'உனக்கு எதுக்கு இந்த வேலைனாங்க' - அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியை!
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு கழிவறை கட்டித் தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு கழிவறை கட்டித் தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் கழிவறையைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு போதிய வசதிகள் இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது.
இதனைக் கண்டு கவலையுற்ற அப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையான ஆனி ரீட்டா, தலைமை ஆசிரியரின் அனுமதியோடு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாணவிகளுக்கு 8 கழிவறைகளும் ஆசிரியர்களுக்கு 2 கழிவறைகளும் என மொத்தம் 10 கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளார்.
சொந்த செலவில் கழிவறை கட்டுக்கொடுத்த ஆசிரியை ஆனி ரீட்டாவுக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், இந்த பணியை செய்து முடிப்பதற்குள் அவர் என்னென மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டார் என நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆசிரியை ஆனி ரீட்டா:
திருவண்ணாமலையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலையில் அமைந்துள்ளது ஐங்குணம் ஊராட்சி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆனி ரீட்டா.
எம்.ஏ. ஆங்கிலம், பி.எட் படித்துள்ள ஆனி ரீட்டா, 1996ம் ஆண்டு முதல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 2006ம் ஆண்டு முதல் ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் இவர், தான் பள்ளியில் சேர்ந்த சமயத்தில் இருந்தே கழிவறை வசதிகள் சரிவர இல்லாததைக் கவனித்துள்ளார்.
அரசு சார்பில் பள்ளி கழிவறைகளை கட்டிக்கொடுப்பது, சீரமைப்பது என பலமுறை செய்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே இருந்து விளையாட வரும் மாணவர்கள் கழிவறையை சேதப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கழிவறையை அடுத்தடுத்து சீரமைக்க முடியாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.

ஆசிரியை ஆனி ரீட்டா மாணவிகளுடன்
யுவர் ஸ்டோரி தமிழுக்கு அளித்த பேட்டியில்,
திருவண்ணாமலைச் சுற்றியுள்ள 10 கிராமத்திற்கும் இந்த பள்ளி தான் பிரதனமாக உள்ளது. ஆனால், முறையான கழிவறை வசதி இல்லாததால் மாணவிகள் பாதியிலேயே படிப்பைக் கைவிடும் நிலைக்கு ஆளாகி வந்தனர்.
ஏனெனில், திருவண்ணாமலை அரசுப் பள்ளிக்கச் செல்ல இங்கிருந்து 11 கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டும் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். பெண் பிள்ளைகளுக்கு கல்வி மிகவும் முக்கியமானது.
”இதுபோன்ற சுகாதாரப் பிரச்சனைக்காக பிள்ளைகள் படிப்பை விட்டு நிற்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் சொந்த செலவில் கழிவறையை கட்டித் தர முடிவெடுத்தேன்,” என்றார் ஆனி ரீட்டா.
பள்ளிக்கு தனது சொந்தப் பணத்தில் டாய்லெட் கட்டிக்கொடுக்க முடிவெடுத்த ஆசிரியை ஆனி ரீட்டா, பல கான்ட்ராக்டர்கள், கட்டிட மேஸ்திரி போன்றோரிடம் உதவி கோரியுள்ளார். கழிவறையைக் கட்டும் பணிகளை தொடங்கியதும், சிறு சிறிதாக பணம் கொடுத்துவிடுவதாக கேட்டிருக்கிறார். ஆனால் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த சமயத்தில் தான் அவருடைய முன்னாள் மாணவரும், எம்.எஸ்.சி., எம்.எட் பட்டதாரியாக அதே பள்ளியில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியராக பணியாற்றிய தர்மதுரை, தனது ஆசிரியைக்கு உதவ முன்வந்துள்ளார்.
தர்மதுரை மற்றும் அவரது அம்மாவின் உதவியுடன் டாய்லெட் கட்டும் பணிகளை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய ஆனி ரீட்டா தனது பிஎஃப் பணத்தில் இருந்து முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயை எடுத்து வேலையை ஆரம்பித்துள்ளார்.
ஊக்கமளித்த தலைமையாசிரியர், மகள்கள்:
சொந்த பணத்தில் தனியாளாக நின்று அரசுப் பள்ளிக்கு டாய்லெட் கட்டிக்கொடுப்பது எல்லாம் சாதாரண விஷயமில்லை எனக்கூறும் ஆனி ரீட்டா, இரண்டாம் கட்டமாக சேமிப்பு பணத்தில் கைவைக்கும் முன்பு தனது இரண்டு மகள்களிடமும் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது அவர்களும் அம்மாவின் ஆசையையும், மாணவிகளின் சூழ்நிலையையும் புரிந்து கொண்டு செயல்பட அவர் விருப்பம் போலவே தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளனர்.

ஆசிரியை ஆனி ரீட்டா, அவருக்கு உதவிய முன்னாள் மாணவர் தர்மதுரை
அதேபோல், ஐங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மனோன்மணியமும், சக ஆசிரியை மற்றும் ஆசிரியர்களும் ஆனி ரீட்டாவின் முயற்சிக்கு ஊக்கமும், உறுதுணையும் அளித்துள்ளனர்.
எனவே, இந்த சமயத்தில் தனது தலைமையாசிரியருக்கும், முன்னாள் மாணவன் தர்மதுரைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
40 X 16 என்ற அளவில் 8 கழிவறைகளையும், அதற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங் மீது ஆசிரியைகளுக்காக இரண்டு கழிவறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளார். அத்துடன் கழிவறைகளுக்குத் தேவையான வாளி, குவளைகள் மற்றும் மின்விளக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதுக்கு மொத்தமாக 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வாட்டர் புரூப்பிங் மற்றும் ஆயில் பெயிண்டிங் போன்ற பணிகளுக்காக 12 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார்.
ஆனி ரீட்டா சந்தித்த பிரச்சனைகள்:
சொந்த செலவில் தனது பள்ளிக்கு டாய்லெட் கட்டியே ஆக வேண்டும் என ஆனி ரீட்டா முடிவெடுத்ததற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. கான்ட்ராக்டர்கள், மேஸ்திரிகள் இந்த பணியை ஒப்புக்கொள்ள மறுத்தது மட்டுமல்ல, சில கொடையாளர்கள் கூட நிதி உதவி செய்ய முன்வரவில்லை. அதனால் தான் பள்ளிக்கு தனது சொந்த செலவிலேயே தனியார் பள்ளிகளுக்கு நிகராக கழிவறைகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
ரோட்டரி முதற்கொண்டு பலரிடமும் கழிவறை கட்டுவது தொடர்பாக நிதி உதவி, பொருள் உதவி கேட்டேன். ஆனால், நான் உதவி கேட்டுச் சென்றபோது,
‘உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, ‘உங்க வேலையை மட்டும் பார்க்கலாம்...’ என பலரும் விமர்சித்துள்ளனர். இதற்கொல்லாம் மேலாக பணப்பிரச்சனை பெரியதாக இருந்துள்ளது.

முதற்கட்டமாக கிடைத்த 3 லட்சம் ரூபாயை வைத்து பணிகளை ஆரம்பித்தேன். ஆனால், அடுத்த பிஎஃப் பணத்தை எடுக்க காலதாமதம் ஆனது. என்ன நடந்தாலும் வேலை நிக்கக் கூடாது என்பதால் நகையை அடகு வைத்தும், தெரிந்தவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியும் தான் கழிவறை கட்டும் பணிகளை நவம்பர் மாதம் முடித்தேன்.
சில நல்ல எண்ணம் கொண்ட சக ஆசிரியைகளும், ஊர் மக்களும் தங்களால் ஆன நிதியை கொடுத்து உதவுனாங்க. அந்த பணத்தை கடனாக நான் கருதினாலும், அவர்கள் திரும்பத்தர வேண்டாம் என மறுத்துள்ளனர். இதில், குறிப்பாக ஆனி ரீட்டாவிடம் படித்த முன்னாள் மாணவரான சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.
இப்போது தான் செய்த பணிக்காக மக்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கழிவறை கட்ட தனக்கு பல முன்னாள் மாணவர்கள் உதவியாக இருந்ததாகவும் கூறும் ஆனி ரீட்டா, பள்ளியில் படிக்கும் மாணவிகளையும் தனது மகள்களாகவே பார்ப்பதாக கூறுகிறார்.
சொந்தக்காசைப் போட்டு பலகட்ட முயற்சிகளுக்குப் ஆனி ரீட்டா கட்டியுள்ள இந்த கழிவறைகள் ஜனவரி 2ம் தேதி முதல் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு விடுமுறை வர உள்ளதால், பள்ளி திறந்த பிறகு கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராமப்புற பள்ளி மாணவர்கள் இடைநிறுத்தலைக் குறைக்க புது முயற்சி எடுத்த ஆசிரியர்!