புதிய வருமான வரி மசோதா அறிமுகம்- முக்கிய அம்சங்கள், மாற்றங்கள் என்ன?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா, 2026ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது, நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்க நாளில் தனது கருத்துக்களை வழங்கும்.
இந்த மசோதா பல்வேறு திருத்தங்களை பரிந்துரைத்தாலும், தற்போதைய அடிப்படை வருமான வரி விகிதங்கள் மற்றும் மூலதன ஆதாய வரி விகிதங்கள் மாற்றம் இல்லாமல் தொடர்கின்றன. வரி விதிப்பு தொடர்பான மொழியை எளிமையாக்குவது இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

80 சி பிரிவு
வருமான வரிச்சட்டத்தின் 80 சி பிரிவு அனைத்து பிரிவினருக்கும் அறிமுகமானது. இந்த பிரிவின் கீழ், வருமானவரிச்சட்டம், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் குறிப்பிட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளை கொண்டுள்ளது. தனிநபர்களின் மொத்த வருமானத்தில் இருந்து ரூ.15 லட்சம் ஆண்டு விலக்கு பெற இந்த பிரிவு வழி செய்கிறது.
தனிநபர்கள் மற்றும் ஒன்றுபட்ட இந்து குடும்பங்கள் மட்டும் இந்த பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதி உடையவர்கள். வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள், இதர வர்த்தகங்களுக்கு இது பொருந்தாது.
இ.எல்.எஸ்.எஸ்., பொது சேமநல நிதி – பிபிஎப், தேசிய பென்ஷன் திட்டம், வரி சேமிப்பு வைப்பு நிதி உள்ளிட்டவை இந்த பிரிவில் வருகின்றன. பல்வேறு நிதி சாதனங்கள் இதன் கீழ் வந்தாலும் மொத்த வரம்பு ரூ.1.5 லட்சம் ஆகும். புதிய மசோதாவில் இந்த கழிவுகள், பிரிவு 123 கீழ் வருகின்றன.
“தனி நபர் அல்லது ஒன்றுபட்ட இந்து குடும்பம், வரி ஆண்டில் செலுத்தப்பட்ட அல்லது டெபாசிட் செய்யப்பட்ட முழு தொகைக்கும் விலக்கு அளிக்கிறது. ஆண்டுக்கான வருமானத்தை கணக்கிடும் போது, XV அட்டவனையில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் கூட்டு ஆனால், ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,“ என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா, தற்போதைய சட்டத்தில் இருந்து 300 காலாவதியான அல்லது நீக்கப்பட்ட ஒதுக்கீடுகளை நீக்கியுள்ளது. தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான 80 சிசிஏ பிரிவு மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பு பத்திர முதலீடு கழிவுக்கான 80சிசிஎப் ஆகியவை இதில் அடங்கும்.
ஆயுள் காப்பீடு
மேலும், இந்த மசோதா, வரிகள் தொடர்பான சில கழிவுகளை மாற்றி அமைத்துள்ளது. ஆயுள் காப்பீடு பிரிமியம், பிபிஎப் தொகை, ஆண்டளிப்பு ஆகியவை 123 உட்பிரிவின் கீழ் இடம்பெறும்.
வீட்டுக்கடன் கடன் வட்டி தொடர்பான பிடித்தம், 130 மற்றும் 131 ஷரத்துகள் இடையே வரும். கல்வி கடன் வட்டி பிடித்தம் 29 உட்ஷரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பென்ஷன் திட்ட பங்களிப்புகள் 124 உட்பிரிவின் கீழ் வருகிறது. 80 சி பிரிவில் இடம்பெற்றிருந்த மற்ற பிடித்தங்கள் குறிப்பிட்ட உட்பிரிவுகளில் வருகின்றன.

இதர பிரிவுகள்
புதிய வருமான வரி மசோதா, பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள் மற்றும் தலைப்புகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுள்ளது.
உதாரணமாக புதி வருமான வரி விதிப்பு முறை தற்போது 115பிஏசி பிரிவில் உள்ளது, புதிய மசோதாவில் 202 பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அதே போல, 139 பிரிவில் உள்ள வருமான வரி கணக்கு தாக்கல், புதிய மசோதாவில் 263 வது பிரிவில் வருகிறது. டிடிஎஸ் தொடர்பான அம்சங்கள், 393 வது உட்பிரிவில் இடம்பெற்றுள்ளன. டிசிஎஸ் தொடர்பான அம்சங்கள் 394 வது உட்பிரிவில் வருகின்றன.
வரித்தாக்கல் கெடு
புதிய வருமான வரி மசோதா, வருமான வரிச்சட்டம் 1961-இல்; தெரிவிக்கப்பட்டுள்ள படி, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அட்டவனையை கொண்டுள்ளது. அதன்படி, பல்வேறு தரப்பினருக்கான வரித்தாக்கல் கெடு வருமாறு:
தனிநபர்கள் : ஜூலை 31
நிறுவனங்கள்: அக்டோபர் 31
தணிக்கை தேவைப்படும் போது: அக்டோபர் 31, நவம்பர் 30ல் தாக்கல் செய்ய வாய்ப்பு.
திருத்தம் செய்த தாக்கல்: டிசம்பர்
Edited by Induja Raghunathan