60 ஆண்டுகளாக மசாலா தயாரிப்பில் சாதனை படைக்கும் 300 கோடி டர்ன்ஓவர் செய்யும் கொல்கத்தா நிறுவனம்!
1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட JK Masale தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம், யூகே உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா மசாலா தயாரிப்பிற்கு பிரபலமான நாடு. தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு பட்டியலிட்டுள்ள 109 மசாலாக்களில் 75 வகையான மசாலாக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
மிளகு, மஞ்சள், இலவங்கம் உள்ளிட்ட இந்திய மசாலாக்கள் உலகs சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் இந்தியா ஏற்றுமதி செய்யும் மசாலாக்களின் மதிப்பு என்னவென்று தெரியுமா?
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3.55 பில்லியன் டாலர் மதிப்புடைய மசாலாக்களை ஏற்றுமதி செய்துள்ளதாக IBEF அறிக்கை தெரிவிக்கிறது.
மசாலாக்கள் எப்படிப் பாரம்பரியமானதோ அதேபோல் 50-களில் தொடங்கப்பட்ட பாரம்பரிய மசாலா நிறுவனம் JK Masale. இந்நிறுவனம் கொல்கத்தாவைச் சேர்ந்தது.
ஆரம்பம்
ஸ்ரீ தன்னாலால் ஜெயின் கொல்கத்தாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேன், ட்ரக் போன்ற வண்டிகளில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவருடைய மனதில் பெரியளவில் சாதிக்கவேண்டும் என்கிற உந்துதல் மட்டும் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.
இவர் ஒருகட்டத்தில் வெளி நாடுகளில் இருந்து மசாலாக்களை வாங்கி ட்ரேடிங் செய்யத் தொடங்கினார். கொல்கத்தாவில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு இவற்றை விற்பனை செய்து வந்தார். இந்தப் பிரிவில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்தது. எனவே இந்தத் துறையில் தொழில் தொடங்க முடிவெடுத்தார்.
படிப்படியாகத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கினார். 1985-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதல் தொழிற்சாலை அமைத்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளிலும் மொத்தம் 4 தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தன.
கொல்கத்தாவில் இவர் சீரகம் விற்பனையில் பிரபலம் என்கிறார் இவரது பேரன் விஜய் ஜெயின். இவர் தற்போது நிறுவனத்தின் முதன்மை மார்க்கெட்டிங் டைரக்டராக உள்ளார்.
சீரகத்திற்கு பிரபலமானதால் 'ஜீரா கிங்’ (Jeera King-JK) என்றே அழைக்கப்பட்டார். இதிலிருந்து உருவானதுதான் JK Masale. 2021 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் டர்ன்ஓவர் 300 கோடி ரூபாய்.
நிறுவனத்திற்கான கொள்கைகள் வகுப்பது, ஊழியர்களைக் கையாள்வது என அனைத்தையும் ஆரம்பத்தில் தன்னாலால் மட்டுமே நிர்வகித்து வந்த நிலையில் படிப்படியாக குடும்பத்தினர் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தலைமுறை தாண்டிய பயணம்
பக்சந்த் ஜெயின், ஜெய்குமார் ஜெயின், சாந்தி குமார் ஜெயின், சந்திரகுமார் ஜெயின், ராஜேந்திர குமார் ஜெயின், அசோக் ஜெயின், ஜிதேந்திரா ஜெயின் என தன்னாலாலுக்கு ஏழு மகன்கள். தன்னாலாலுக்குப் பிறகு இவர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பொறுப்பேற்றுகொண்டனர்.
1999-ம் ஆண்டு பக்சந்த் ஜெயினின் மகன் விஜயும் நிறுவனத்தின் இணைந்துகொண்டார்.
ஒவ்வொரு தலைமுறையும் பொறுப்பேற்று வணிகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும்போதும் வெவ்வேறு சவால்களை இருந்ததுபோன்றே வணிக செயல்பாடுகளில் மாற்றமும் இருந்து வந்துள்ளது.
இரண்டாம் தலைமுறையினரான விஜயின் அப்பாவும் மாமாவும் பொறுப்பேற்றபோது 1 கிலோ மசாலா பேக்கெட்டுகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மூன்றாம் தலைமுறையின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது.
“நான் பொறுப்பேற்றபோது சந்தையின் தேவை மாறியிருப்பதை அறிந்துகொண்டேன். பெரியளவில் மக்களைச் சென்றடைய திட்டமிட்டேன். 50, 100, 200 கிராம் என சிறிய அளவுகளில் மசாலாக்களை சந்தையில் அறிமுகப்படுத்தினேன்,” என்கிறார் விஜய்.
ஆரம்பத்தில் விலை நிர்ணயம் செய்வதில் விற்பனையாளர்கள் கை ஓங்கி இருந்தது. ஆனால் இன்று சந்தையில் தேர்வுகள் அதிகம் இருக்கும் நிலையில் நுகர்வோர்களே முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்நிறுவனம் 155 எஸ்கேயூ முழுவதும் 65 தயாரிப்புகளை வழங்குகிறது. இந்தத் தயாரிப்புகள் ஒரு கிராம் முதல் ஒரு கிலோ வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 50 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
விரிவாக்கம்
எத்தனையோ பிரபல மசாலா பிராண்டுகள் சந்தையில் செயல்பட்டாலும்கூட சந்தைத் தேவையை சரியான முறையில் புரிந்துகொண்டு தயாரிப்புகளை வழங்கிப் போட்டியாளர்களை எதிர்கொண்டது JK Masale.
அவ்வப்போதைய சந்தைத் தேவைகளை சரியாகப் புரிந்துகொள்வதே வளர்ச்சிக்கு உதவும் என்கிறார் விஜய்.
மசாலாக்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2006-ம் ஆண்டு இந்நிறுவனம் ஐரோப்பாவில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஜார்கள், பவுச் என பேக்கேஜிங் முறையில் இந்நிறுவனம் புதுமை புகுத்தியது.
வடக்கு மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளில் எளிதாக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டபோதும் தென்னிந்தியாவில் விரிவடைவதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டது என்கிறார் விஜய்.
”தமிழ், தெலுங்கு என பேக்கேஜ்களில் உள்ளூர் மொழிகளில் எழுதத் தொடங்கினோம்,” என்கிறார்.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 700 விநியோகஸ்தர்களுடன் 3 லட்சத்திற்கும் அதிகமான அவுட்லெட்களில் விற்பனை செய்கிறது. கொல்கத்தாவின் வெவ்வேறு பகுதிகளில் JK Life Stores என்கிற பெயரில் ஐந்து அவுட்லெட்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம், யூகே, பூடான் என ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஓய்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் இரண்டாம் அலை மிகவும் மோசமாகப் பரவத் தொடங்கியது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் சவாலான காலகட்டமாக இருந்தது என்கிறார் விஜய். ஆனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் சொந்த வலைதளத்தை உருவாக்கியும் அமேசான் போன்ற மின்வணிக தளங்களிலும் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிறுவனம் பட்டைப்பொடி, பிளாக் சால்ட் போன்ற சில புதிய தயாரிப்புகளைக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்குப் பலன் கிடைத்தது. 20 சதவீதம் வரைக் குறைந்த விற்பனை அளவு அதன்பிறகு 30 சதவீதம் வரை அதிகரித்தது.
மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கால் பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போதைய தயாரிப்புகளுடன் நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தக்கூடிய உணவு மற்றும் மசாலாத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா