‘நான் வாழ்ந்து முடிச்சிட்டேன்’ - இளைஞருக்கு படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவர்!
மூன்றே நாளில் இறந்த துயரம்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆபத்தான வடிவத்தை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.
முதல் அலையை போல இல்லாமல், இரண்டாம் அலை குறிப்பாக இளம் வயதினரை அதிகமாக தாக்கி வருகிறது. இது நாடு முழுவதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட மனிதகுலத்திற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார்.
நாராயண் பவுராவ் தபட்கர் என்னும் அந்த 85 வயது முதியவர், கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், மருத்துவமனை படுக்கையை ஒரு இளைஞனுக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.
சில நாட்கள் முன், நாராயண் பவுராவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவரின் ஆக்ஸிஜன் அளவு 60 ஆகக் குறைந்துவிட்டது. பின்னர், அவரது மருமகன் மற்றும் மகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாராயண பவுராவ்விற்கும் நிறைய முயற்சி செய்தபின்பே மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைத்தது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் அழுதபடி தனது 40 வயது கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்க வந்துள்ளார் அந்தப் பெண். ஆனால் மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவியதால், அவருக்கு படுக்கை கிடைக்கவில்லை. இதனால், அந்தப் பெண் தன் கணவருக்கு ஒரு படுக்கையைத் தேடிக்கொண்டிருந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் வேதனையை பார்த்த நாராயண் மருத்துவரிடம்,
"நான் 85 வயதைத் தாண்டிவிட்டேன். நான் நிறையப் பார்த்துவிட்டேன், நான் என் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டேன். என்னைவிட தற்போது அந்த பெண்ணின் கணவருக்குத் தான் படுக்கை தேவை. அந்த மனிதனுக்கு பின்னால் ஒரு முழு குடும்பமும் இருக்கிறது. அந்த நபரின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தேவை. இல்லையெனில், அவர்கள் அனாதைகளாக மாறுவார்கள்," என்று கூறி படுக்கையை விட்டுக்கொடுத்துள்ளார்.
இதன்பின் வீட்டில் வைத்து நாராயண் வீட்டில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் நாராயண ராவ் மருத்துவமனை படுக்கையை காலி செய்து வீட்டிற்குச் சென்று மூன்று நாட்களுக்குள் இறந்தார். இந்த விஷயத்தைப் பற்றி தகவல் வெளியான நிலையில் பலர் நாராயண் செயலை பாராட்டி வருகின்றனர்.