'2025ல் இந்திய ஊதிய வளர்ச்சி விகிதம் லேசாகக் குறையும்' - சர்வேயில் தகவல்!
இந்த ஆண்டு (2025) இந்தியாவில் ஊதிய வளர்ச்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் தேக்கத்தின் தொடர்ச்சியாக, மேலும் குறையும், என்று சர்வதேச தொழில்முறை பணிகள் சேவை நிறுவனம் Aon தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு (2025) இந்தியாவில் ஊதிய வளர்ச்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் தேக்கத்தின் தொடர்ச்சியாக, மேலும் குறையும் என்று சர்வதேச தொழில்முறை பணிகள் சேவை நிறுவனம் ஏஆன் (Aon) தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பொருளாதாரங்களில் அதிக ஊதிய வளர்ச்சி கொண்டதாக இந்தியா திகழும், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2025ல் ஊதியம் 9.2 சதவீதம் வளரும், என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிச்சயமற்ற தன்மை, வளர்ச்சி தேக்கத்திற்கு மத்தியில் 2024ம் ஆண்டில் இது சற்று உயர்வாக 9.3 சதவீதமாக இருந்தது.

ஏஆன் நிறுவனத்தின் ஆண்டு ஊதியம் மற்றும் விற்றுமுதல் தொடர்பான சர்வே இந்த தகவலை தெரிவிக்கிறது. 45 துறைகளில் 1400க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் இது அமைகிறது.
பெரும் பதவி விலகலால், 2022ல் நிறுவனங்கள் அளித்த 10.6 சதவீத உயர்வுக்கு பின், ஊதிய வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருகிறது. 2023ல் இது 9.7 சதவீதமாக இருந்தது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு வளர்ச்சி: இந்தோனேசியா (6.1%), சீனா (5.3%), மலேசியா (5%), சிங்கப்பூர்(4.3%), ஜப்பான் (3.6%).
“புவி அரசியல், பொருளாதார நிகழ்வுகள், அமெரிக்க வர்த்தக கொள்கையின் தாக்கம், மத்திய கிழக்கு மோதல், ஆக்கத்திறன் ஏஐ முன்னேற்றம் உள்ளிட்ட காரணங்களினால் ஊதிய உயர்வில் இறங்குமுகம் தொடர்வதாக,“ Aon-ல், திறமைகள் தீர்வுக்கான பார்ட்னர் மற்றும் ஆலோசனை தலைவர் ரூபங்க் செளத்ரி கூறினார்.
ஊதிய உயர்வு தொழில் துறைகளுக்கு ஏற்ப மாறுபடும் நிலை உள்ளது. பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆட்டோமொபைல் துறை 10.2 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது.

மற்ற துறைகள்: வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (10%) ரீடைல் (9.8%). மாறாக, காப்பீடு (8.4%), தொலைத்தொடர்பு (8%), தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளில் (7.7%) வளர்ச்சி குறைவாக இருக்கும்.
”இந்த ஆண்டுக்கான துறைகள் வாரியான வளர்ச்சி போக்குகள், கட்டுப்பாடு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையை பிரதிபலிக்கின்றன. நிறுவனங்கள் சந்தை சவால்களை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் திறமையாளர்களை தக்க வைக்க முயற்சிக்கின்றன,” என செளத்ரி கூறியுள்ளார்.
இதனிடையே, ஊழியர்கள் பணியில் இருந்து விலகும் விகிதம் 2024ல் 17.7 சதவீதமாக குறைந்துள்ளது. 2022ல் இது 21.4 சதவீதமாகவும், 2023ல் 18.7 சதவீதமாகவும் இருந்தது. சுயதொழில் மற்றும் தொழில்முனைவு வளரும் நிலையில், அதிக தொழிலாளர் பங்கேற்பு இதற்கு காரணமாக அமைகிறது.
“உலக அளவில் இணைக்கப்பட்ட உலகில், மாறும் அரசுகள், வர்த்தகங்கள், பணியாளர் அணுகுமுறை, எதிர்பார்ப்பு இந்திய பொருளாதாரம் மற்றும் உள்ளூர் திறமையாளர் பரப்பில் தாக்கம் செலுத்தும் என்று, ஏஆன் இணை பாட்னர் அமித் குமார் ஓட்வனி கூறினார்.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan