'கொரோனா' காலத்தில் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
லாக்டவுன் காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? கைகுலுக்கவே கூடாது எனும்போது, உடலுறவு எப்படி சரி? இப்போது குழந்தைக்கு ப்ளான் பண்ணலாமா?
- லாக்டவுன் காலத்தில் எப்போதும்போல் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா?
- ஒருவருக்கொருவர் கைகுலுக்கவே கூடாது எனும்போது, உடலுறவு எப்படி சரி?
- நாங்க கணவன், மனைவி ரெண்டு பேருமே ஒர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கோம். நாங்க அடிக்கடி ஜாலியா இருக்கலாமா?
- இதுவரைக்கும் சிங்கிள்தான். இப்போதான் ஒரு ரிலேஷன்ஷிப் செட் ஆச்சு. என்னோட புதிய பார்ட்னருடன் செக்ஸ் வெச்சுக்கலாமா?
- சோஷியல் டிஸ்டன்ஸிங்ல செக்ஸ் என்பதை எப்படி அப்ரோச் பண்றது?
- நானும் என் பார்ட்னரும் வேலைக்குப் போறவங்க. இப்போதான் வீட்ல ஒண்ணா நிறைய டைம் கிடைக்குது. இப்போது குழந்தைக்கு ப்ளான் பண்ணலாமா?
- இப்படி டிசைன் டிசைனாக செக்ஸ் குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் ஏராளமாகத் தென்படுகின்றன. கொரோனா தாக்கத்தால் லாக்டவுனில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் வேளையில், இதுபோன்ற செக்ஸ் சந்தேகங்கள் எழுவது இயல்பு.
ஆனால், சோஷியல் மீடியாவில் வலம்வரும் ஜோக்குகள், மீம்களைப் போல வீட்டில் ஜாலியாக இருக்கும் வாய்ப்பாகவும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், கொரோனா பரவலின் தன்மை அப்படி.
அதேவேளையில், சோஷியல் டிஸ்டன்ஸிங் என்ற பெயரில் செக்ஸில் இருந்தும் விலகியிருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கவனத்துடனும் பாதுகாப்புடனும் வழக்கமான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர, மருத்துவர்கள் பட்டியலிடும் ஆலோசனைகளைப் பின்பற்றினாலே போதும்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் பி.பி.போஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த மருத்துரும் ஆராய்ச்சியாளருமான ஆர்.கோஷ் ஆகியோரிடம், கொரோனோ வைரஸ் காலத்தில் செக்ஸ் விஷயத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து கேட்டோம். இதுகுறித்து டாக்டர் போஸ் கூறும்போது,
"இந்தக் காலக்கட்டத்தில் எவருமே தங்களது வாழ்க்கைத் துணையைத் தாண்டி, வேறு எவரிடமும் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது. வீட்டில் தங்களது வாழ்க்கைத் துணையுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இருவருமே ஹைஜீன் விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். செக்ஸ் விஷயத்திலும் தூய்மையைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், வழக்கமான செக்ஸ் வாழ்க்கையை தொடர்வதில் எந்தப் பிரச்னையுமே இல்லை," என்றவர் மேலும் கூறியது:
உண்மையில், பேரிடரால் ஏற்பட்டுள்ள லாக்டவுன் காலத்தில், வீட்டில் இருக்கும்போது பர்சனல் - ப்ரொஃபஷனல் காரணிகளால் பெரும் கவலையும், மன அழுத்த பாதிப்பும் உண்டாகும். இதுபோன்ற சமயத்தில், மனநலனுக்கு உகந்ததும், மன பாரங்களைப் போக்குவதில் சிறந்தத உத்தியுமாகவே செக்ஸ் துணைபுரியும். எனவே, ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லதுதான்!"
சோஷியல் டிஸ்டன்ஸிங்கை நெருக்கமான உறவுடன் தொடர்புப்படுத்தி குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கூறும் டாக்டர் கோஷ், கொரோனா காலத்தில் செக்ஸில் ஈடுபடும்போது சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும் எச்சரிக்கிறார்.
தற்போதைய சூழலில் மக்களை இரு வகையினராக பிரிக்கிறார் கோஷ். அவை:
1. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்
2. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குறைந்த வாய்ப்புள்ளவர்கள்
யாருக்கெல்லாம் அதிக வாய்ப்பு?
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் பணியாளர்கள், காவலர்கள், போலீஸ் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வோர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தாக்கக் கூடிய ரிஸ்க் அதிகம்.
"கொரோனா தாக்கக்கூடிய ரிஸ்க் அதிகமாக இருப்பதால், இவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே விலகியிருக்க வேண்டும். வீட்டிலேயே சோஷியல் டிஸ்டன்ஸிங்கை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, தங்கள் வாழ்க்கைத் துணையுடனும் நெருங்கக் கூடாது. கொரோனா தாக்கக் கூடிய ரிஸ்க் அதிகம் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருப்பதே இப்போதைக்கு நல்லது," என்கிறார் டாக்டர் கோஷ்.
சரி, கொரோனா ரிஸ்க் குறைவானவர்களுக்கு..?
"இவர்கள் நெருக்கமான உறவிலிருந்து விலகியிருக்க வேண்டியதில்லை. எப்போதும்போல் இருக்கலாம். எனினும், கொரோனா ரிஸ்க் குறைவானர்களில் எவரேனும் மளிகைக் கடை, மார்க்கெட், மெடிக்கல் ஷாப் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போவோராக இருந்தால், இவர்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் காட்டாமல் இருப்பதே நல்லது."
கொரோனா வைரஸ் தாக்கக் கூடிய அதிக ரிஸ்க் உள்ள இடங்களில் வலம்வராமல் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருப்பவர்கள் எந்த வகையிலும் செக்ஸ் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
கொரோனாவோ, இல்லையோ... காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால்?
"முதலில் மருத்துவத் துறையினரிடம் ஆலோசனைகளை நாடவேண்டும். இந்த அறிகுறிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இரண்டு வாரங்களுக்கு செல்ஃப் - குவாரன்டைன் முறையைப் பின்பற்றி தனித்திருப்பது நல்லது. அத்துடன், தங்களது வாழ்க்கைத் துணையுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்."
செக்ஸ் ஏன் இப்போது தேவை?
மன அழுத்தமும் கவலையும் சூழும் வேளையில், செக்ஸில் மிகுதியாக ஈடுபடுவது நிச்சயம் மனநலனுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் போஸ்.
"உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வழக்கம்போலவே ரெகுலராக செக்ஸில் ஈடுபடலாம் என்று வலுவாகப் பரிந்துரைக்கிறேன். இதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. அதேநேரத்தில், செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவுதல், வாயை நேர்த்தியாகச் சுத்தம் செய்தல் போன்ற செல்ஃப்-ஹைஜீன் விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்."
விந்தணுகள் மூலமாகவோ அல்லது கர்ப்பப்பை வாயிலிருந்து வெளியாகும் திரவத்தின் மூலமாகவோ கொரோனா தொற்று பரவும் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உடலுறவின் மூலமாக இந்தத் தொற்று பரவுவதற்கான சாத்தியமில்லை என்று நியூயார்க் நகர சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
"ஆகவே, ஓரல் அல்லது ரெகுலர் செக்ஸ் அல்லது முத்தமிடுதல் ஆகியவை ஒரு பிரச்னை இல்லை. ஆனால், 'ஏனல் செக்ஸ்' (Anal Sex) முறையை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எனினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செக்ஸ் எனும்போது எந்தப் பிரச்னையும் இல்லை."
மருத்துவர் கோஷ், மருத்துவர் போஸ் ஆகியோர் சொல்வதில் குறிப்பிடத்தக்க ஒன்று: இணையரில் ஒருவருக்கு சுவாசப் பிரச்னை இருந்தாலும், செக்ஸ் விஷயத்தில் மிகுதியான கவனம் தேவை.
"உங்களின் பார்ட்னருக்கு சுவாசப் பிரச்னையோ, அல்லது அதனுடன் கூடிய காய்ச்சலோ இருக்கும்பட்சத்தில், செக்ஸ் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அதுபோன்ற சமயங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளாததுதான் நல்லது."
அதேபோல், மருத்துவர் போஸ் குறிப்பிடும் இன்னொரு விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை. ஆம், வாழ்க்கைத் துணை அல்லாமல் வேறு எவருடனும் உடலுறவு கூடவே கூடாது.
"வாழ்க்கைத் துணை இல்லாதவர்கள் இப்போதைக்கு போன் அல்லது வீடியோ செக்ஸ் நாடுவதே சாலச் சிறந்தது!"
குழந்தைக்குத் திட்டமிடலாமா?
திருமணமாகி சில நாள்களே ஆன நிலையில், கணவன் - மனைவி இருவருமே அலுவலகம் செல்லும் சூழலில், இப்போது லாக்டவுன் காலத்தால் வீட்டில் எப்போதும் சேர்ந்திருக்க நேரம் வாய்த்திருக்கிறது. இந்த நேரத்தில், குழந்தைக்குத் திட்டமிடுவது சரியாக இருக்கும் என்று சிலர் கருதலாம்.
ஆனால், மனைவி கருவுற்றால் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க முடியாது. இந்தக் கொரோனா லாக்டவுன் காலம் என்பது எப்போது முடிவுக்கு வரும் என்பது இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, இப்போதைக்கு குழந்தைக்குத் திட்டமிடாமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்கின்றனர் மகப்பேரு மருத்துவர்கள்.
கொரோனா கால செக்ஸுக்கு 7 கட்டளைகள்:
ஆக, தற்போதைய லாக்டவுன் காலத்தில் செக்ஸ் தொடர்பாக கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய 7 கட்டளைகள் இவைதான்:
1) செக்ஸ் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்தத் தொற்று உள்ளவர்களின் இருமல், தும்மல், எச்சில் மூலம் மற்றவருக்கு நோய் பரவும். அந்த வகையில், செக்ஸில் ஈடுபடுகையில் தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல், முன்விளையாட்டுகளைத் தவிர்க்க முடியாது என்பதை கவனத்தில்கொள்ளவும்.
2) சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், இப்போதைக்கு செக்ஸில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
3) வாழ்க்கைத் துணையுடன் செக்ஸில் ஈடுபடுவோர் சுய சுகாதாரத்தை முழுமையாகப் பேணுவது அவசியம்.
4) கொரோனா காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
5) வாழ்க்கைத் துணை இல்லாதவர்கள் நேரடி உறவில் ஈடுபடாமல் போனும் கையுமாக இருப்பதே நல்லது.
6) மன அழுத்தத்தைப் போக்கும் மருந்து என்கிற வகையில், சுய சுகாதாரத்தைப் பேணும் கணவனும் மனைவியும் ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது. எனினும், செக்ஸுக்கு முன்பும் பின்பும் அந்தரங்க உறுப்புகள் உள்ளிட்ட உடம்பின் அனைத்து பாகங்களிலும் சுகாதாரம் பேணுவது அவசியம்.
7) கொரோனா ரிஸ்க் உள்ளவர்கள் குடும்பத்தில் மட்டுமின்றி, வாழ்க்கைத் துணையிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.
- தொகுப்பு: ப்ரியன்