அறிவையும், அனுபவத்தையும் மட்டுமே முதலீடாக்கி ரூ.400 கோடி சாம்ராஜியம் அமைத்த தொழில் முனைவர்!
மிகப் பெரிய முதலீடுகள் ஏதும் இன்றி, தங்களின் அறிவையும், அனுவபத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கி, அதில் குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்த வரலாறுகளையும் தொழில்துறை தன்னுள் கொண்டுள்ளது.
ஓர் மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், தொழிலில் உச்சத்தைத் தொடவேண்டுமானால் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீட்டை வங்கிகளில் கடனாகப் பெறலாம். அல்லது தங்களின் சொத்துக்களை விற்றோ அல்லது தங்களின் சேமிப்புகளைப் பயன்படுத்தியோதான் தொழில் தொடங்குவதற்கான முதலீட்டை பெற முடியும்.
ஆனால் மிகப் பெரிய முதலீடுகள் ஏதும் இன்றி, தங்களின் அறிவையும், அனுவபத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கி, அதில் குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்த வரலாறுகளையும் தொழில்துறை தன்னுள் கொண்டுள்ளது. இத்தகைய கதைகள்தான் இளம் வளரும் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் டானிக்காக விளங்குகிறது.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவைச் சேர்ந்தவர் நளின் தயாள் (48). பெரிய அளவிலான குடும்பப் பின்னணியோ, பொருளாதார பலமோ இன்றி தன் அறிவையும், அனுபவத்தையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு வங்கிச் சேவை நிறுவனம் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தோல்விகளால் துவண்டு விழும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் நளின் தயாள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஹீரோ, வர்த்மேன், ட்ரைடென்ட் குரூப் போன்ற நிறுவனங்களில் நிதி ஆலோசகராக பணியாற்றினார். இதில் வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த அவர், தனது அனுபவத்தையும், அறிவையும் மட்டுமே நம்பி, 1999 ஆம் ஆண்டில் தனது சொந்த நிதி ஆலோசனை நிறுவனமான ’கேட்ஸ் இந்தியா லிமிடெட்’ (GATS India Ltd) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
இதுகுறித்து அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நான் எனது நிறுவனத்தை மூலதனம் என்ற ஒன்று இல்லாமல்தான் தொடங்கினேன். எனது அறிவும், அனுபவமுமே எனது முதலீடு. அன்றைய தினம் எனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப என் மனைவியிடம் ரூ.100 கேட்டு பெற்றேன். இதுதான் நான் செய்த முதலீடு என நினைக்கிறேன்,” என்கிறார் நகைச்சுவையாக.
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது பெற்றோர் இருவருமே கல்வித் துறையில் பணிபுரிந்தனர். நானும் படித்து முடித்த பின்பு ஏதேனும் ஓர் பணியில் சேர வேண்டும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், ஏனோ தொழில் துறையில் கால் பதிக்கவேண்டும், அத்துறையில் ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற வெறி மட்டும் என் இதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
எவ்வித பின்புலமும் இல்லாமல், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் தொழில்துறையில் காலடி எடுத்து வைப்பது என்பது மிகவும் சவாலான காரியமாகும்.
”ஏனெனில், அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அது வெற்றியாக இருந்து நம்மை தொழிலில் அடுத்த கட்டத்துக்கும் கொண்டு போகலாம். தோல்வியாக மாறி அதலபாதாளத்திலும் தள்ளலாம். இத்துறையில் எதிர்காலம் என்பது நிச்சயமற்றதாக இருக்கும் என்கிறார்"
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையே மிகப்பெரிய வணிகச் சொத்து என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு, தனது அறிவு மற்றும் அனுபவத்தால் தான் செய்யும் வணிகத்தில் காலூன்ற முடியும் என்பதில் நளின் உறுதியாக இருந்தார்.
வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்ககான மதிப்பீட்டுச் சேவைகள், கடன் மேலாண்மை மற்றும் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தணிக்கை செய்வதற்கான ஆலோசனை, சேவைகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட நளினின் கேட்ஸ் நிறுவனம், ரூ.400 கோடி விற்றுமுதல் (turnover) செய்ததுடன் வங்கி, அந்நியச் செலாவணி, சுற்றுப்பயணங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற சேவைகளை வழங்கத் தொடங்கி விரிவடைந்துள்ளது.
“நாங்கள் GATS Money Kendra என்ற மற்றொரு தயாரிப்பையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், வங்கிச் சேவையை விரிவுபடுத்தி, இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களிலும் அனைத்து வங்கிச் சேவைகளும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதே எங்களது லட்சியம்,” என்கிறார் அவர்.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு, தயாள் அசோசியேட்ஸ் என்று அழைக்கப்பட்ட எங்களது கேட்ஸ் இந்தியா லிமிடெட், பல்வேறு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மதிப்பீடு, கணக்கெடுப்பு மற்றும் இழப்பு மதிப்பீடு போன்ற சேவைகளை மட்டுமே வழங்கியது.
2002ஆம் ஆண்டில், அரசாங்கம் SARFAESI சட்டத்தை அமல்படுத்தியது. (வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் கடனாளிகளின் வணிக மற்றும் குடியிருப்புச் சொத்துக்களை ஏலம் விட அனுமதிக்கும் ஒரு சட்டம்) இச்சட்டத்தின் மூலம் ஒரு மிகப் வணிக வாய்ப்பு கிடைக்கப் பெற்றதாக நளின் கூறுகிறார்.
"இதன் மூலம் நாங்கள் ஏற்கனவே தொடர்பில் உள்ள வங்கிகளுக்கு, எங்கள் நிறுவனம் மீட்பு முகவராக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறுகிறார்.
இதற்காகவே 2002ஆம் ஆண்டு GATS India Ltd என்ற நிறுவனத்தை நளின் தொடங்கி, மீட்பு வணிகம் மூலம் கணிசமான வருவாயைப் பெற்றார். தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு, பஞ்சாபில் ஒரு வங்கியாக செயல்பட உரிமமும் பெற்றார். அவரது வங்கிச் சேவைகள் குறித்து நளினிடம் கேட்டபோது,
“லூதியானாவில் எங்கள் வங்கிக்கு 14 கிளைகள் உள்ளன, அங்கு நாங்கள் வைப்புத் தொகையை பெற்றுக் கொண்டு, தனி நபர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் கடன்களை வழங்குகிறோம். காசோலைப் புத்தகத்தைத் தவிர ஒரு பொதுவான வங்கி வழங்கும் அனைத்து சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்கிறார் பெருமையுடன்.
தொடர்ந்து, கேட்ஸ் நிறுவனம் பணமில்லா கட்டண சுற்றுச்சூழல் (cashless payment ecosystem) அமைப்பிலும் இறங்கியது. இதன்மூலம் டிஜிட்டல் வாலட், கேட்ஸ் பே (digital wallet, GATS Pay) போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கியது. தற்போது, இது 42,000 பயனர்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 5.7 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது.
வணிகத்தில் வெற்றிபெற புதுமையான சிந்தனை மற்றும் அனுபவ அறிவையே முதலீடாக்க வேண்டும் என்கிறார் நளின்.
"மேலும் புதுமையாக இருப்பது மட்டுமன்றி ஓர் வட்டத்துக்குள்ளேயே சிந்திக்காமல் பரந்தமனப்பான்மையுடன் சிந்திக்க வேண்டும்,” என வருங்கால இளம் தொழில்முனைவோர்களுக்கு அவர் அறிவுரை வழங்குகிறார்.