இந்தியாவின் 10 முன்னணி இளம் சமூக தொழில் முனைவோர்!
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் 10 முன்னணி இளம் சமூக தொழில்முனைவோர்களின் தொகுப்பு.
ஒரு பிரச்சனை நிலவும்போது அதுகுறித்து பலர் கருத்து தெரிவிப்பது வழக்கம். தனிப்பட்ட முறையில் அந்தப் பிரச்சனையை ஒருவர் சந்திக்கும்போதுதான் அதற்கான தீர்வு குறித்து அதிகம் ஆராய முற்படுவார். ஆனால் அந்த இக்கட்டான சூழலில் தீர்வை யோசித்து முயற்சி செய்து பார்க்க போதிய அவகாசம் இருக்காது.
மற்றவர்கள் தீர்வை உருவாக்கும் வரை ஒரு சிலர் காத்திருப்பதில்லை. தாங்களே நேரடியாகக் களமிறங்கி பொருத்தமான தீர்வை ஆராய்ந்து கண்டறிகின்றனர்.
இதில் சிலர் குறிப்பாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களே சமூக தொழில்முனைவர் ஆவர்.
அத்தகைய 10 இளம் சமூக தொழில்முனைவோர் பற்றிப் பார்க்கலாம்.
1. சரத் விவேக் சாகர் (Sharad Vivek Sagar)

பீகாரின் பாட்னா பகுதியில் பிறந்து வளர்ந்தவர் சரத். 26 வயதான இந்த சமூக தொழில்முனைவர் தொலைதூர பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.
இன்று வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களே அடுத்த தலைமுறைத் தலைவர்கள். இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் உலகையே மாற்றுவார்கள். இதை சரத் உறுதியாக நம்புகிறார்.
இந்த நோக்கத்துடன் 16 வயதில் Dexterity Global நிறுவனத்தை நிறுவினார். 1.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு சில இந்தியர்களில் சரத் ஒருவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டத்தை நிராகரித்த வெகு சிலரில் இவரும் ஒருவர். வெள்ளை மாளிகையில் துவக்க விழா ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2. கார்த்திக் நரலசெட்டி (Karthik Naralasetty)

கார்த்திக் 'ரெட்கோட் இன்ஃபர்மேட்டிக்ஸ்’ என்கிற ஸ்டார்ட் அப்பைத் தொடங்க விரும்பி நியூஜெர்சி ரட்கர் பல்கலைக்கழக படிப்பை இடைநிறுத்தம் செய்தார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் இந்த ஸ்டார்ட் அப்பை வெற்றிகரமாக நடத்தி வந்தார். அந்த சமயத்தில் அவர் படித்த கட்டுரை ஒன்று அவரது வாழ்க்கையையே திசைதிருப்பியுள்ளது.
நான்கு வயது சிறுமிக்கு தலசீமியா பாதிப்பு இருந்தது. அந்தச் சிறுமியின் சிகிச்சைக்கு ரத்தம் செலுத்தவேண்டியிருந்தது. இதற்காக ரத்தம் தேடி அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் அலைந்துள்ளனர். இந்த விவரங்களை கட்டுரையில் படித்தார். ரத்தம் பற்றாக்குறை பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதை கார்த்திக் உணர்ந்தார்.
கார்த்திக் தன்னுடைய ரெட்கோட் இன்ஃபர்மேட்டிக்ஸ் ஸ்டார்ட் அப் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டு 'சோஷியல் பிளட்’ என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்.
ரத்தம் தேவையிருப்போர் ரத்த தானம் செய்ய விரும்புபவர்களை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொள்ள இந்நிறுவனம் உதவுகிறது. சோஷியல் பிளட் அமெரிக்காவில் உள்ள பல்வேறு ரத்த வங்கிகளுடன் இணைந்துள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவியுள்ளது.
2011-ம் ஆண்டு கார்த்திக் Staples இளம் தொழில்முனைவர் விருது வென்றார். ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்கள் பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்றார். சமீபத்தில் Entrepreneur India பத்திரிக்கையின் 35 வயதுக்குட்பட்ட 35 இந்திய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
3. ரியா ஷர்மா (Ria Sharma)

ரியா யூகே-வில் லீட்ஸ் கலை கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது பிராஜெக்ட் சம்பந்தமாக இந்தியா வந்திருந்தார். அது வெறும் பிராஜெக்டுடன் நிற்கப்போவதில்லை என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆவணப்படம் எடுக்கவே இந்தியா வந்திருந்தார். இவரைப் போன்றே பிராஜெக்ட் செய்தவர்கள் அனைவரும் பிராஜெக்ட் முடிந்ததும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிட்டனர்.
ஆனால் ரியா 'மேக் லவ் நாட் ஸ்கார்ஸ்’ என்கிற நிறுவனத்தை நிறுவினார். இந்த கூட்டு நிதி நிறுவனம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது.
இந்நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த உதவுவதுடன், நிறுவனங்கள் இவர்களைப் பணியமர்த்தவும் ஊக்குவிக்கிறது.
2015-ம் ஆண்டு இந்நிறுவனம் 'ஆசிட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கியது. 7 ஆண்டுகளில் Cannes Gold Lion வென்ற முதல் இந்திய பிரச்சாரம் என்கிற பெருமையைப் பெற்றது.
ரியாவின் சமூக அக்கறைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சிலின் சோஷியல் இம்பாக்ட் விருது வென்றார். 2017-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கோல்கீப்பர் குளோபல் விருது வென்றார்.
4. அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் (Agnishwar Jayaprakash)

அக்னீஷ்வர் நீச்சல் வீரர். இவர் 14 வயதில் உலக சாம்பியன் 2004 இண்டியானாபோலிஸ் அமெரிக்கா போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற இளம் வீரர் ஆவார்.
22 வயதில் இஸ்தான்புல் பகுதியில் நடைபெற்ற நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார். இதில் ஆறு பிரிவுகளின்கீழ் பதக்கம் வென்றார். இத்தகைய சாதனை படைத்த இளம் இந்தியர் என்கிற பெருமை இவரை வந்தடைந்தது.
இத்தனை பதக்கங்களைக் குவித்தபோதும் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதே அக்னீஷ்வரின் விருப்பாக இருந்தது.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் அப்துல் கலாமைக் கண்டு ஊக்கம்பெற்ற அக்னீஷ்வர் Ignite-India என்கிற தேசியளவில் செயல்படும் தளத்தை நிறுவினார். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனைகளையும் தொழில்முனைவையும் இந்தத் தளம் ஊக்குவிக்கிறது.
இக்னைட்-இந்தியா நாடு முழுவதும் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்துள்ளது. சிறந்த சமூக பொருளாதார கல்வி இயக்கம் என்று ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
5. ஆருஷி பத்ரா (Aarushi Batra)
மில்லியன்கணக்கானோர் பசியால் வாடினாலும் ஒரு சிலருக்கே உதவி கிடைக்கிறது.
ஆருஷி தன்னால் இயன்ற அளவிற்கு அதிகப்படியான மக்களுக்கு உணவளிக்க விரும்பினார். இதற்காக தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து ’ராபின் ஹூட் ஆர்மி’ நிறுவினார். அதிகப்படியான உணவைத் தேவையிருப்போருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது தன்னார்வலர்கள் சார்ந்த இந்த நிறுவனம்.
இந்நிறுவனத்தின் தன்னார்வலர்கள் உணவகங்கள், திருமண விழாக்கள் போன்ற இடங்களில் இருந்து சுகாதாரமான முறையில் உணவை சேகரித்து ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.
60 நகரங்களுக்கும் மேல் படர்ந்து விரிந்திருக்கும் ராபின் ஹூட் ஆர்மி உலகம் முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு உணவளித்துள்ளது. ஆருஷி பத்ரா இதுவரை படைத்த சாதனையை எண்ணி கொண்டாடாமல் 14,000 ராபின்களுடன் இணைந்து அடுத்தடுத்த இலக்குகளை நிர்ணயித்து முன்னேறி வருகிறார்.
6. நிவேஷ் ராஜ் (Nivesh Raj)

நிவேஷ் ராஜ் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இளைஞர் பிரதிநிதி ஆவார். சுகாதாரம் தொடர்பான பிரச்சனைக்கு முதலில் தீர்வுகண்டால் மட்டுமே வறுமைக்கு தீர்வுகாண முடியும் என்பது இவரது நம்பிக்கை.
இதற்காக ‘ஸ்டெப் அப் ஃபார் ஹெல்தி இந்தியா’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். நலிந்த மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
நிவேஷ் ‘லீடர்ஷிப் 30’ என்கிற திட்டத்தையும் தொடங்கினார். நாளைய தலைவர்களாக உருவெடுத்து, ஐக்கிய நாடுகளின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் எட்டப்படுவதில் பங்களிக்க இருக்கும் மாணவர்களை வளர்த்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
7. த்ருவ் லக்ரா (Dhruv Lakra)

நம் கண்ணெதிரே தெரியக்கூடிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஆராயாமல் நாம் கடந்து செல்லும் சூழலில் அதிகம் வெளிப்படாத ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார் த்ருவ். இவர் காது கேளாதோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்.
முதலீட்டு வங்கியாளராக பணிபுரிந்த இவர், அதில் ஈடுபாடின்றி விலகினார். தசரா என்கிற என்ஜிஓ-வில் இணைந்தார். அடுத்தவருக்கு உதவுவதில்தான் உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கிறது என்பது இவருக்குப் புரிந்தது.
சமூக தொழில்முனைவு பாடப்பிரிவில் எம்பிஏ படிக்க உதவித்தொகை கிடைத்ததால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சென்றார். அந்த சமயத்தில்தான் காது கேளாதோர் தங்கள் திறனை வெளிப்படுத்தி பணிபுரிவதற்கு உதவவேண்டும் என்று விரும்பினார். இதற்காக இவர் நிறுவிய நிறுவனம்தான் Mirakle Couriers. மூன்று ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 50 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறார். இவர்களில் மூன்று பேர் மட்டுமே செவித்திறன் குறைபாடு இல்லாதவர்கள்.
இன்று இந்நிறுவனம் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 65,000-க்கும் அதிகமான டெலிவரிகளைக் கையாள்கிறது.
த்ருவ் நிறுவுயுள்ள இந்நிறுவனத்தின் அசாதாரண முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்பட்டு சமீபத்திய ஆண்டுகளில் ஹெலன் கெல்லர் விருது, எகோயிங் கிரீன் ஃபெலோஷிப் விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்தியளித்ததற்கான தேசிய விருது போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
8. சேத்தன் கௌடா (Chetan Gowda)

சேத்தனுக்கு 16 வயதிருக்கையில் இவரது ஆசிரியர் உயிரிழந்தார். ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த சம்பவத்திற்கு பிறகு ரத்தம் கிடைக்காத காரணத்தால் இனி யாரும் உயிரிழக்கக்கூடாது என்று தீர்மானித்தார்.
’கூன்’ என்கிற என்ஜிஓ தொடங்கினார். ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் வழங்கும் பணியில் இந்த என்ஜிஓ ஈடுபட்டுள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில் கூன் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு உதவியுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கும் ஒரு மணி நேரத்தில் ரத்தத்தை வழங்குகிறது இந்த என்ஜிஓ.
21 வயதிற்குட்பட்டோரில் இந்தியாவில் சமூகப் பிரிவில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களில் ஒருவராக சேத்தன் தேர்வாகியுள்ளார். இவர் தற்போது அசோகா இளம் துணிகர முயற்சியாளராக உள்ளார்.
9. பியூஷ் கோஷ்

பியூஷ் முன்னாள் அசோகா இளம் முயற்சியாளர்.
’தி ஆப்டிமிஸ்ட் சிட்டிசன்’ பத்திரிக்கையின் நிறுவனர். இது இந்தியாவிலேயே நேர்மறையான தகவல்களை வழங்கும் முதல் செய்தித்தாள் ஆகும்.
எத்தனையோ பேர் சமூகத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகையவர்களை நாட்டு மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறது இந்த செய்தித்தாள்.
2015-ம் ஆண்டு பியூஷிற்கு ‘மந்தன் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருது வென்ற இளம் சாதனையாளர் பியூஷ்தான்.
10. ஒலிவியா தேகா

பொதுவாகவே பெண்கள் வலிமையானவர்களாக இருந்தாலும்கூட சமூக அளவில் ஏற்புத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒலிவியா மிகவும் இளம் வயதிலேயே இதைத் தெரிந்துகொண்டார். மற்றவர்களின் எதிர்பார்ப்பிற்கு இணக்கமாக இருப்பது சாத்தியமா என்கிற அச்சம் அதிகரித்ததில் இவரது தன்னம்பிக்கை குறைந்தது.
2015-ம் ஆண்டு இவருக்கு தீவிர மன அழுத்தம் இருப்பது மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டது.
தீவிர முயற்சிக்குப் பின்னர் இவரது தன்னம்பிக்கை அதிகரித்தது. தன்னைப் போன்றே பலர் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பதை ஒலிவியா அறிந்தார்.
எனவே பெண்களின் குரல் வெளிப்படவும் அவர்களுக்கு சக்தியளிக்கவும் `ஷீ ஃபார் சேஞ்ச்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஆங்கில கட்டுரையாளர்: சுபம் கைர்னர் | தமிழில்: ஸ்ரீவித்யா