’அறம் செய விரும்பு’- NGO-க்களை கண்டறிந்து நிதி உதவி செய்யும் தளம் துவங்கிய கோவை தொழிலதிபர்!
Dr.அனுஷா ரவி தொடங்கியுள்ள இந்த ஆன்லைனில் தளம்; அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், கார்ப்பரேட் ஆகியோரை ஒன்றிணைத்து, நிதி உதவி கொடுக்கவும், பெறவும் வழி செய்கிறது.
’அறம் செய விரும்பு’ என்று ஆத்திச்சூடியில் போதிக்கிறார் ஔவையார். இன்றைய தலைமுறையினர் இந்த வரிகளை ஏட்டில் கற்றதுடன் நிறுத்திவிடாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தன்னார்வலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கைப் பேரிடர் சமயங்களில் பலர் ஒருங்கிணைந்து, களமிறங்கி தேவைப்படுவோருக்கு தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டியதை நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வாறு நன்கொடை அளிக்கவும் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால் இவ்வாறு நன்கொடை அளிக்க விரும்பும் பெரும்பாலானோருக்கு மனதில் சில பொதுவான கேள்விகள் எழுவதுண்டு.
யாருக்கு பண உதவி செய்தால் அது சரியான பயனாளியைச் சென்றடையும்? நன்கொடையை எப்படிக் கொடுப்பது? ஆன்லைன் மூலம் பெறுவது சாத்தியம் எனில் கொடுப்பதும் சாத்தியம்தானே? அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கிவிடமுடியும் என்றால் நன்கொடை வழங்குவதையும் தன்னார்வலப் பணிகளையும் ஏன் ஆன்லைனில் செய்யமுடியாது? அப்படி கொடுப்பது பாதுகாப்பானதா?
இதற்கெல்லாம் பதில் அளித்து, எல்லாம் சாத்தியம் என்கிறது DoAram தளம். இந்தத் தளம் மேலே குறிப்பிட்ட சிக்கல்களுக்கு முழுமையான தீர்வளிக்கும் விதத்தில் என்ஜிஓ-க்கள், தனிநபர்கள், கார்ப்பரேட் ஆகியோரை ஒன்றிணைக்கிறது.
’DoAram’ தளத்தின் நிறுவனர் அனுஷா ரவி. இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோயமுத்தூரில் கடந்த ஐம்பதாண்டுகளாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் படிப்பிற்கு உதவியுள்ளார். முதுகலை கணிணி அறிவியல் முடித்த அனுஷா ரவி, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியும் உள்ளார். கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான ‘Park Group of Institutions’-ன் சிஇஒ ஆன Dr.அனுஷா ரவி ஒரு நீண்ட கால குறிக்கோளுடன் இந்த மிகப்பெரிய கூட்டு நிதி தளத்தை தொடங்கியுள்ளார்.
தொழில்நுட்பப் பின்னணி இருந்ததாலும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் இருந்ததாலும் நிதி உதவி வழங்கும் பிரிவில் முழுமையான தீர்வளிக்கக்கூடிய தொழில்நுட்பத் தளத்தை உருவாக்க விரும்பி ’DoAram’ தொடங்கினார்.
DoAram செயல்பாடுகள்
2016-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சுமார் 3 மில்லியன் NGO-க்கள் செயல்படுகின்றன. இவற்றில் வெறும் 10 சதவீதம் மட்டுமே இணக்கமாக செயல்படுகின்றன. DoAram தளத்தில் என்ஜிஓ-க்கள் பட்டியலிடப்படுகிறது. அதன் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டு தளத்தில் தொகுத்து வழங்கப்படுகிறது.
இந்த செயல்முறைகளைத் திறம்பட மேற்கொண்டு என்ஜிஓ-க்களை அங்கீகரிப்பதற்காக முன்னணி தணிக்கை நிறுவனங்களுடன் இந்தத் தளம் இணைந்து செயல்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படும் நோக்கம் மற்றும் இடம் சார்ந்து அவை இந்தத் தளத்தில் பட்டியலிடப்படுகிறது.
என்ஜிஓ-க்கள் DoAram தளத்தில் அதன் நோக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தி நிதி உயர்த்தலாம். கூட்டுநிதிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு நிதி திரட்டலாம். தொலைதூரத்தில் சிறு நகரில் செயல்படும் சிறியளவிலான தொண்டு நிறுவனங்கள் பெரியளவில் செயல்படும் என்ஜிஓ-க்களும் சமமாக இந்தத் தளத்தின் மூலம் பலனடையலாம்.
20 ஊழியர்கள் அடங்கிய குழுவாக செயல்படும் DoAram, கார்ப்பரேட்களையோ தனிநபர்களையோ சென்றடையமுடியாத சமூக நிறுவனங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அதன் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தத் தளம் உதவுகிறது. நிறுவனத்தின் நோக்கத்தையும் இடத்தையும் அடிப்படையாகக் கொண்டு சரியான என்ஜிஓ-க்களுடன் இந்தத் தளம் இணைக்கிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான என்ஜிஓ-க்களைத் தேர்வு செய்துகொள்வதுடன் தங்களது ஊழியர்கள் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கலாம்.
இந்தத் தளம் அறிமுகமான புதிதில் இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக முதன் முதலாக LOI-யில் கையொப்பமிட்டது.
DoAram தளத்தின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் க்ளையண்ட் ஒடிசாவில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆதரவளிக்க விரும்பியது. அங்குள்ளவர்களைச் சென்றடைவதும் இணைந்து செயல்படுவதும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதும் சாத்தியமில்லாமல் போனது. இந்த நிலையில் இந்தத் தளத்தில் இணைந்திருந்த சான்றிதழ் பெற்ற என்ஜிஓ அந்த க்ளையண்ட்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
வருங்காலத் திட்டம்
இதுவரை சுமார் 50 தனிநபர்கள் இந்தத் தளத்தின் மூலம் பலனடைந்துள்ளனர். அத்துடன் இந்தத் தளத்தில் கிட்டத்தட்ட 60 நோக்கங்கள் உருவாக்கப்பட்டு அதன்கீழ் நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
DoAram வலைதளத்தில் இணைய சுமார் 4,000 என்ஜிஓ-க்கள் ஒப்புக்கொண்டுள்ளன. 2,000-க்கும் அதிகமான என்ஜிஓ-க்கள் ஏற்கெனவே தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டு இறுதிக்குள் 25,000 தொண்டு நிறுவனங்களையும் 100 கார்ப்பரேட்களையும் சென்றடைந்து வெற்றிகரமாக இணைத்துக்கொள்ள இந்தத் தளம் திட்டமிட்டுள்ளது.
சவால்கள்
இந்தியாவில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட 31 லட்சம் என்ஜிஓ-க்கள் செயல்படுகின்றன. ஆனால் இவற்றை தொடர்புகொள்வதற்கு உதவும் வகையில் சரிபார்க்கப்பட்ட தரவுகள் ஏதும் இல்லை. இதனால் என்ஜிஓ-வின் சரியான தொடர்பு எண்ணோ அல்லது தொடர்பு கொள்ளவேண்டிய நபர் பற்றிய விவரங்களோ கிடைப்பதில்லை. DoAram குழுவினர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகண்டு தகுந்த என்ஜிஓ-க்களைத் தளத்தில் இணைத்துக் கொள்கின்றனர்.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்கள் தங்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வழிகாட்டும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், பிக் டேட்டா அல்காரிதம் போன்றவற்றை செயல்முறைகளில் இணைத்துக்கொள்ளும் பணியில் இந்தத் தளம் ஈடுபட்டுள்ளது. இவற்றை முறையாக செயல்படுத்தி தளத்தை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவரைக் கண்டறிவதில் சவால்களை சந்திக்கிறது.
நீங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நன்கொடை வழங்க விரும்பினாலோ அல்லது தன்னார்வலப் பணிகளில் ஈடுபட விரும்பினாலோ DoAram தளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
கட்டுரையாளர்கள்: இந்துஜா மற்றும் ஸ்ரீவித்யா