அமெரிக்க வேலை, லட்சங்களில் சம்பளத்தை உதறிவிட்டு ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்களை முன்னேற்றும் விஞ்ஞானி!
அமெரிக்காவில் வேலை பார்த்த விஞ்ஞானியான சௌந்தர்ராஜன், செல்போன் சிக்னல், இணையதளம் என எந்த பெரிய வசதிகளும் இல்லாத ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடியின பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு பாராட்டத்தக்க செயல்களைச் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும், அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் இங்கு பலரது கனவுகளில் ஒன்று. ஆனால், அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், இந்தியா திரும்பி, கோவை அருகே ஆனைக்கட்டிப் பகுதியில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறார் என்றால் கேட்பதற்கு ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.
தனக்காக இல்லாமல், பழங்குடியின பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது சொந்த சேமிப்பைப் பயன்படுத்தி, அங்கேயே தங்கி இருந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அந்த மாமனிதரின் பெயர் சௌந்தர்ராஜன்.
பழங்குடி இன மக்களின், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னை அர்ப்பணித்து, எந்த வணிக நோக்கமும் இல்லாமல் இந்த சேவையைச் செய்து வருகிறார் சௌந்தர்ராஜன்.
குருவின் வேண்டுகோள்
அமெரிக்காவின் ஒக்லஹாமா பல்கலைக்கழகம், வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் என அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்துடன், உயர்பதவிகளில் வகித்து வந்தவர்தான் சௌந்தர்ராஜன். தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளரான ஹெச்.சி.ப்ரௌன் தலைமையிலான குழுவில் 1996ம் ஆண்டுவரை ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வந்தவர் ஆவார். இவரது ஒரு கண்டுபிடிப்பு இப்போதும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. பின்னர், இந்தியா திரும்பியவர் பல முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருந்துள்ளார்.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவரைக் குருவாக கருதி பழகி வந்துள்ளார் சௌந்தர்ராஜன். அப்போது அவர், சௌந்தர்ராஜனுக்கு ஆனைக்கட்டிப் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் சிறிதளவு இடம் ஒன்றை அளித்து, அம்மக்களின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனது குருவின் பேச்சை தட்டாத சௌந்தர்ராஜன், ரூ.500 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவை வந்து சேர்ந்தார். இணையதள வசதி, தொலைபேசி வசதி என எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் சென்று சேராத அந்த இடத்தில் வாழும் மக்களின் பரிதாப நிலை அவரை வருந்தச் செய்தது. எனவே தனது பட்டறிவு மற்றும் படிப்பறிவைக் கொண்டு அப்பகுதி பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிவு செய்தார்.
“பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது குரு சுவாமி தயானந்த சரஸ்வதியின் வேண்டுகோளாக இருந்தது. எனவே, எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 2012ம் ஆண்டு ஆனைக்கட்டி அருகேயுள்ள பட்டிசாலை கிராமத்தை நான் தத்தெடுத்தேன். அங்கு 'தயா சேவா சதன்' (Daya seva sadan) என்ற பெயரில், பழங்குடி இனப் பெண்களின் முன்னேற்றத்திற்கான வேலைகளை ஆரம்பித்தேன்," என்கிறார்.
ஆரம்பத்தில் நான் இங்கு வந்தபோது, இங்குள்ள பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மதுவுக்கு அடிமையான கணவர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் இருந்த தொழில் வாய்ப்புகளைக் கொண்டே, அவர்களது வாழ்க்கை நிலையை மாற்றினேன்.
”அங்கு கிடைக்கும் பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரித்து, அதனை எப்படி சந்தைப் படுத்துவது என்பதை நான் கற்றுக் கொடுத்து வருகிறேன்,” என்கிறார் சௌந்தர்ராஜன்.
பிரதமரின் பாராட்டு
பாக்குமட்டை தயாரிப்பு, பல வகையான தேன், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் இயற்கையான ஜாம் வகைகள், சூப் வகைகள், சோப்புகள், வாழை நாரைப் பயன்படுத்தி யோகா மேட் என வனப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை தனது சொந்தச் செலவில் அளித்து வரும் சௌந்தர்ராஜன், அப்பொருட்களை வாழ்வாதார மையம் மற்றும் அங்காடித் தெரு மூலம் விற்பனை செய்யும் மார்க்கெட்டிங் மற்றும் அக்கௌண்டிங் விசயங்களையும் அப்பகுதி பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
நிறைகுடம் தழும்பாது என்பதுபோல், சத்தமில்லாமல் இவர் செய்து வந்த சேவை உலகம் முழுவதும் பிரபலமானது பிரதமர் மோடியின் ’மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம்தான். ஆனைக்கட்டி பழங்குடி இனப் பெண்கள் தயாரிக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகள் மற்றும் தட்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து, மன் கி பாத் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் பேசினார். அதன் மூலம்தான் சௌந்தர்ராஜன் இந்த சேவை மேலும் பலரைச் சென்றடைந்தது.
”சுற்றுச்சூழலைப் பாதிக்காத தேநீர் கோப்பைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே, களிமண்ணால் தேநீர் கோப்பைகள் மற்றும் தட்டுகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இங்குள்ள பெண்களுக்கு நான் கற்றுக் கொடுத்தேன். முதல்கட்டமாக இந்த கப்புகளை வாங்க கத்தாரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டியது. அவர்களது நிறுவனத்திற்கு சுமார் 10 ஆயிரம் தேநீர் கோப்பைகளை செய்து கொடுத்தோம்.”
எங்களது இந்த சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தயாரிப்புகள் குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி, எங்களைக் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார். அதன் மூலம் எங்களது தயாரிப்புகள் பற்றிய விழிப்புணர்வு சர்வதேச அளவில் சென்று சேர்ந்துள்ளது என நம்புகிறோம். இதன் மூலம் சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சௌந்தர்ராஜன்.
மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய என கோடிக்கணக்கில் செலவு செய்து பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், ஆடம்பரமில்லாமல், விளம்பரங்கள் இல்லாமல், சத்தமில்லாமல் இப்பகுதி பெண்களின் தயாரிப்புகளை வெளிநாடு வரை சென்று சந்தைப்படுத்தி வருகிறார் சௌந்தர்ராஜன்.
ஊட்டச்சத்து பானம்
அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, குழந்தைகளுக்கு கல்வி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார் சௌந்தர்ராஜன். மற்ற நன்கொடைகள் எதையும் எதிர்பார்க்காமல், தனது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து மட்டுமே இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கான வேலைகளை இவர் பார்த்துக் கொள்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, அக்குழந்தைகளுக்கு இயற்கை முறையில் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வகையிலான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். முருங்கைக்கீரை சூப்பை அவர்களது பள்ளிகள் மூலம் ஒருவேளை சத்துணவாக தந்து வருகிறேன். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் மட்டுமே அவர்களது எதிர்காலம் சிறந்ததாக இருக்கும் என்பதற்காகவே இப்பணியை செய்து வருகிறேன்,” என்கிறார் சௌந்தர்ராஜன்.
தொடர்பு கொள்ள: Daya seva sadan - 9445438876, rajconserv@[email protected]
‘முர்மு’ பழங்குடிகளுக்கு உதவும் ஜோடி: தரமான தேன் விற்பனையில் மாதம் ரூ.5 லட்சம் டர்ன்ஓவர்!