'11 ஆண்டுகளில்; 0 - 5 கோடி ரூபாய்' - வைரலான மிடில் கிளாஸ் இளைஞரின் வெற்றிக்கதை!
குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தில் இருந்து 11 ஆண்டுகளில் எப்படி பூஜ்ஜியத்திலிருந்து ரூ.5 கோடி வரை நிகர மதிப்பை உயர்த்தி, கோடீஸ்வரர் ஆனார் எனப் பகிர்ந்த வெற்றிக்கதை இணையத்தில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கடனில்லாத வாழ்க்கை.. குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி...?
இதுதான் பெரும்பாலும் நடுத்தர வர்க்க சம்பளக்காரர்களின் கனவாக, லட்சியமாக இருக்கிறது. ஆனால், கையில் வாங்கும் சம்பளம் செலவுக்கே சரியாக இருக்கும்போது, இதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம், என நினைக்கின்றனர் பலர்.
ஆனால், சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் குறுகிய காலத்தில் நிதி சுதந்திரம் அடைந்து, கோடீஸ்வரராகவும் மாறலாம், என தன் நிஜ வாழ்க்கையை உதாரணாமாகக் காட்டி, இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
இவர் தனது ஒரு சமூகவலைதலப் பதிவில், ‘தனது நிகர மதிப்பு 11 ஆண்டுகளில் பூஜ்ஜியத்திலிருந்து ரூ. 5 கோடியாக உயர்ந்துள்ளது’ என கூறியிருப்பது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த அலுவாலியா?
குர்கானைச் சேர்ந்த அக்சென்ச்சர் ஊழியர், குர்ஜோத் அலுவாலியா. பர்சனல் ஃபைனான்ஸ், பங்கு முதலீடு குறித்து எழுதி வரும் இவரது பதிவுகள் சமூகவலைதளப் பக்கங்களில் மிகவும் கவனம் ஈர்ப்பவை. இதற்காகவே இவரை சமூகவலைதளங்களில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டு கிரெட் மொபைல் செயலி வாயிலாக கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்தி, தான் ஏமாந்த சம்பவத்தை இணையத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதில், மொத்தமாக 87,000 ரூபாய் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை கிரெட் மொபைல் செயலி வாயிலாக அவர் செலுத்தியதாகவும், அதில் அவருக்கு வெறும் 1 ரூபாய் மட்டும் கேஷ்பேக் கிடைத்திருப்பதாகவும், அலுவாலியா தெரிவித்திருந்தார்.
இப்படி வெறும் 1 ரூபாய் கேஷ்பேக் பெறுவதற்குப் பதிலாக நேரடியாக வங்கிகளின் இணையதளத்தில் இருந்தே கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்திவிடலாம், என்ற குர்ஜோத்தின் பதிவு அப்போது இணையத்தில் வைரலானது.
தற்போதும் அதேபோல், நடுத்தர குடும்ப பின்னணியிலிருந்து வந்த தான், எப்படி 11 ஆண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து 5 கோடி வரை ரூபாய் வரை சம்பாதித்தேன், என விளக்கியுள்ள பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சம்பாதிக்க முக்கியக் காரணிகள்
இரண்டு முக்கியக் காரணிகள் மூலம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தான், 5 கோடி நிகர மதிப்பிற்கு மாறியதாக அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் அலுவாலியா.
2025ம் ஆண்டு பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைத்ததாகவும், அதனை கடந்தாண்டு (2024ல்) தான் சாதித்து விட்டதாகவும் அந்தப் பதிவில் அவர் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும், ஆதாரத்திற்காக அவர் தனது நிதி கண்காணிப்பு செயலியின் (INDmoney financial tracking app) ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார்.

தனது இந்த வெற்றிக்கு மும்முனை அணுகுமுறையே காரணம் என்கிறார் அலுவாலியா. அதன்படி,
தனது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தொழிலில் முன்னேற்றம் கண்டது, ஒழுங்கான முறையில் தனது சேமிப்புகளை நிர்வகித்தது மற்றும் சரியான பங்கு முதலீடுகள் போன்றவையே, தான் வெறும் 11 ஆண்டுகளில், ரூ.5 கோடி நிகர மதிப்பை எட்டுவதற்கு முக்கியப் பங்காற்றியதாக அவர் கூறுகிறார்.
அதேபோல், சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தில் வாழும் தனிநபரிலிருந்து 5 கோடி நிகர மதிப்பிற்கு தன் வாழ்க்கையை மாற்றுவதற்கு இரண்டு முக்கியக் காரணிகள் காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதில் முதலாவதாக அவர் கூறுவது,
கடனில்லாத வாழ்க்கையைத்தான். தனது கல்விக்கான செலவுகளை தனது பெற்றோர்களே ஏற்றுக் கொண்டதால், தன்னால் தொழில் வாழ்க்கையை கடனின்றி ஆரம்பிக்க முடிந்ததாகக் கூறுகிறார். அடுத்ததாக, தனது பெற்றோருடன் வாழ்ந்து வருவதால் வாடகை பிரச்சினைகளும் தனக்கில்லை, என்கிறார் அவர்.
சரிவுகளும் இருந்தது
அலுவாலியாவின் நிகர மதிப்பு மதிப்பீட்டில் சொத்து அல்லது நகைகள் இல்லை என்றும், பங்குகள், பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், NPS, EPF மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது, என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடு, நிஃப்டி, கடந்த ஆண்டின் அதிகபட்சத்தை விட 10%க்கும் மேல் சரிந்துள்ளது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் கூட செங்குத்தான திருத்தங்கள் உள்ளன. இந்த சமீபத்திய சந்தைத் திருத்தங்கள் அவரது நிகர மதிப்பில் 8-10% சரிவுக்கு வழிவகுத்தன என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.
நெட்டிசன்கள் கேள்வி
இப்படி வரவுகளைப் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறீர்களே, உங்களுக்கென்று பொறுப்புகள் ஏதும் இல்லையா என அலுவாலியாவிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அவர், ‘அந்த சமயத்தில் தான் துபாய்க்கு பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், பொதுவாக தனது கடன்களை ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக வைத்திருக்க முயற்சிப்பதாகவும்’ அவர் பதிலளித்துள்ளார்.
ஆன்லைனில் பகிரப்பட்ட அவரது மற்றொரு வீடியோ ஒன்றில், அவர் தனது சொந்த அனுபவத்தை உதாரணமாகப் பயன்படுத்தி, 'சந்தையின் நேரத்தை விட' 'சந்தையில் உள்ள நேரம்" முக்கியமானது' எனத் தெரிவித்துள்ளார்.
அலுவாலியாவின் இந்தப் பதிவு சமூகவலைதளப் பக்கங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவர்,
“வாழ்த்துகள் பல... நீங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் விவேகமான முதலீட்டாளர். நீங்கள் மேலும் நீண்ட தூரம் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்..." எனப் பாராட்டியுள்ளார்.
மற்றொரு பயனர், “இது உண்மையில் தனித்துவமானது! உடனடி மனநிறைவு பொதுவாக நிறைய செல்வத்தை அழிக்கிறது. உங்களுக்குப் பாராட்டுகள்," எனத் தெரிவித்துள்ளார்.

தினமும் 20 நிமிட வேலை: வருடத்திற்கு ரூ.3.8 கோடி சம்பாதிக்கும் 26 வயது இளைஞர்!