ரூ12 லட்சத்தில் இருந்து ரூ1.7 கோடி வரை: 5 ஆண்டில் சிற்றுண்டி தொழிலில் பிரதாப் கண்ட வளர்ச்சி!
உலக அளவில் சிற்றுண்டி உணவுகளுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக இதன் தேவையும் அதிகரித்து வருகிறது. அத்தேவையை நிவர்த்தி செய்பவராக மாற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பிரதாப் சிங்குக்கு இல்லை. ஆனாலும், அவரது தந்தை தொடங்கிய சிற்றுண்டி சிறுத்தொழிலை 5 ஆண்டுகளில் 1.7கோடி ரூபாய் வருமானம் அளிக்கும் வளமான பெரும்நிறுவனமாக மாற்றியுள்ளார்.
“நான் நிதித் துறையில் அலுவலகத்தில் பணியாற்றும் வேலையை தான் விரும்பினேன். வாழ்க்கை முழுவதும் அப்பணியை செய்திடவே திட்டமிட்டிருந்தேன்,” எனும் பிரதாப், நினைப்பதற்கு நேரெதிராய் நடந்தது எதார்த்த வாழ்வில்.
ஆம், தனிப்பட்ட மற்றும் எதிர்பாராத சோகம் பிரதாப்பின் திட்டங்களை கவிழ்த்தது.
“அப்பாவும், சகோதரரும் இணைந்தே தொழிலை கவனித்து வந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக அப்பா 2010ம் ஆண்டில் இறந்துவிட அடுத்து இரண்டு ஆண்டுகளில் சகோதரனும் இறந்துவிட்டார். வேறு வழியில்லாமல் குடும்ப வணிகத்தை நான் தொடர்ந்து நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டேன்,” என்கிறார்.
2012ம் ஆண்டு தொழிலை கையில் எடுத்தவுடன் முதல் பணியாய், ‘இன்டோர் நாம்கீன் பந்தார்(ஐஎன்பி)’ என்ற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்துள்ளார்.
2012ம் ஆண்டில் நிறுவனத்தை பிரதாப் கையகப்படுத்துகையில் ஆண்டு வருமானம் ரூ12லட்சமாய் இருந்த நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்குகளாக பெருக்கி ஆண்டுக்கு 1.7கோடி ரூபாய் டெர்ன் ஓவர் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.
“தொழில் வளர்ச்சிக்கு பிராண்டிங் அதிமுக்கியம் என நம்புகிறேன். அதனால், நிறுவனத்தை டேக் ஓவர் செய்தவுடன், நிறுவனத்தை புதுபித்தல் மற்றும் நவீனமயமாக்கலில் அதிக கவனம் செலுத்தி, கடையை ஷோரூமாக மாற்றினேன்,” என்கிறார் பிரதாப்.
பிரதாப்பின் கருத்துப்படி, நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கு பிராண்டிங் மிகவும் பிரதானமானது. அவை புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பெற உதவுகின்றன. மேலும் நிதி மதிப்பை வளர்த்துக் கொள்ள பிராண்டிங் உதவும் என்று உறுதியாக கூறுகிறார்.
“சராசரியயைவிட எங்களுடைய தயாரிப்புகளின் விற்பனை 40 சதவீதமாக அதிகரித்ததுடன், மக்கள் விரும்பி வாங்கும் பொருள் என்ற நன்மதிப்பையும் பெற்றது. அதுவே, உற்பத்தியில் புதுமையை புகுத்துவதற்கு போதுவான முதலீட்டையும் கொடுத்தன,” என்கிறார்.
1969ம் ஆண்டு பிரதாப்பின் தந்தை ஸ்வரூப் சிங் ரத்தோரால் துவங்கப்பட்ட நிறுவனம், ஏற்கனவே பரந்த வாடிக்கையாளர்களைக் கொண்டு இருந்தது. எனவே, அந்நிறுவனம் அவர்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான வழக்கமான மார்க்கெட்டிங் நுட்பங்களை நாடவில்லை. ‘வாய் மொழி வார்த்தையின் மூலமே எங்களுடைய தயாரிப்புகள் மக்களை சென்றடந்தது. உதய்பூரில் உள்ள பெருவாரியான மக்களுக்கு எங்கள் ஷோரூம் பற்றி தெரியும், குறைந்தபட்சம் ஒரு முறையேனும் விஜயம் செய்திருப்பர்,” கூறுகிறார் அவர்.
சமீபத்திய ஆண்டுகளில், ஐ.என்.பி அதன் தயாரிப்புகளை உதய்பூரில் உள்ள அரசாங்கக் கூட்டுறவு அங்காடிகளில் காட்சிப் படுத்தும் வாய்ப்பை பெற்று பயனடைந்து வருகிறது. ராஜஸ்தான் அரசு மாநிலத்தில் உள்ள கூட்டுறவு கடைகளிலும் அவர்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான அனுமதி பெற முயற்சித்தும் வருகிறோம் எனும் பிரதாப், அவரது தந்தை அவருக்குக் கற்பித்து சென்ற படிப்பினையின் விளைவாக அவர் இப்போது போட்டியை கண்டு அஞ்சவில்லை என்கிறார்.
“எனது தந்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து தரமான தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் என் அப்பாவை கண்மூடித்தனமாக நம்பினர். எங்க அப்பாக் கடையில் வாங்கினால், தரத்துக்கு குறைவு இருக்காது என்று நம்பினர்.”
இதுபோன்றதொரு உறவை என் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்துவதே அவருடைய பிரதானமான லட்சியம் என்றார்.
ஆங்கில கட்டுரையாளர் : மோஹித் சபர்வால் | தமிழில்: ஜெயஸ்ரீ