குடிசைப் பகுதியில் இருந்து உருவான சர்வதேச சூப்பர் மாடல்: மலீஷாவின் மகத்தான கதை!
அன்று வறுமையில் வாடிய மலீஷா கர்வா இன்று ஒரு சூப்பர் மாடலாக ‘வோக்’, ‘காஸ்மோபாலிட்டன்’ போன்ற இதழ்களின் அட்டைப் படங்களை அலங்கரித்து வருகிறார்.
அன்று வறுமையில் வாடிய மலீஷா கர்வா இன்று ‘வோக்’, ‘காஸ்மோபாலிட்டன்’ போன்ற இதழ்களின் அட்டைப் படங்களை அலங்கரித்து வருகிறார். கனவுகளின் வல்லமைக்கும், மன உறுதிக்குச் சான்றாகத் திகழ்கிறது அவரது பயணம்.
மும்பை என்னும் அதி பரபரப்பு சூப்பர் ஸ்பீட் நகரத்தின் மையத்தில் உலகைக் கவர்ந்த உத்வேகமும், நம்பிக்கையும் மிகுந்த கதை ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
மும்பையின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மலீஷா கர்வா தற்பொது ஃபேஷன் துறையில் பிரபலமடைந்து, அழகு குறித்த க்ளீஷே சிந்தனைகளை உடைத்து, இந்தியாவில் அழகு தரத்துக்கு ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளார் என்றால், அது சாதாரணம் அல்ல.
மலீஷாவின் கதை வெறும் அழகு பற்றியது மட்டுமல்ல. மன உறுதிப்பாடும், கனவுகளின் வல்லமையும் நம் வாழ்வின் ஏற்றத்துக்கு தருகின்ற தாக்கத்தை உணர்த்தும் தூண்டுகோல் கதையாகும்.
எளிய தொடக்கம் டு ஃபேஷன் ஆளுமை
மலீஷாவின் பயணம் பாந்த்ராவில் ஒரு தற்காலிக குடிசை வீட்டில் தொடங்கியது. ஃபேஷன் உலகின் கவர்ச்சிகளுக்கு சம்பந்தமேயில்லாத வெகு தொலைவில் வாழ்ந்தார். நலிவுற்றோர் பிரிவினராக இருந்தபோதிலும், சிறு வயதிலிருந்தே மாடலாக வேண்டும் என்ற கனவுகளை மலீஷா கொண்டிருந்தார்.
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன், மலீஷாவைக் கண்டுபிடித்தபோது அவரது வாழ்க்கை ஒரு வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தியது, உலக அரங்கில் பிரகாசிக்கும் அவரது திறனை அங்கீகரித்தார் ஹாஃப்மேன்.
வோக், காஸ்மோபாலிட்டன் போன்ற புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளின் அட்டைகளில் மலீஷா ஜொலித்தார். மேலும், டீனேஜ் தயாரிப்புகள் விளம்பரங்களுக்காக அவர்களின் ஆடம்பர இந்திய தோல் பராமரிப்பு பிராண்டான ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸின் விளம்பர மாடலாக மாறினார்.
சமூக ஊடகப் பிரபலம்!
சமூக ஊடகங்களில் 446,000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களுடன் மலீஷா தனது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் தனது தளத்தைப் பயன்படுத்துகிறார். அவரது சோஷியல் மீடியா பதிவுகள் அனைத்துமே அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு டீன் ஏஜ் பெண்ணாக இருந்தவர், பின்னர் ஒரு பிரபலமான மாடலாக மாறியதையே அவரது சமூக வலைதளப் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
மலீஷாவின் வாழ்க்கைப் பயணம் என்பது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் கதாநாயகனுடன் ஒப்பிடத்தக்கது. அதாவது, பசியும் பட்டினியும் சூழ்ந்த குடிசைப் பகுதி வாழ்க்கையில் இருந்து கோடீஸ்வரனைக் காட்டும் கற்பனைக் கதைதான் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ என்றால் என்றால், மலீஷா உண்மையிலேயே ஒரு ஸ்லம்டாக் மில்லியனர்தான். ஆம், அவரது நிஜவாழ்க்கையே முன்னோடியானது.
இந்தியாவின் அழகுத் தரநிலைகள் சிவப்பு நிறம், வெள்ளை நிறம், பளபளப்பு சருமம் ஆகியவற்றில் பிரமித்து ரசித்து, அழகு என்றால் இதுதான் என்று அனைவரையும் மயக்கி வைத்திருந்த ஒரு காலக்கட்டத்தில் மலீஷாவின் புகழ் ஓங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மலீஷா தனது இயற்கை அழகைத் தழுவி, வெள்ளைப் புராண, பளபளப்பு சரீர முற்கோள்களையும், முன் அனுமானங்களையும் சவால்களாக்கி இளம் பெண்களை அவ்வாறே செய்ய ஊக்குவிக்கிறார். வெள்ளைத்தோல் பீடிப்பில் இருக்கும் சமூகத்தினருக்கு ஓர் அதிரடிச் செய்தியை வழங்குகிறார் மலீஷா.
அதாவது, அழகு என்பது தோலின் நிறத்தால் வரையறுக்கப்படுவது இல்லை. மாறாக, ஒருவரின் உள்ளம் மற்றும் தன்னம்பிக்கையால் வரையறுக்கப்படுகிறது.
மற்றவர்களை ஊக்குவிக்க மலீஷாவின் முயற்சிகள் மாடலிங்கிற்கு அப்பாற்பட்டவை. குழந்தைகளின் சமூக - பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், அவர்களின் கனவுகளைத் தொடரவும், அவர்களுக்கு உறுதுணையுடன் ஊக்குவிக்கவும் ‘மலீஷா பீப்பிள்’ எனும் தளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
சமூகத்தில் வெற்றி பெற்ற போதிலும் மலீஷா தனது கல்வியில் கவனம் செலுத்தி, தனது மாடலிங் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலையைப் பேணுகிறார்.
மலீஷா சம்பாதிப்பது அவரது குடும்பத்தின் வாழ்க்கை நிலைமைகளை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், அவருடைய நல்ல எதிர்காலத்திற்கும் வழி வகுத்தது.
உறுதியுடனும், சரியான உறுதுணையுடனும் எல்லைகளைக் கடந்து ஒருவருடைய கனவுகளை அடைய முடியும் என்பதைக் காட்டும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவே இந்த ‘மலீஷாவின் கதையல்ல, நிஜ வாழ்க்கை’ அமைந்துள்ளது.
Edited by Induja Raghunathan