லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு; அதில் வாங்கிய நிலத்தில் புதையல்; முதியவருக்கு அடுத்தடுத்த அதிர்ஷ்டம்!
கதையல்ல நிஜம்: கிறிஸ்துமஸ் லாட்டரியில் ஜாக்பாட் அடிக்க, பல்கு அமொண்ட் பரிசு விழுந்தது. அவரது நீண்டநாள் விவசாய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அதில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் கிடைத்தது புதையல்...
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டுமட்டுமல்ல, சில சமயங்களில் குழி தோண்டுகையிலும் கொடுக்கும் என்பதை மெய்பித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த ரத்னகரன் பிள்ளையின் வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த மகிழ்வு அளிக்கும் நிகழ்வுகள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கிளாமானூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ரத்னகரன் பிள்ளை. முன்னாள் வார்டு உறுப்பினர். கடந்த ஜனவரியில் தான், அதிர்ஷ்டதேவதை 66 வயதான பி.ரத்னகரன் பிள்ளை மீது ஒரு பரந்த புன்னகையைப் பறக்கவிட்டு, அவருக்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி வெற்றியை பெற்று தந்தது. லட்டரியில் அவருக்கு அடித்ததோ 6 கோடி ரூபாய்ய்ய்...
முன்னாள் வார்டு உறுப்பினரும், கடந்த 40 ஆண்டுகளாக கிளிமனூரில் வசிப்பவருமான ரத்னகரனிற்கு விவசாயம் செய்யவேண்டும் என்பது அவரது நீண்டநாள் விருப்பம். அதனால், அவர் லாட்டரியில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை விவசாயம் செய்வதற்கான நிலத்தை வாங்க முடிவு செய்தார்.
சில மாதங்களுக்கு முன், திருவனந்தபுரத்தின் கிளிமனூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வளமான 27 சென்ட் நிலத்தை வாங்கினார். திருப்பல்கடல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய கிருஷ்ணா கோயிலுக்கு அடுத்ததாக இருந்தது அவரது விவசாய பூமி.
இருப்பினும் அடுத்த வருடமே, தனக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடிக்கும் என்பதை ரத்னகரன் அறிந்திருக்கமாட்டார். ஆம்,
இம்முறை அவரது அதிர்ஷ்டம் கோயிலுக்கு அடுத்ததாக வாங்கிய அவரது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு, 100 ஆண்டுகளாகக் காத்திருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை (3.12.19) காலை, ரத்னகரன் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு விதைக்க குழி தோண்டிள்ளார். அப்போது அவரது மண்வாரி மென்மையான மேல் மண்ணுக்குக் கீழிருந்த கடினமான மேற்பரப்பைத் தட்டியது.
“நான் ஒரு மண்பானையை வெளியே எடுத்தேன். அதனுள்ளே ஆயிரக்கணக்கான செப்பு நாணயங்கள் இருந்தன, அவை முந்தைய திருவிதாங்கூர் இராச்சியத்திலிருந்து வந்த பண்டைய நாணயம் என்பது எனக்கு பின்பு தான் தெரியும்,” என்று தி நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரத்னகரன்.
ரத்னகரன் கண்டுபிடித்த மண் பானையில் 20 கிலோ மற்றும் 400 கிராம் எடையுள்ள 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன. காலத்தினால் செம்பு நாணயங்கள் பச்சை நிறமாக மாறினாலும், கிட்டத்தட்ட அனைத்து நாணயங்களும் திருவிதாங்கூரின் இரு மகாராஜாக்களின் ஆட்சியில் இருந்தவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர், இந்தியாவின் தற்காலிக கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு சமஸ்தானமாக இருந்தது. திருவிதாங்கூரை 1885ம் ஆண்டிலிருந்து 1924 வரை ஆட்சி செய்து மக்களால் ஸ்ரீ முலாம் திருனல் என்று பிரபலமாக அறியப்பட்ட ஸ்ரீ முலாம் திருனல் ராம வர்மாவின் ஆட்சி காலத்திலும் மற்றும் 1924ம் ஆண்டு முதல் 1949 வரை திருவிதாங்கூரை ஆட்சிபுரிந்து ‘திருவிதாங்கூரின் கடைசி ஆளும் மகாராஜா’ என்ற பெயர் பெற்ற ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மாவின் ஆட்சி காலத்திலும் புழங்கப்பட்டுள்ளன இந்நாணயங்கள்.
புதையலைக் கண்டறிந்ததும், அதிர்ச்சியடைந்த 66 வயதான ரத்னகரன், உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் கண்டுபிடிப்பை ஆய்வு செய்ய மாநில தொல்பொருள் துறை அதிகாரிகளை அழைத்து வந்துள்ளனர். பின்னர் நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன என்று ரத்னகரன் கூறினார்.
திருவிதாங்கூரின் ஃபனம்!
1949ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ரூபாய்-பைசா முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, திருவிதாங்கூர் மகாராஜாக்கள் ஃபனம் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால நாணய முறையைப் பயன்படுத்தினர். மலையாளத்தில் ஃ பனம் என்றால் பணம் அல்லது செல்வம் எனப்பொருள்.
இந்த நாணயங்கள் வெள்ளி, தங்கம், மற்றும் தாமிரத்தால் அச்சிடப்பட்டுள்ளன. திருவிதாங்கூரின் அதிகப்பட்ச பணமதிப்பு ‘திருவிதாங்கூர் ரூபாய்’ ஆகும். வெள்ளியால் அச்சிடப்பட்ட 7 ஃபனம்களை சேர்ந்தது 1 ‘திருவிதாங்கூர் ரூபாய்’. தாமிரத்தாலான 4 சக்ராம் சேர்ந்தது 1 ஃபனம். மிகக் குறைந்த மதிப்பு ‘ரொக்கம்’. 16 ரொக்கங்கள் சேர்ந்தது 1 சக்ராம்.
தொல்பொருள் துறையின் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில்,
“நாணயவியல் நிபுணர்களுடன் புதையலை ஆய்வு செய்தபோது, கிருஷ்ணன் கோயிலுக்கு அருகில் கிடைத்த பானையிலிருந்த அனைத்து நாணயங்களும் சக்ராம் மற்றும் ரொக்கமாகும். பானையில் கிடைத்த 10 கிராம் சக்ராம்கள் சிலவற்றில் ஒரு புறம் மகாராஜா சித்திரா திருனல் பால ராம வர்மாவின் மார்பளவு சித்திரமும், மறுபுறத்தில் சங்கும் பொறிக்கப்பட்டிருந்தது,” என்றார்.
“தாமிரத்திலான 4 வகையான நாணயங்கள் இருந்தன. சிலவற்றில் மலையாளத்தில் ‘சக்ரம் ஒன்னு’ என்று பொறிக்கப்படிருந்தன. மற்றவற்றில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சிலவற்றில் மகாராஜா ராம வர்மாவை குறிக்கும் வகையில் ‘ஆர்.வி’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
சில நாணயங்கள் 100 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கும். அவை 1885ம் ஆண்டிற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்,” என்றார் ரத்னகரன்
நாணய மதிப்பீடும்! ரத்னகரனுக்கான பங்கீடும்!
இந்த நாணயங்களின் சரியான தற்போதைய மதிப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அவற்றை மதிப்பிடுவதற்காக கேரள மாநில தொல்பொருள் துறை அனைத்து செயல்முறைகளையும் மேற்கொண்டுவருவதாக ராஜேஷ் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
“புதையல் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிராந்திய பாதுகாப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அவை முதலில் சுத்தம் செய்யப்படும். ஏனெனில் பெரும்பாலான நாணயங்கள் ஆக்ஸிஜனேற்றப்பட்டு, பச்சை நிறத்திலுள்ளன. மேற்பரப்பிலுள்ள செப்பு ஆக்சைடையும் அகற்ற வேண்டும். அதன் பின்னர், நாணயங்களின் மதிப்பீட்டிற்காக நிபுணர் குழு ஒன்று அவர்களுடன் இணைந்து பணிபுரியும்,” என்றார்.
இந்த நாணயங்களின் மூலமுதலான உரிமையாளரைப் பற்றி கிளிமனூரில் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு அருகில் ஒரு வைத்தியர் வாழ்ந்தது பற்றிய கதைகளைக் கேட்டுள்ளதாக ரத்னகரன் பிள்ளை கூறினார்.
“அந்த வைத்தியரின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பணத்தை அவரது வீட்டின் அடியில் ஒரு துளைக்குள் மறைத்து வைத்திருக்கலாம். ஏனெனில், ஒரு காலத்தில் இங்கிருந்த வைத்தியரின் வீட்டின் கண்ணி மூலா (தென்மேற்கு மூலையில்) இருக்கும் அறையிலிருந்தே நாங்கள் பானையை கண்டுபிடித்தோம். கட்டிடக்கலை விஞ்ஞானமான வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணி மூலா ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே அவர் இந்த புனித அறையில் பணத்தை பாதுகாத்து வைத்திருக்கலாம்,” என்றுகூறினார் ரத்னகரன் பிள்ளை.
கேரள புதையல் சட்டம் 1968ன் பிரிவு 3ன் படி, 25 ரூபாயுக்கு மேல் மதிப்புடைய எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி,
தொல்பொருள், வரலாறு மற்றும் கலை தொடர்பான பொருள் எனில் அது எத்தகைய மதிப்பாக இருந்தாலும் புதையலின் கண்டுபிடிப்பாளர் அதை மாவட்ட கலெக்டரிடமோ அல்லது அருகிலுள்ள அரசாங்க கருவூலத்திலோ ஒப்படைக்க வேண்டும். அரசுக்கு அறிவிக்கத் தவறினால் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். புதையலை வைத்துகொள்ள ரத்னகரனுக்கு உரிமை இல்லை என்றாலும், உடனடியாக புதையலை அரசிடம் ஒப்படைத்ததற்காக புதையலின் மதிப்புக்கு ஏற்ப ஒரு பொருத்தமான தொகையை அவருக்கு இழப்பீடாக அரசு வழங்கும் என்று கூறினார் ராஜேஷ்.
“புதையலில் மதிப்பைப் பற்றி நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அதைக் கண்டுபிடித்தபோதும் எனக்கு அதிலிருந்து எவ்வளவு கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை. எனது நிலத்திலிருந்து இந்த பழங்காலத்தை கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்தேன். இப்போது அது அவர்களின் பாதுகாப்பான காவலில் உள்ளது,” என்று பெருமிதத்துடன் கூறினார் ரத்னகரன் பிள்ளை.
பட உதவி: கேரளா கெளமுதி மற்றும் தி நியூஸ் மினிட்