறுநாள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாப்பது கடினம்,” என்று சந்திரசேகர் குண்டு விவரித்தார்.
இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டபோதும் பல குழந்தைகள் பசியோடு உறங்குவதை அறிந்தார். எனவே அசன்சால் பகுதியில் மூன்று இடங்களில் சமூக சமையலறைகள் அமைத்தார்.
“தன்னார்வலர்கள் தினமும் இரவு உணவு சமைப்பார்கள். அவற்றை பேக் செய்து குடிசைப்பகுதியின் சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். முக்கியத் தேவை இருக்கும் குழந்தைகளுக்கு இந்த உதவி தவறாமல் சென்றடைவதை உறுதிசெய்ய விரும்பினோம். எனவே வலுவிழந்து காணப்படும் குழந்தைகளைக் கண்டறிய ஆய்வு நடத்தினோம்,” என்றார்.
கல்வி உதவி
குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்காததும் பிரச்சனையாக இருப்பதை சந்திரசேகர் கவனித்தார். தினக்கூலிகளாக வேலை செய்யும் பெற்றோர்களால் குழந்தைகளின் படிப்பிற்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்கு செலவு செய்யமுடியவில்லை.
இவ்வாறு கூடுதல் பயிற்சிக்கு செலவு செய்ய முடியாத மாணவர்களில் சிலர் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு வேலை செய்யத் தொடங்கினார்கள். படிப்பில் திறன் குறைவாக இருக்கும் மாணவர்கள் பாடங்களை படித்துப் புரிந்துகொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் 10 சதவீத மாணவர்கள் இடைநிறுத்தம் செய்கின்றனர் என USAID நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு கூடுதல் பயிற்சியளிக்க இவரது குழு ஏற்பாடு செய்தது.
“ஆசிரியர்கள் சிலரை பணியமர்த்தினோம். இவர்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகு கணிதம், அறிவியல், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை எடுப்பார்கள். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகளுக்கு சென்று பாடம் கற்றுக்கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு உணவு மட்டும் கொடுத்தால் போதாது. அவர்களது எதிர்காலத்திற்கு கல்வி மிகவும் முக்கியம்,” என்றார் சந்திரசேகர் குண்டு.
குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ வசதி வழங்குவதற்காக சமீபத்தில் இந்தியன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (IAP) உடன் FEED பார்டனர்ஷ்ப்பில் இணைந்துள்ளது. இதன்படி மருத்துவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை சாலையில் டிஸ்பன்சரி அமைத்து பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரசேகர் ஆரம்பத்தில் தனது சொந்த சேமிப்பு கொண்டே FEED நிறுவினார். சில மாதங்களில் இவரது நண்பர்கள் இணைந்தனர். 43 வயதான இவர் தனது திட்டங்களை விரிவுபடுத்த Milaap தளத்தில் கூட்டுநிதி பிரச்சாரம் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளித்துள்ளது.
“இத்தனை ஆண்டுகளில் குழந்தைகளின் எடை, உயரம், ஆரோக்கியம் ஆகியவை மேம்பட்டுள்ளது. 18 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிறுத்த விகிதம் தற்போது இடைநிறுத்தம் செய்பவர்களே இல்லாத நிலையை எட்டியுள்ளது. வரும் நாட்களிலும் என் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளிடையே மாற்றத்தை கொண்டு சேர்ப்பேன் என நம்புகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா