'ஆண்டுக்கு ரூ.64 லட்சம் சம்பள வேலை' - பெற்றோருக்கு பெருமை சேர்த்த சேலம் விவசாயி மகள்!
சேலத்தைச் சேர்ந்த விவசாயி மகளான ரம்யா நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தில் ஆண்டுக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த விவசாயி மகளான ரம்யா, நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தில் ஆண்டுக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பெண் குழந்தைகளை படிக்க வைப்பதே வரதட்சணையை குறைப்பதற்காக மட்டுமே என்ற எண்ணம் கிராமப்புறங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம் இன்றளவும் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளைப் படிக்க அனுமதித்தாலும், வேறு ஊருக்கோ, வெளி மாநிலத்திற்கோ அனுப்பி படிக்க வைக்கத் தயாராக இல்லை.
இந்நிலையை மாற்றும் விதமாக சேலத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த ரம்யா, ஒரிசாவில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்ததோடு, ஆண்டுக்கு 64 லட்சத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் பெற்று அசத்தியுள்ளார்.
ஐஐஎம் மாணவி ரம்யா:
தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள சக்கரசெட்டிபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரம்யா ரத்தினம், விவசாய தம்பதிக்கு மகளாக பிறந்துள்ளார். நாமக்கல்லில் உள்ள கல்லூரியில் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ரம்யா, கூடுதல் பாடமாக மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்டையும் படித்துள்ளார்.
"அப்போதுதான் நான் வணிகத்தில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போதே பொதுத் நுழைவுத் தேர்வுக்கு (CAT) தயாராக ஆரம்பித்தேன். பள்ளியில் கூட கணிதம் எனக்கு மிகவும் பிடித்த பாடமாக இருந்தது, ஆனால் எனக்கு இலக்கியம் பிடிக்கும்,” என்று செய்தித்தாள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எம்பிஏ படிக்க வேண்டும் என்ற அவரது கனவு இருந்தாலும், ரம்யாவுக்கு அது எளிதான பயணமாக அமையவில்லை. மேற்படிப்பிற்கு அனுமதிக்க அவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தாலும், நிதி நிலைமை அவர்களின் முடிவுக்கு ஆதரவாக இல்லை.
"எனது பெற்றோர்கள் பெரும்பாலும் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்கிறார்கள், அவர்களால் என்னை மேற்கொண்டு படிக்க வைக்க பணம் இல்லை. அதனால் நான் கல்விக்கடன் வாங்க முடிவு செய்தேன். சில ஆண்டுகளில் அதை திருப்பிச் செலுத்த முடியும் என நம்பினேன்.”
அதன் பின்னர், ரம்யாவிற்கு ஒரிசாவில் உள்ள ஐஐஎம்-யில் எம்பிஏ படிக்க சீட் கிடைத்துள்ளது. அதனையடுத்து, கல்விக்கடனும் கிடைக்க, பெற்றோர்கள் சம்மதத்தோடு மேற்படிப்பிற்காக ஒரிசா சென்றுள்ளார்.
“என் பெற்றோர்களுக்கு ஐஐஎம் என்றால் என்ன என்பது கூட தெரியாது. எனக்கு அங்கு சீட் கிடைத்ததும் ஐஐஎம் செல்ல அவர்களுக்கு அதன் பெருமையை புரிவைக்க சில நாட்கள் ஆனது,” என்கிறார் ரம்யா.
தற்போது முதல் தலைமுறை பட்டதாரியான ரம்யா, நைஜீரியாவில் உள்ள டோலாரம் என்ற உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.64.15 லட்சம் சம்பள பேக்கேஜில் பணிக்கு சேர உள்ளார்.
"இந்த வேலை எனக்கு நிறைய அர்த்தம் தந்துள்ளது. எனக்கு வேலை கிடைத்ததும் என் பெற்றோரும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். எனக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் எனது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது,” என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்.
வரும் மே மாதம் வேலையில் சேருவதற்காக ரம்யா நைஜீரியா செல்ல உள்ளார்.
ஜெய்ப்பூர் அவ்னி:
ரம்யாவைப் போலவே ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.64.51 லட்சம் என்ற அதிகபட்ச பேக்கேஜைப் பெற்றுள்ளார். இவர் ஜூலை மாதம் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் பணியில் சேர உள்ளார்.
அவ்னி ஜெய்ப்பூரில் உள்ள ஜேபி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்தார், மேலும் ஐஐஎம் சம்பல்பூரில் சேருவதற்கு முன்பு இன்ஃபோசிஸில் பணிபுரிந்தார். அவ்னியின் தாயார் பள்ளி முதல்வர், பல் மருத்துவரான இவரது தந்தை காலமாகிவிட்டார்.
"கொரோனா தொற்றுநோயின் போது, நான் எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். நான் ஒரு நல்ல வேலையைப் பெறவும், என் குடும்பத்தைப் பாதுகாக்கவும் விரும்பினேன்"
அதன் பின்னர், எம்பிஏ படிக்க முடிவெடுத்த அவ்னி, ஒரிசாவில் உள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார். அவ்னிக்கு மின்னஞ்சலில் வேலை வாய்ப்பு கிடைத்ததும், மகிழ்ச்சியில் குதித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
"எனது கனவு வேலையை நான் பெற்றுள்ளேன். வேலை வாய்ப்பைப் பற்றி நான் அறிந்தபோது அது மிகவும் உண்மையாக இருந்தது,” என்கிறார்.
ரம்யா மற்றும் அவ்னி இருவரும் தற்போது தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, கார்ப்பரேட் உலகில் மற்ற பெண்களுக்கும் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி: Quint