ஊழியர்களின் நண்பன், உற்ற சமயத்தில் உதவுபவர்: அவர் ரத்தன் டாடா!
டாடாவின் அண்மைச்செயல்பாடு வைரலாகி வருகிறது!
’கடினமான நேரத்தில்தான் ஒருவரை அறிந்துகொள்ள முடியும்,’ என்பார்கள். அப்படியான நேரத்தையும், நல்லுள்ளம் படைத்த பல்வேறு மனிதர்களையும் 2020ம் ஆண்டு நமக்கு அடையாளம் காட்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளிலும், பெருமழையிலும், உதவும் கரங்களால் உலகம் மீண்டது. அந்த உதவும் எண்ணத்தையும், இரக்கமான குணத்தையும் தன்னிடம் கொண்டிருப்பவர் தான் ரத்தன் டாடா.
அவரை தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கு இந்த உண்மை புரியும். இந்தியாவின் முன்னணி பிசினஸ் ஐகான் டாடாவின் அண்மைச்செயல்பாடு வைரலாகி வருகிறது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.
தன்னிடம் வேலைபார்த்தவரின் வீட்டுக்குச் சென்று உடல்நலம் விசாரித்துள்ளார் டாடா. இந்த சந்திப்பு யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்று ரகசியமாக வைத்திருந்தபோதிலும் அது எப்படியோ கசிந்துவிட்டது.
தன்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் குன்றி இருப்பதை அறிந்து அவரை வீட்டுக்கேச் சென்று சந்தித்துள்ளார் 83 வயதான டாடா. மும்பையிலிருந்து பூனே- பிரெண்ட்ஸ் சொசைட்டியில் உள்ள அந்த ஊழியரின் வீட்டுக்கு கார் மூலம் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஊழியரின் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி ரத்தன் டாடாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பொதுவாகவே ஊழியர்களின் மீது அக்கறை காட்டக்கூடியவர் டாடா. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் உழைப்புதான் பிரதானமானது என நம்பக்கூடியவர்.
அதனடிப்படையில்தான், கடந்த காலங்களில் ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 80 ஊழியர்களின் குடும்பங்களையும், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்க அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி, அவர்களின் முழு குடும்பத்துக்குமான மருத்துவச் செலவினங்களையும் ஏற்றுக்கொண்டார்.
செல்லப்பிராணிகள் மட்டுமின்றி அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டக்கூடியவராக இருப்பதால் தான் இன்றும், என்றும் டாடா ரத்தனமாகவே இருக்கிறார்.
மோசமான நெருக்கடி காலங்களில் உலகம் மீண்டும் வரும் இந்த நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது..