தாரகையின் தாரக மந்திரம் 'மயிர்'
நிஷ்தாவின் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவர் முடி இழந்த நேரத்தில் தலையில் பொருத்த சரியான ஒரு விக் தேடி அலைந்த நினைவே அவரை மனித முடியால் ஆன விக்குகள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்க உந்துதல் அளித்தது.
ஒவ்வொருவர் வாழ்விலும் துயர துன்பியல் சம்பவங்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அதனை அவர்கள் எதிர்கொள்ளும் முறைகள் மாறுபடும்.
நிஷ்தா மாலிக் தனது 18வது பிறந்த நாளிற்கு 2 நாட்கள் இருந்த நிலையில் தனது அன்னையை நுரையீரல் புற்றுநோயிற்கு இரையாக பறிகொடுத்தார். அவர் அன்னை புற்றுநோயோடு போராடிய நாட்கள் மற்றும் அவரது கடைசி மூச்சை இழுத்த நினைவும் நிஷ்தாவை மொத்தமாக நொறுக்கியது.
யுவர்ஸ்டோரிக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியது,
“ஒருவாரத்திற்கு முன்னதாகவே எனது அம்மாவின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவர் இறந்த பொழுது எனது 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் பரீட்சைகளை தவிர்க்க மாட்டேன் என்று அவரிடம் உறுதி அளித்திருந்தேன். அந்த நிலைமை மிகவும் கொடுமை. ஒருபுறம் எனது பள்ளி படிப்பின் முக்கியத் தருணத்தில் இருந்தேன். மறுபுறம் கனவிலும் காண இயலாத ஒரு சூழ்நிலை."
அவரது அன்னையின் மரணம் பெரும் வலியைக் கொடுத்தாலும், அதனை தாங்கும் வலிமையையும் அவரது அம்மா அவருக்குக் கொடுத்திருந்தார்.
2012ல் தனது 12 ஆம் வகுப்பையும், பின்பு கல்லூரி படிப்பையும் முடித்து, தொழில் முனைதல் குறித்த மேற்படிப்பை லண்டனில் முடித்தார். பின்னர் ஆர்கானிக் முடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தாலும், எதிலும் மனது முழுதாக ஈடுபடவில்லை அவருக்கு.
2019ல் நிஷ்தா மீண்டும் இந்தியா வந்து, இங்கிருந்த ஆர்கானிக் முடி சந்தையை முழுதாக ஆய்வு செய்தார். எந்த அளவிற்கு மோசமான நிலையில் அந்த சந்தை உள்ளது என்பதை பார்த்த பொழுது அவரது மனம் கனத்தது. முக்கியமாக விக் மற்றும் மயிர் நீட்டிப்புகளுக்கான சந்தை. காரணம் அவரது அம்மா நல்ல ஒரு விக் தேடி அலைந்த நினைவுகள் அவரை விட்டு நீங்காது இருந்தன.
உடனடியாக இந்தத் துறையில் தான் தொழில் துவங்க வேண்டும் என்பதை முடிவு செய்தார். தரமான விக் மற்றும் மயிர் நீட்டிப்புகளை கீமோதெரப்பி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் நிஷ்தாவுக்கு இருந்தது
தலைக்கு மேலே வேலை ஆரம்பித்த வேளை :
இரண்டு வருடங்கள் முழுவதாக சந்தையை ஆய்வு செய்தார் நிஷ்தா.
"சந்தையில் முழுவதாக செயற்கை முடியால் உருவான பொருட்களே இருப்பதை கண்டேன். எவரும் 100% இயற்கையான மனித மயிரால் உருவான விக் அல்லது மயிர் நீட்டிப்புகளை விற்கவில்லை. நான் லண்டனில் இருந்த பொழுது, பல நிறுவனங்கள் இதனை வணிகமாகச் செய்வதை கண்டேன். அங்கு அவை மிகவும் பிரபலம். ஆனால் இந்தியாவில், எவரும் அதனை செய்யவில்லை.
அதிகம் போட்டி இல்லாத இந்தத் துறையில் கவனம் செலுத்த முடிவு செய்தார் நிஷ்தா. தனது நிறுவனம் Beaux ஜூன் 2019ல் நிறுவினார். அந்த பெயருக்கு அழகு என்று அர்த்தம். புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு உதவுவது மட்டுமன்றி, உண்மையான மனித மயிரால் உருவான விக்குகளை சந்தையில் கொடுத்தால் நிச்சயம் தனது வாடிக்கையாளர்களுக்கு, முக்கியமான பெண்களுக்கு, 'அவர்கள் விரும்பும் அடர்த்தியான கூந்தல் இருக்கும்' என்று நம்பினார்.
" மயிர் நீட்டிப்புகள் மற்றும் விக்குகள் ஆகியவை, பெண்கள் மேலும் நம்பிக்கையாக தெரிவதற்கும் உணர்வதற்கும் உருவானவை. சில பெண்களுக்கு தங்கள் மரபணு, மனஅழுத்தம் அல்லது நோய் காரணமாக அடர்த்தி குறைவான கூந்தல் இருக்கலாம். அதனால் தினசரி வாழ்க்கையில் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரலாம். அல்லது ஒரு வயதிற்கு மேலே முடி வளராமல் போகலாம். நீளம் இருந்து அடர்த்தி இல்லாமல் ஆகலாம். அப்படிப்பட்ட நிலையில் நிச்சயம் முடி நீட்டிப்புகளின் உதவியுடன் நாம் எதிர்பார்த்ததை அடைய முடியும்," என்கிறார் அவர்.
வணிகத்தை வளர்த்தல் :
நிறுவனத்தை துவக்குவதற்குth தேவையான மூலபொருள் கிடைப்பது கடினமாக இருக்கவில்லை. காரணம் இந்தியா, உலகில் முடி ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள நாடாகும்.
தென் இந்தியாவில் திருப்பதி மற்றும் பல கோவில்களில் இருந்து எங்களுக்குத் தேவையான 100 சதவீத இயற்கை மயிர் கிடைக்கிறது.(மொட்டை அடிக்கும் பழக்கம் இங்கு கோவில்களில் அதிகம்)
தனது தந்தை தந்த 8 லட்சத்தை முதலீடாக வைத்து நிறுவனைத்தைத் துவங்கியுள்ளார். இவர்களின் செயலாக்க நிலையம் ராஜஸ்தானில் கோட்டாவில் உள்ளது. அங்கு மயிர் முதலில் ப்ரீகண்டிஷனிங், துவைத்தல், கண்டிஷனிங் மற்றும் பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதுவும் ஒரு முறை அல்ல இருமுறை. அடுத்ததாக முழுதாக தயாரான விக் அல்லது மயிர் நீட்டிப்பு ஆலையை விட்டு வெளியே வருவதற்கு முன்பு பல கட்ட தரக்கட்டுப்பாடுகளை தாண்டவேண்டும்.
இவர் நிறுவனம் ஆரம்பித்து வெறும் 6 மாதங்களில் 12-15 லட்சம் பெறுமானம் கொண்ட வணிகம் செய்தது மட்டுமல்லாது, தென் ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியை துவங்கியுள்ளது.
"எங்களுக்கு லண்டனில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மும்பையில் பல்வேறு இடங்களில் உள்ள அழகு நிலையங்கள் மற்றும் அட்லான்டிஸ், துபாயின் பாம் ஜுமைரா ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. இந்தியா முழுவதும் 950 அழகு நிலையங்கள் கொண்ட ஒரு சங்கிலித் தொடர் நிறுவனத்திடம் அவர்கள் நிலையங்களில் எங்கள் பொருட்களை காட்சிப்படுத்த பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது," என்கிறார் நிஷ்தா.
இந்தியாவெங்கும் நடக்கும் பல்வேறு கண்காட்சிகளில் தனது பொருளை காட்சிப்படுத்துவதோடு நில்லாது, மனித மயிர் நீட்டிப்புகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டெல்லியின் "பேர்ல் அகாடமி" யிலும் இவர் வகுப்புகள் நடத்தி வருகிறார்.
தற்போது தங்கள் வலைத்தளம், இந்தியாமார்ட், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தங்கள் பொருளை விற்பனை செய்கின்றனர். அது மட்டுமல்லாது பல்வேறு அழகியல் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றுகின்றனர். வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பல வலைத்தளங்கள் மூலமாகவும் விற்கவுள்ளதாக கூறுகிறார்.
இதற்கு இடையில் எதற்காக இந்தத் துறையில் நுழைந்தோம் என்பதையும் நிஷ்தா மறக்கவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உதவி வருகிறார்.
எதிர் நோக்கியுள்ள சவால்கள்
தங்களது பொருள் குறித்து விழிப்புணர்வு கொண்டு வருவதே மாபெரும் சவால் என்கிறார் நிஷ்தா. மனித மயிர் கொண்டு உருவாக்கப்படும் விக் மற்றும் மயிர் நீட்டிப்புகளின் நன்மைகளை பல நேரங்களில் மக்கள் உணர்வதில்லை என்றும் கூறுகிறார்.
செயற்கையான விக்குகள் மிகவும் குறைந்த நாட்களே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அதிகபச்சம் உழைக்கும். மேலும் அவற்றை நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைப்பது கடினம்.
அதே மனித முடி என்றால் அவை 10 வருடங்களுக்கும் மேலாக உழைக்கும். அவற்றை துவைக்கலாம், நேராக்கலாம், அவற்றில் வண்ணம் தீட்டலாம், இதுபோன்ற நன்மைகள் பல உள்ளன.
"செயற்கை மயிர் நீட்டிப்புகள் தோராயமாக 3000 ரூபாய் வரை விற்கின்றன. மக்கள் அவற்றை ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்த முடியும். ஆனால் அவை தலையின் உச்சிக்கும் நல்லது அல்ல. அதே சமயம் எங்கள் மயிர் நீட்டிப்புகள் 15000 ரூபாய் வரை இருக்கும், ஆனால் 10 வருடங்கள் வரை உழைக்கும். ஆனாலும் இது பற்றிய அறிவு இல்லாமல் மக்கள் தேர்வு செய்கின்றனர்," என்கிறார் நிஷ்தா.
100 % இயற்கையானது மற்றும் பல வருடங்கள் உழைக்கும் என்ற காரணத்தினால் தான் எங்கள் பொருட்கள் சற்று விலை அதிகமாக உள்ளன. மேலும் பலர் தாங்கள் ஒரு விக் உபயோகிப்பதாக வெளியே சொல்லுவதில்லை, இந்த நிலை எங்களுக்கு பெரும் சவால் தான் என்கிறார்.
இந்தியாவில் சில அழகு நிலையங்கள் இயற்கையான விக்குகள் கொடுத்தாலும், அவை 100% இயற்கையானது அல்ல என்கிறார். Beaux தற்பொழுது திவா டிவைன் என்ற நிறுவனத்தோடு போட்டி போடுகின்றனர். அவர்கள் இந்தத் துறையில் 20 வருடங்களுக்கும் மேலாக உள்ளனர்.
எதிர்காலத்தில் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் வளர வேண்டும் என்பது இவரது ஆசை. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திற்கும் சென்று புற்றுநோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் மனித மயிரால் உருவாகும் விக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது அவரிடம்.
ஆங்கில கட்டுரையாளர் : பலக் அகர்வால் | தமிழில் : கெளதம் தவமணி