‘5,80,000 காலணிகள்’ - நாம் தூக்கி வீசும் காலணிகளை புதுபித்து ஏழைகளுக்கு கொடுக்கும் நண்பர்கள்!
ஒருவரால் தேவையில்லை என தூக்கி வீசப்படும் பழைய பொருட்களானது, மற்றொருவருக்கு சிறந்த பரிசாக மாற முடியும் என்பத நிரூபித்து வரும் இரு நண்பர்கள் பற்றிய கதை இது...
ஒருவரால் தேவையில்லை என தூக்கி வீசப்படும் பழைய பொருட்களானது, மற்றொருவருக்கு சிறந்த பரிசாக மாற முடியும் என்பதை நிரூபித்து வரும் இரு நண்பர்கள் பற்றிய கதை இது...
உங்கள் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ஷூக்களின் மேற்பகுதி தேய்ந்து போனால், அந்த பழைய ஜோடியை என்ன செய்வீர்கள்? தூக்கி எறிந்து விடுவீர்கள் இல்லையா?
அப்படி தூக்கி வீசப்படும் ஹூக்களை இளைஞர்கள் இருவர், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மறு வடிவமைப்பு செய்து கொடுக்கிறீர்கள்.
பழசில் இருந்து புதுசு:
21 வயதான ஷ்ரியான்ஸ் பண்டாரியும், 23 வயதான ரமேஷ் தாமியும், தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இருவரும் ஒவ்வொரு ஆண்டும் பல ஜோடி காலணிகளை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஷூக்கள் பற்றி நன்றாக தெரிந்த இருவரும், தூக்கி வீசப்படும் காலணிகளை புதுப்பித்து நவநாகரீகமான வண்ணமயமான செருப்புகளாக மாற்றி, அவற்றை ஆன்லைனில் விற்கிறார்கள் அல்லது நாட்டில் உள்ள சில ஏழை குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.
ஒருநாள் ரமேஷ் தனது பழைய ஷூக்களில் ஒன்றை செருப்பாக மாற்றியுள்ளார். அப்போது தான் பழைய ஷூக்களை மறுவடிவமைப்பு செய்யும் யோசனை வந்துள்ளது. அதன் விளைவாக, டிசம்பர் 2013ம் ஆண்டு, ஷ்ரியான்ஸ் பண்டாரி மற்றும் ரமேஷ் தாமி ஆகியோர் இணைந்து ’கிரீன்சோல்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இதுகுறித்து ஷ்ரியான்ஸ் கூறுகையில்,
“ஆரம்பத்தில் நாங்கள் அந்த காலணிகளை மீண்டும் பயன்படுத்தவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்த நினைத்தோம். ஆனால், இந்த யோசனை ஒரு சமூக வணிக முயற்சியாக வளர்ந்தது, மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட காலணிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவ முடிவு செய்தோம்,” என்றார்.
கைவிடப்பட்ட தூக்கி வீசப்படும் காலணிகளை, கழுவி சுத்தப்படுத்துவது, உள்ளங்கால் மற்றும் மேற்பகுதிகளை பிரித்தெடுப்பது, தேவையான அளவிற்கு வெட்டி, மறு வடிவமைப்பு செய்கின்றனர்.
“பல காலணி உற்பத்தியாளர்கள் செய்வது போல் காலணிகளை உருகுவதற்கு பதிலாக, நாங்கள் அவற்றை புதுப்பிக்கிறோம், அதனால் கார்பன் உமிழ்வு குறைகிறது.”
ஏழைக் குழந்தைகளுக்கு காலணி:
2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இதுவரை 25 ஆயிரம் ஜோடி புதுப்பிக்கப்பட்ட காலணிகளை மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள ஏழைகளுக்கு வழங்கியுள்ளது.
கிரீன் சோல் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,000 முதல் 1,200 ஜோடி பழைய காலணிகளை சேகரிக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தங்கள் சேகரிப்பு இயக்கங்கள் மூலமாக, அவர்கள் பழைய காலணிகளைச் சேகரித்து, அதனை மறுசுழற்சி செய்து பல்வேறு கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.
“நாங்கள் காலணிகளை தானம் செய்யச் செல்லும் இடங்களில் பாதணிகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்துகிறோம். குழந்தைகள் வெறுங்காலுடன் பள்ளிக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் அந்த செருப்புகளை அணிந்துகொண்டு ஓடி விளையாடுவதைப் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது,” என்கின்றனர்.
இன்று வரை 5,80,000 பழைய காலணிகளை மேம்படுத்தி, 65க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
ஆக்சிஸ் வங்கி, இந்தியா புல்ஸ், டாடா பவர் மற்றும் டிடிடிசி போன்ற கார்ப்பரேட்களின் உதவியுடன் அதன் புதுப்பிக்கப்பட்ட காலணிகளின் பெரும்பகுதி ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ஜோடி சப்பல்களையும் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.
ஆன்லைன் விற்பனையில் லாபம்:
மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுவனம் அதன் சில தயாரிப்புகளை ஆன்லைனில் லாபத்திற்காக விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த ஆன்லைன் விற்பனை மூலம் ரூ.5 லட்சத்தை ஈட்டியுள்ளது. கிரீன் சோலின் CEO மற்றும் இணை நிறுவனர் ஷ்ரியான்ஸ் கூறுகையில்,
“காலணிகளின் விலை ரூ.500 முதல் ரூ.1500 வரை இருக்கும். இந்த தயாரிப்புகளில் நாங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை லாப வரம்பு வைத்திருக்கிறோம்,” என்கிறார்.
சுற்றுச்சூழலுக்கும் உதவி:
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 கோடி ஜோடி மக்காத காலணிகள் தூக்கி வீசப்படுகின்றன. ஆனால், தற்போது வரை உலகில் 1.5 பில்லியன் மக்கள் காலணிகள் இல்லாமல் இருப்பதும், இதனால் பாதம் மூலம் பரவக்கூடிய பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தான் ஷ்ரியன்ஸ் மற்றும் ரமேஷ் பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஏழை குழந்தைகளுக்கு உதவவும், கார்பன் வெளியேற்றத்திலிருந்து சுற்றுச்சூழலைக் காக்கவும் கூடிய வணிக மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
பழைய மக்காத காலணிகளை புதிய பாதணிகளாக மாற்றுவதன் மூலம், அதனால் புவியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமையயும், கார்பன் வெளியேற்றத்தையும் இந்நிறுவனம் தடுக்கிறது. பிற செயல்முறைகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் 45000 பவுண்டுகள் CO2 வெளியேற்றத்திலிருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றியதாக ஸ்டார்ட்-அப் மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை, அஜ்மீர் மற்றும் சிலிகுரியில் உள்ள பொது இடங்களில் டிராப் பாக்ஸ்களை வைத்துள்ளனர். மக்கள் அதில் தங்கள் பழைய காலணிகளை நன்கொடையாக வழங்கலாம். மேலும் விருப்பமுள்ளவர்கள் கூரியர் மூலமாகவும் பழைய காலணிகளை அனுப்பிவைக்கலாம்.
ஏழைகளுக்கு ‘இலவச ஷாப்பிங்’ - ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு உடையளிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’