‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை பார்த்த 60 விவசாயிகள்: 'myHarvest farms'-இன் சிறப்பு முயற்சி!
ஆர்கானிக் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வரும் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ நிறுவனம் விவசாயிகளுக்கு ‘கடைசி விவசாயி’ படத்தை திரையிட்டு காண்பித்துள்ளனர்.
ஆர்கானிக் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வரும் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ ஸ்டார்ட்-அப் நிறுவனம் விவசாயிகளுக்கு ‘கடைசி விவசாயி’ படத்தை திரையிட்டு காண்பித்துள்ளனர்.
நஞ்சில்லா காய், கனிகளை கொடுக்கும் 'மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்':
சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட்-அப் “myHarvest Farms” நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து பெற்று 3000 குடும்பங்களுக்கு வீட்டிலேயே விநியோகம் செய்து வருகிறது. அனைத்து மக்களும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, பொறுப்பு ஆகிய 3 நோக்கங்களை அடைய இந்நிறுவனம் உதவுகிறது.
திருவள்ளூர், திண்டிவனம், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்துள்ள ‘myHarvest Farms’ விவசாயி-நுகர்வோர் வலையமைப்பை உருவாக்கி, உள்ளூர், பருவகாலத்திற்கு ஏற்ற மற்றும் நஞ்சில்லாத கீரைகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், அரிசி பருப்பு தினைகள், இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் மற்றும் நாட்டுக்கோழி முட்டைகள் ஆகியவற்றை வீட்டிற்கே டெலிவரி செய்கிறது.
இவர்கள் இயற்கை விவசாயம் மூலம் விளையும் காய்கறி, பழங்களை விற்பனை செய்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து, அதை குளிர்ச்சியான சேமிப்பு கிடங்கில் நாள் கணக்கில் போட்டு வைத்து விற்பனை செய்வது கிடையாது.
ஒரு வாரத்திற்கு விவசாயிகளின் விளை நிலங்களில் இருக்கும் பொருட்களை பட்டியலிட்டு, தினந்தோறும் காலையில் அறுவடை செய்து Fresh ஆக வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்கிறார்கள்.
இதனால் நஞ்சில்லா காய்கறி, கனிகள், உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாக மட்டுமில்லாமல், தோட்டம் டூ வீட்டுக்கு புத்தம் புதிதாக கிடைக்கிறது.

’கடைசி விவசாயி’ திரையிடல்:
சமீபத்தில் வெளியான, நடிகர் விஜய் சேதுபதி பட விநியோகஸ்தராகவும், கெஸ்ட் வேடத்திலும் நடித்த, ‘காக்கா முட்டை’ இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ’கடைசி விவசாயி’ திரைப்படம் விவசாயம் அழிந்து வருவதையும், அதை சரியாகச் செய்யத் தெரிந்தவர்கள் குறைந்து வருவதையும் சுட்டிக்காடுகிறது.
விவசாயம் செய்பவர்களோ தெரிந்தவர்களோ மிக அரிது என்பதையும் விவசாயத்துடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு நகரமயமாதலை நோக்கி செல்வதை உணர்த்தும் வகையில் இந்த ஒரு சூழ்நிலையில் நாம் விவசாயிகளுக்கு தோள் கொடுக்காவிட்டால் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
எனவே, அவர்களுடன் இணைந்திருக்கும் விவசாயிகளை உற்சாகப்படுத்தவும், அழிவு நிலையில் உள்ள விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உத்வேகம் கொடுக்கவும். ’கடைசி விவசாயி’ படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு myHarvest Farms’ திரையிட்டு காண்பித்தது.

இதுகுறித்து பேசிய மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் நிறுவனர் அர்ச்சன ஸ்டாலின்,
விவசாயம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் ’myHarvest Farms’ விவசாயத்தை மீட்டெடுக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. எங்களின் எண்ணங்களையும் நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக ’கடைசி விவசாயி’ படத்தை விவசாயிகளுக்கு சிறப்புத் திரையிடல் செய்தோம். எங்களுடன் திரப்படக் குழுவினர் மற்றும் எங்களின் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி,” என்றார்.

படக்குழுவினர் உடன் ‘மைஹார்வெஸ்ட் குழுவினர்
முக்கியமாக இந்த படத்தில் ஒரு தாத்தா கிராமத்து வாழ்வியல் அத்துடன் வேளாண்மை எப்படி துண்டிக்கப் படுகிறது என்பதை அழகாக வாழ்ந்து பதிவு செய்திருப்பார். இயக்குனர் மணிகண்டன் நமது மரபை வருங்கால சந்ததியினர் எப்படி மீட்டெடுக்க வேண்டும் என அழகாக காட்சிப் படுத்தியுள்ளார்.
”எங்களுடன் 60 விவசாயிகள் இந்த சிறப்புத்திரையிடலில் பங்கேற்றனர். அதில் 12 பெண் விவசாயிகள் என்பது கூடுதல் சிறப்பு. தமிழகமெங்கும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விவசாயிகள், பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் ’கடைசி விவசாயி’ படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி,” என்றார் அர்ச்சனா.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த Dr.ரேச்சல் ரெபெக்கா, துணை இயக்குநர் சரத் மற்றும் படக்குழுவினர் திரையிடலில் கலந்து கொண்டு, வந்திருந்த உழவர்களுடன் உரையாடினர்.
மைஹார்வெஸ்ட்-இன் வாடிக்கையாளர்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து, நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் தரும் உழவர்களைக் கொண்டாடினர்.
இயக்குனர் வசந்த், நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிசரன், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, நடிகை நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சமீபத்தில் வேளாண்மைகாக புத்துயிர் கொடுக்க சில நிகழ்வை முன்னெடுத்த பாடகர் ரெஹானா உழவர்களுடன் உரையாடினார்.

நடிகர் ராஜ் மோகன் இந்த படத்தை பற்றி பகிர்ந்தபோது,
“இப்படம் என் தாத்தா, பெரியப்பா என விவசாயம் செய்த என் முன்னோர்களின் நினைவை ஏற்படுத்தியது. மைஹார்வெஸ்ட் குழுவினர் விவசாயத்தை மீட்டெடுக்கும் உன்னத பணி அளவில்லா நிறைவை தருகிறது, மற்றும் கொரோனா சமயத்திலும், சென்னை மழை நேரத்திலும் தவறாமல் வாராவாரம் வீட்டிற்கு பொருட்களை தடையின்றி கொண்டு சேர்த்ததற்கு பாராட்டுகள்,” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய உழவர் புஷ்ப ராஜ், நிறைய வாடிக்கையாளர் இயற்கை பொருட்களை உண்ண வேண்டும் என்றும் இரசாயன விவசாயிகளைவிட இயற்கை உழவர்கள் பாடுபடுவதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.