‘இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தோடு சேமிப்பும் உயர்ந்துள்ளது’ - ஆய்வில் தகவல்!
குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவில் நடவடிக்கை குழு (சிஏஜி) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் மூலம், தமிழ்நாட்டில் பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் பெண்களுக்கு எவ்வாறு உதவியது என்பது பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவில் நடவடிக்கை குழு (சிஏஜி) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் மூலம், தமிழ்நாட்டில் பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் பெண்களுக்கு எவ்வாறு உதவியது என்பது பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை வெளியிட்டது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2024 - 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தின் மூலம் தினமும் 50 லட்சம் பெண்கள் பயணிப்பதாகவும், ஜனவரி 2024 நிலவரப்படி 444 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, இத்திட்டத்தை மலைப்பகுதிகளில் விரிவுப்படுத்தவுள்ளதாகவும், தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசால் மிக முக்கியத்துவத்துடன் நடத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மகளிர் அடைந்துள்ளது சிறப்புகள் என்னென்ன என குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவில் நடவடிக்கை குழு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
பயனுள்ளதாக மாறிய ஓய்வு நேரம்:
சென்னையைச் சேர்ந்த லாப நோக்கற்ற ஆராய்ச்சி அமைப்பான டிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவில் நடவடிக்கை குழு (CAG) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டிலுள்ள பெண்களுக்கான ஜீரோ-டிக்கெட் பேருந்துப் பயணம் (ZTBT) திட்டம் அவர்களது பயணச் செலவுகளை சேமிக்க உதவுவதோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பது, கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்குத் தலங்களுக்குச் செல்வது என பெண்கள் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வழிவகை செய்துள்ளது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட போதும், பெண்கள் வேலைக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களுக்காகவும் பயன்படுத்துவார்கள் என எதிர் கருத்துக்கள் எழுந்தன. தற்போது அவற்றை முறியடிகும் வகையில் இலவச பயணத்திட்டம் பெண்கள் தங்கள மீதான கட்டுப்பாடுகளை தாண்டி ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற உதவியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
- தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் பயனடையும் 3,000 பெண்களிடம் சிஏஜி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
- சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருவாரூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த தலா 300 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
- பொது இடங்களுக்குச் செல்வது, பணத்தைச் சேமிப்பது, நிதிச் சுதந்திரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது தொடர்பாக நேர்காணல்களை நடத்தி பதில்களை சேகரித்துள்ளது.
ஆய்வு முடிவுகள் என்ன?
தமிழ்நாடு அரசின் இலவச பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் பெண்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மாதம் 400 ரூபாய்க்கு மேல் சேமிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
- 16 சதவீதம் பெண்கள் 401 முதல் 600 வரை சேமித்துள்ளனர்.
- 20 சதவீத பெண்கள் ரூ. 601 முதல் 800 வரை சேமிக்க முடியும் எனக்கூறியுள்ளனர்.
- 18 சதவீத பெண்கள் சுமார் ரூ. 801 - 1000 சேமித்துள்ளனர்.
1000க்கு மேல் சேமித்து வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 16 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
பெண்கள் தாங்கள் சேமித்த பணத்தை வீட்டுத் தேவைகள், உணவு மற்றும் கல்விக்காக செலவழித்ததையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
- 3000 பெண்களில் 18 பேர் மட்டுமே பணத்தை தங்கள் ஓய்வு மற்றும் சுய பாதுகாப்புக்காக செலவழித்துள்ளனர்.
- 1191 பெண்கள் இலவச பயணத்திட்டம் மூலம் சேகரித்த பணத்தை உணவிற்காகச் செலவிட்டுள்ளனர்.
- 879 பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், 712 பெண்கள் சுகாதாரத்திற்காகவும் செலவிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பெண்களின் பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதில் 99.6 % அதிகரித்துள்ளது. கோவையில் 72.6 %, சேலத்திற்கு 92.1%, திருவாரூரில் 64.5%,நெல்லையில் 99 %, திருவண்ணாமலையில் 99.12 சதவீதமும் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பெண் கல்வி எளிதாகியுள்ளது:
முறைசாரா மற்றும் முறைசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள், வேலையில்லாதவர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பொதுப் போக்குவரத்தில் அதிக பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஆயவில் பங்கேற்ற மாணவர்கள், இத்திட்டத்தின் மூலம் தங்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது எளிதாகியுள்ளதாகவும், செலவு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி கட்டணத்திற்குச் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
எங்கெங்கு அதிகம் செல்கிறார்கள்?
இலவச பேருந்து பயணத்திட்டம் மூலமாக பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வது அதிகரித்துள்ளதாக சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலவச பேருந்து பயணத்திட்டத்தை பணியிடங்களுக்குச் செல்ல 2,901 பேரும், வீட்டு வேலைகளுக்காக 1,342 பேரும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக 1,172 பேரும், மருத்துவ ரீதியிலான தேவைகளுக்காக 11 பேரும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
3,000 பெண்களில், 734 பேர், கோவில்களுக்குச் செல்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பது, மால்கள், கடற்கரைகள் போன்ற பொழுதுபோக்கு வசதிகளை அணுகுவது போன்ற ஓய்வு நேரச் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்கேற்ற சென்னை, கோவை, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான பெண்கள் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமிருப்பதாகவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.