அழுக்கு தண்ணி; குப்பைக்கூளம்: நடுவில் ரொமான்ஸ் - வைரல் ஆகும் பரிசுத்த காதல் போட்டோஷூட்!
நம்மில் பலரும் கண்ணால் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு கடந்து போகும், குப்பைகள் நிறைந்த சாக்கடை நீர் போன்ற நீர்நிலை ஒன்றில் நடத்தப்பட்ட போட்டோஷூட் நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘தாலி கட்டும் போதுகூட நான் என் கணவரின்/மனைவியின் முகத்தைப் பார்க்கவில்லை, ஒரு வாரம் கழித்துத்தான் அவரது முகத்தையே நன்றாக நிமிர்ந்து பார்த்தேன்’ என நம் தாத்தா, பாட்டிகள் அவர்கள் காலத்து திருமணக் கதைகளைக் கூறக் கேட்டிருப்போம். இதைக் கேட்கவே நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால், இப்போது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறையே வேறு.
முந்தைய தலைமுறையைக் காட்டிலும் இப்போது காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளன. எனவே, காதலர்கள் எப்படியெல்லாம் தங்களது திருமணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய வெட்டிங் போட்டோசூட் (Pre/post wedding photoshoot) எப்படி மற்றவர்களைக் கவரும்படி இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் ஒவ்வொரு விசயமாக பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.
தங்களது பிக் டேயில் தாங்கள் இருவரும் தான் கதாநாயகன், கதாநாயகி என்பதால், அப்போது டிரெண்டிங்கில் உள்ள பாடல்களை பெரும்பாலும் மறு உருவாக்கம் (recreation) செய்வது போல் தங்களது வெட்டிங் போட்டோஷூட்டை வடிவமைக்கவே பெரும்பாலானோர் விரும்புவார்கள். ஆனால், அவர்களில் இருந்து சிலர் வேறுபட்டு வித்தியாசமான கான்செப்ட்டில் தங்கள் போட்டோஷூட்டை நடத்துவார்கள்.
அப்படிப்பட்ட வித்தியாசமான போட்டோஷூட்கள் சமூகவலைதளங்களில் எளிதில் வைரலாகி விடுகிறது. இப்போதும் அப்படித்தான் வித்தியாசமான கப்புள் போட்டோஷூட் (couple photoshoot) புகைப்படங்கள் சில இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
மணமக்கள் என்பதால் அழகான நேர்த்தியான உடை உடுத்தி, கண்ணை உறுத்தாத ஒப்பனையோடு அந்த புகைப்படங்களில் இருப்பதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஒரு சிலர் நீருக்கடியில், கட்டிடத் தொழிலாளிகளாக, கிராமத்து நாயகன், நாயகியாக என என்னதான் வித்தியாசம் காட்டினாலும், மேலே கூறிய விசயங்கள் நிச்சயம் அதில் இருக்கும்.
ஆனால், இப்போது வைரலாகி இருக்கும் புகைப்படங்கள் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நம்மில் பலரும் கண்ணால் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு கடந்து போகும், குப்பைகள் நிறைந்த சாக்கடை நீர் போன்ற நீர்நிலை ஒன்றில் தங்களது போட்டோஷூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது ஒரு ஜோடி மட்டுமல்ல... கிட்டத்தட்ட நான்கைந்து ஜோடிகள் இந்த தீமில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். அதிக ஆடம்பரம் இல்லாமல், ஏதோ நீச்சல்குளத்தில் போஸ் கொடுப்பது போல், இந்த புகைப்படங்களில் அவர்கள் காணப்படுகின்றனர்.
சுற்றிலும் குப்பைக் கூளங்கள் மிதந்து கொண்டிருக்க, அதனைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், அந்த நாற்றத்தின் சுவடே முகத்தில் தெரியாமல், புகைப்படங்களுக்கு அவர்கள் போஸ் கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் யார்? அதில் இருப்பவர்கள் யார்? உண்மையாகவே சமூக அக்கறையுடன் இந்த போட்டோஷூட்டை நடத்தினார்களா? இல்லை பிரபலமாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தினார்களா? என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், #பரிசுத்தமான காதல் என்ற ஹேஷ்டேக்கில் இது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி விட்டது.
வழக்கம் போலவே, இந்த போட்டோஷூட் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
‘நீர்நிலைகளை அசுத்தப்படுத்துபவர்களுக்கு இந்த புகைப்படங்கள் நல்லதொரு பாடம்’ எனப் பாராட்டுபவர்கள் ஒருபுறம் இருக்க, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை... தேவையில்லாமல் நோயை வாங்கிச் செல்கிறார்கள்’ என மற்றொருபுறமும் விவாதித்துக் கொண்டிருக்க, ‘அட இதெல்லாமே கிராபிக்ஸ் பாஸ்... போட்டோஷாப்ல யாரோ புகுந்து விளையாடி இருக்காங்க..’ என ஒரு குரூப்பும் கமெண்ட்களைத் தட்டி வருகின்றன.
இதற்கு முன்னரும் இதே போல், கேரளாவில் ஆடைகள் இல்லாமல் பெட்ஷீட்டைச் சுற்றிக் கொண்டு மணமக்கள் எடுத்த போட்டோஷூட் ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியது.
அதேபோல், வயல்வெளியில் உடல் முழுவதும் சகதியை பூசிக் கொண்டு, ஒரு ஜோடி எடுத்த புகைப்படங்களும் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த வரிசையில் இந்த, ‘பரிசுத்தமான காதல்’ புகைப்படங்களும் சேர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
சடலமாக மணமகன்; சுடுகாட்டில் வித்தியாச Pre-wedding போட்டோஷூட்: வைரலாகும் போட்டோக்கள்!