Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

1 ஆண்டில் 4.5லட்சம் கிலோ இட்லி மாவு விற்பனை: அமெரிக்காவில் கோலோச்சும் மணி கிருஷ்ணன்!

’சாஸ்தா ஃபுட்ஸ்’ தயாரிக்கும் ப்ரெஷ்ஷான் இட்லி-தோசை மாவு கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வீடுகளில் இதுவரை 10 கோடி இட்லி, தோசை செய்யப்பட்டிருக்கிறது!

vasu karthikeyan

Induja Raghunathan

1 ஆண்டில் 4.5லட்சம் கிலோ இட்லி மாவு விற்பனை: அமெரிக்காவில் கோலோச்சும் மணி கிருஷ்ணன்!

Wednesday February 05, 2020 , 5 min Read

இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரிசி, உயர் ரக உளுந்து இவைகளை ஃப்ரெஷ்ஷாக அரைத்து அன்றே பேக் செய்து அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 300 சில்லறைக் கடைகளுக்கு தினமும் சென்றடையும் ‘சாஸ்தா ஃபுட்ஸ்’ இட்லி-தோசை மாவு தான், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு காலை டிபனில் பஞ்சு போன்ற இட்லியை சுவைக்கக் கிடைத்த வழி.


மண்ணை விட்டு வெளிநாட்டில் வசித்தாலும், நம்மூர் உணவுக்கு ஏங்கும் இந்தியர்களில் குறிப்பாக தென்னிந்தியர்கள் மறக்கமுடியாது, தவிர்க்கமுடியாத டிபன், இட்லி மற்றும் தோசை. இந்தியாவில் கிடைக்கும் அதே ருசி, அமெரிக்காவிலும் கிடைக்க, அதுக்குத் தேவையான மாவை ஃப்ரெஷ்ஷாக சரியான பதத்தில் அரைத்தால் மட்டுமே முடியும் என்று உணர்ந்த நாவின் ருசி அறிந்த மணி கிருஷ்ணன், தொடங்கிய பிசினஸ் இட்லி-தோசை மாவு பாக்கெட் விற்பனை.

Shastha Mani

சாஸ்தா ஃபுட்ஸ் நிறுவனர் மணி கிருஷ்ணன்

இட்லி மாவு விற்பதன் மூலம் பெரிய நிறுவனத்தை உருவாக்க முடியும் என்பதை id fresh நிறுவனர் முஸ்தபா இந்தியாவில் நிரூபித்தார். ஆனால் இவருக்கு முன்பாகவே 2003ம் ஆண்டு ’சாஸ்தா ஃபுட்ஸ்’ என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த மணி கிருஷ்ணன். இப்போது அமெரிக்காவில் ஒரு நிமிடத்துக்கு நான்கு பாக்கெட் இட்லி மாவு விற்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.


சென்னையில் சி.கே.ஏஞ்சல் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ‘Shastha foods’ நிறுவனர் மணி கிருஷ்ணன். தொழில்நுட்பம் அல்லாத துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் தொழில் முனைவோர் மத்தியில் தனது வெற்றிக் கதையை பகிர்ந்து கொண்டார் சாஸ்தா மணி.

நெல்லை டூ கலிபோர்னியா

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த மணி கிருஷ்ணன், மும்பையில் அக்கவுண்டிங் படித்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய, உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவராக அமெரிக்காவுக்குச் சென்றனர். அக்கவுண்டிங் முடித்த மணி கிருஷ்ணனுக்கு, வேலைக்குச் செல்ல பெரிய ஆர்வமில்லாத நிலையில் அவரும் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.


எலக்ட்ரானிக்ஸ் துறை, ஐடி துறையில் சில தொழில்களை அங்கிருந்தே இந்தியாவில் நிறுவி ஆரம்பத்தில் நல்ல லாபமும், பின்னர் தோல்வியும் சந்தித்த அவர், 2003ம் ஆண்டு இட்லி மாவு பிசினஸ் செய்ய முடிவு எடுத்தார். இதுதான் அவரின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது எனலாம்.


ஆரம்பத்தில் இண்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் மற்றும் மதர்போர்டுகள் விற்கும் நிறுவனத்தை நடத்திவந்தோம். அமெரிக்காவில் இருந்தே இந்த பணியை செய்துவந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் நிறுவனம் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்னும் சூழல் வந்தது. அதனால் காஷ்மிர் தவிர மற்ற மாநிலங்களில் எங்களது அலுவலகம் அமைத்து செயல்பட்டோம். சாப்ட்வேர் போல ஹார்ட்வேரில் அதிக லாபம் இல்லை, என்றார்.

”எங்களிடம் ஆர்டர் செய்திருந்த வாடிக்கையாளர்கள் பணத்தை சரியாக தராததால் நிறுவனத்தை தொடர்ந்து நடந்தமுடியவில்லை. லாபம் குறைந்த பட்சத்தில் அதிகத் தொகையை வசூல் செய்ய வேண்டி இருந்ததால் (சுமார் ரூ.6 கோடி) அந்தத் தொழில் இருந்து வெளியேறினேன்,” என்கிறார்.
Shashtha foods

பின்னர் இந்தியாவில் இருந்து பிரபல ப்ராண்ட் பில்டர் காபி பவுடரை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கியுள்ளார் மணி. அப்போது ஒரு நாள் தோன்றிய ஐடியா, இட்லி மாவு விற்பனை. இட்லி-தோசை மீதிருந்த நம்பிக்கையில் எந்தவிதமான மார்கெட் ரிசர்ச்சும் செய்யாமல் நேரடியாக தொழிலில் இறங்கினோம்.


மாவு அரைக்க ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, மாவு அரைவை இயந்திரங்களில், இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட அரிசி, உளுந்து வைத்து நம் வீடுகளில் அரைக்கும் அதே பதத்தில் மாவு அரைத்தோம்.

”ஆரம்பத்தில் என்னுடைய கார் மூலமாகவே கடைகளுக்கு டெலிவரி செய்வேன். அப்படியே அடுத்த சில ஆண்டுகளில் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களால் எங்களுடைய வளர்ச்சி சாத்தியமாயிற்று,” என்றார்.

இட்லி மாவுக்குத் தேவையான அரிசி மற்றும் உளுத்தம் பருப்புகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் சமயங்களில் இந்தியாவில் தேவை அதிகரிக்கும் போது இவற்றின் ஏற்றுமதி இந்திய அரசால் தடை செய்யப்படுகிறது. அது போன்ற சமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது.

ஆனால் நாங்கள் அதற்காக மாவு தயாரிப்பை ஒரு போதும் நிறுத்தியது இல்லை. ஆப்ரிக்கா, துபாய் உள்ளிட்ட இதர நாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்து, வழக்கம் போல் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மாவு டப்பாக்கள் சென்றுவிடும்,” என்றார்.

தற்போது 15 வகை மாவுகளை விற்பனை செய்கிறோம். குழந்தைகளைக் கவரும் வகையில் கிட்லி என்னும் பிரிவினையும் உருவாக்கி இருக்கிறோம். குழந்தைகளை ஈர்க்கும் சுவை மற்றும் காய்கறிகளுடன் இது இருக்கும்.

சாஸ்தா வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்

அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள சாஸ்தா ஃபுட்ஸ் தலைமையகத்தில் தற்போது 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்தியர், பாகிஸ்தானி, மெக்சிக்கன், அமெரிக்கர் உள்ளிட்ட  பல நாட்டைச் சேர்ந்தவர்களும் சாஸ்தாவில் பணிபுரிகின்றனர், என்றார்.

“எங்களிடம் எல்லாமே இயந்திரமயமாக்கப்பட்ட மாவு அரவைகள் உள்ளன. அதனால் ஒரே அளவில், ஒரே பதத்தில் இட்லி மற்றும் தோசை மாவு அரைக்கப்படும். அதே போல் சரியான முறையில் பேக்கிங் செய்யப்படும். மாவில் ஒரு சிறிய பிரச்சனை என்று எங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக மாற்றிக் கொடுத்துவிடுவோம்,” என்றார் மணி கிருஷ்ணன்.

அதேபோல தமிழர்கள் மட்டுமே அமெரிக்காவில் மாவு வாங்குவார்கள் என்பதில்லை. இந்தியர்கள் அனைவருமே இப்போது இட்லி, தோசை சாப்பிடத் தொடங்கி உள்ளதால் சாஸ்தா மாவுகளுக்கு எப்போதும் டிமாண்ட் தான் என்கிறார். அதேபோல சாம்பார் (dehydrated sambar), சட்னி உள்ளிட்ட `ரெடி டு குக்’ உணவு வகைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள் இவர்கள்.

Shashtha foods

அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில், 300-க்கும் மேற்பட்ட கடைகளில் இவர்களது தயாரிப்புகள் கிடைக்கின்றன. தவிர அமேசான் தளத்திலும் சாஸ்தா பொருட்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. மேலும் இவர்களின் இணையதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆர்டர் செய்து வாங்க முடியும். இவர்களின் மொத்த விற்பனையில் 5% அளவுக்கு ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. சமீபத்தில் கனடாவிலும் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.

தொடங்கிய காலத்தில் ஒர் ஆண்டுக்கு 20,000 கிலோ மாவு விற்பனை செய்திருந்தோம். கடந்த ஆண்டு சுமார் 4.5 லட்சம் கிலோ அளவுக்கு மாவு விற்பனை செய்திருந்தோம். அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் கடை மட்டும் 3,000-க்கும் மேலே செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை சென்றடைவதே எங்களுடைய அடுத்தகட்ட இலக்காக இருக்கிறது, என்கிறார்.

சில்லறை வர்த்தகக் கடைகள் மூலமாகவே நல்ல லாபம் மற்றும் விற்பனை உள்ளதால், வால்மார்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை நாங்கள் நாடவில்லை.

இப்போதைக்கு இந்த பிரிவின் ஆண்டு வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் ரூ.25 கோடியாக இருக்கிறது, என்பவரிடம் லாப வரம்பு குறித்து கேட்டதற்கு. போதுமான அளவுக்கு லாபம் இருக்கிறது என்பதை பதிலாக வழங்கினார்.

வருங்காலத் திட்டம்

இட்லி மாவு மட்டும் விற்காமல் இந்தியர்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தும் கொடுக்கிறோம். அரிசி (16 வகையான பாரம்பரிய அரிசி) பருப்பு, காபி, திண்பண்டம், இனிப்பு, காரம், பொடி வகைகள், சிறுதானியம் என பல பொருட்களை இங்கிருந்து இறக்குமதி செய்கிறோம்.


இறக்குமதி பிரிவை கவனிப்பதற்காக இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொருட்களைக் கண்டறிவது, தரம், விலை, இங்கிருந்து ஏற்றுமதி செய்வது உள்ளிட்டவற்றை பார்த்துக் கொள்வார்கள்.

2003 முதல் 2017 வரை 10 கோடிக்கும் மேலான இட்லி அல்லது தோசை எங்கள் மாவின் மூலமாக செய்யப்பட்டிருக்கும். 100 கோடி இலக்கை அடைவதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் நம் இட்லி, தோசை பற்றி மட்டுமே பேச வேண்டும்,” என்று மணி உற்சாகத்துடன் கூறினார்.
Mani Krishnan

Mani Krishnan

இறக்குமதி தொழிலை செய்யாமல் இட்லி மாவு பிரிவில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இதைவிட பெரிய நிறுவனமாக மாறி இருக்க முடியுமா என கேட்டதற்கு,

”இறக்குமதி பிரிவில் நான் பெரிய கவனம் செலுத்துவதில்லை. எங்களுடையை இந்திய பிரிவு அவற்றை பார்த்து கொள்கிறது. தவிர பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் அமெரிக்காவில் முடிந்தவரை விரிவாக்கம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். தற்போது கனடாவில் தொடங்கி இருக்கிறோம். அடுத்து இந்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களையும் களம் இறங்கும் திட்டம் வைத்திருக்கிறோம்,” எனக் கூறினார்.

ஸ்டார்ட் அப் என்றாலே டெக்னாலஜி என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. டெக்னாலஜி அல்லாத துறையில் நீங்கள் வெற்றி அடைந்திருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள தொடக்க நிறுவனங்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மணி, ”இம்முறை இந்திய பயணத்தில், பல ஊர்களுக்குச் சென்று நம் பாரம்பரிய அரிசி, பருப்பு வகைகளை பற்றி தெரிந்து கொண்டேன்.


திருச்சி அருகே மஞ்சக்குடி எனும் சிறிய ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு 243 அழிந்திருந்த அரிசிவகைகளை மீண்டும் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்று பலரிடம் இருந்து அரிசி, பருப்புகளை கொள்முதல் செய்து உலகளவில் கொண்டு சேர்க்க திட்டம் உள்ளது. இந்தியாவில் உணவுத் துறையில் பல சிறிய நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. அவர்களிடமும் கணிசமான அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக மணி கூறினார்.

“நம்மூர் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முனைவர்களிடமிருந்து பொருட்களை சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து வாங்கத் திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.

பிட்சா, பர்கர் உலகளவில் பிரசித்து பெற்ற அளவு, நம்மூர் இட்லி, தோசையை உலகமெங்கும் மணம் பரப்ப வைக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் சாஸ்தா மணி கிருஷ்ணனின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேமில்லை.