அஞ்சேல் 16 | எதிர்பாராதவற்றை எதிர்கொள்! - எடிட்டர் டி.எஸ்.சுரேஷ்
'தமிழ்ப் படம்' மூலம் அறிமுகமாகி, இந்தி, மலையாளம் உள்பட 25 படங்களை எட்டிய எடிட்டர் டி.எஸ்.சுரேஷ் பகிரும் அனுபவக் குறிப்புகள்.
(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)
"ஒவ்வொரு நாளும் சவால்களை சந்திக்க நேரிடும்; அனுபவம் கூடும்போது எல்லாமே எளிதில் வசப்பட்டுவிடும்," என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்ததே எடிட்டிங்தான்.
எனக்கு சினிமா பின்னணியே கிடையாது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வேலூர். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது 2000-ல் சென்னை வந்தேன். பள்ளியில் கணக்குப் பாடத்தில் ஈடுபாடே கிடையாது. ஓவியம், நாடகம் முதலான கலைகள் மீதுதான் நாட்டம். ஆறாவது படிக்கும்போதே கம்ப்யூட்டர் மீது ஆர்வம் தொற்றியது. ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார்கள். பள்ளிக் காலத்திலேயே வெப்சைட் டிசைனிங் செய்வேன். 12-வது முடித்த பிறகு, கணக்கு தவிர்த்த படிப்பைத் தேடத் தொடங்கினேன். வீட்டில் என்னை சி.ஏ. படிக்க அனுப்பினார்கள். ஒரு வார காலம் சென்றேன். எனக்கு ஒத்து வரவே இல்லை. வீட்டிலும் என்னைப் புரிந்துகொண்டு, எனக்குப் பிடித்ததைப் படிக்க அனுமதித்தனர்.
என் அண்ணன் நல்ல ஓவியர். வீட்டில் பொருளாதார நிலை காரணமாக, தனது ஆர்வத்தையும் திறமையையும் அப்படியே ஒதுக்கிவிட்டு அக்கவுண்ட்ஸ் பக்கம் போய்விட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு நல்ல நிலைக்கு வந்ததும் மீண்டும் ஓவியக் கலைக்கே திரும்பிவிட்டார். அவர்தான் எனக்குப் பிடித்த சினிமா துறையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்தார். இருதயராஜ் எனும் நண்பர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டிருந்தார். அந்த கோர்ஸ் குறித்த அறிமுகம் தந்தார். அது நமக்கு ஒத்துவரும் என்று நானும் சேர்ந்தேன். என் பள்ளி நண்பன் அரவிந்தனும் விஸ்காம் சேர்ந்தேன்.
முதல் மாதத்தில் அந்தப் படிப்பு பற்றி எந்தப் புரிதலும் இல்லை. அந்த நேரத்தில், ஹாலிவுட்டில் பணியாற்றிய வி.எஃப்.எக்ஸ். சூப்பர்வைஸர் மதுசூதனன் ஒரு பயிற்சி முகாம் நடத்தினார். 'இனி எதிர்காலமே டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்' என்றார். அதன்பின், யாராவது 'உன் இலக்கு என்ன?' என்று எவரேனும் கேட்டால், 'டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்' என்று சட்டென சொல்வேன். திரைப்பட இயக்கம் குறித்து தெரிந்துகொண்டேன்.
இயக்குநர்கள் மணிரத்னம், கே.வி.ஆனந்த் ஆகியோரது அலுவலகங்களுக்குச் சென்று உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டேன். "நீங்க படிச்சு முடிச்சிட்டு வாங்க. படிக்கும்போது யாரையும் எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்றுதான் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. காஸ்ட்யூம் டிசைனர் நிரஞ்சனி அகத்தியன் எனது கிளாஸ்மேட். 'எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. உங்க அப்பாகிட்ட (இயக்குநர் அகத்தியன்) என் எதிர்காலத் திட்டம் குறித்து பேசணும்' என்று கேட்டேன். அவரும் அழைத்துச் சென்றார்.
"எனக்கு டைரக்ஷனில் இன்ட்ரஸ்ட் இருக்கு. யார் கிட்டயாவது சேர்த்துவிடுங்க" என்று இயக்குநர் அகத்தியனிடம் கேட்டேன். அவர் எனது ஆர்வங்களைக் கேட்டறிந்தார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்பதை அறிந்தவர், "சினிமாவில் நீண்ட காலம் சிறப்பாக பங்களிப்பதற்கு டெக்னிக்கல் கலைஞர் ஆவதுதான் சரியான வழி. உனக்கு எடிட்டிங் சரியா வரும்னு தோணுது" என்று அறிவுறுத்தினார். அதன்பின் எடிட்டிங் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
அதைத் தொடர்ந்து, கல்லூரியில் ஒரு டெலிஃபிலிம் எடுத்தோம். என்னிடம் எடிட்டிங் பொறுப்பு அளிக்கப்பட்டது. நாங்க ஷூட் பண்ண டெலிஃபிலிம் எதிர்பார்த்தபடி வரவில்லை. என் பேராசிரியரும் குருவுமான சந்திரசேகர் அந்த டெலிஃபிலிமை வேறு கோணத்தில் அணுகி சுவாரசியமாக்கினார். அப்போதுதான் எடிட்டிங்கின் வேல்யூ தெரிந்தது. அடுத்த சிலநாட்களிலேயே எடிட்டர்களின் அலுவலகங்களில் ஏறி இறங்கத் தொடங்கினேன். லெனின், வி.டி.விஜயன், ஆண்டனி மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரிடம் வாய்ப்புக் கேட்டுத் திரிந்தேன்.
ஒருநாள் ஸ்னூக்கர் விளையாடும் பார்லர் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கு 'மன்மதன்' பாடல் ஓடிக்கொண்டிருந்தது. "எவ்ளோ செம்மயா எடிட்டிங் இருக்குல்ல" என்று நண்பர்களிடம் சொன்னேன். அதைக் கேட்ட பார்லர் ஊழியர் ஒருவர், "இதோட எடிட்டர் ஆண்டனி இங்க அடிக்கடி வருவார். இன்னைக்கும் வருவார்," என்றார். அவர் வரும் வரை அங்கேயே காத்திருந்தேன். நான்கு மணியளவில் வந்தார்.
"சார்... எனக்கு எடிட்டிங்ல ஆர்வம். உங்க கிட்ட அசிஸ்டெண்டா சேரணும்" என்றேன். பார்த்தார். "ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, பர்சனல் லைஃப் எல்லாத்தையும் ஆரம்பத்துல ரொம்பவே சாக்ரிஃபைஸ் பண்ணனும். அதையும் மீறி ஆர்வம் இருந்தா ஆறு மாதம் கழித்து வந்து பாரு" என்றார். அவர் சொன்னபடியே ஆறாவது மாதம் கழித்து போனில் அழைத்தேன். "சிம்பு வீட்டில் 'தொட்டி ஜெயா' படத்தின் எடிட்டிங் போவுது. அங்க வந்துடு" என்றார். மறுநாள் பிப்.3, 2005. சிம்பு பிறந்தநாள் அன்று ஆண்டனி சாரிடம் சேர்ந்தேன். அவரிடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணிபுரிந்தேன்.
என் கல்லூரி வகுப்பு மாலை 3.30-க்கு முடியும். ரயில் பிடித்து தாம்பரம் வந்து பிறகு டி.நகருக்கு ஆண்டனி சார் அலுவலகத்துக்கு வருவேன். இரவு 9 மணி வரை எடிட்டில் இருந்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்குத் திரும்புவேன். மறுநாள் காலையில் கல்லூரிக்குப் போனதும், முந்தைய நாளில் ஆண்டனி சார் எடிட்டிங்கில் செய்த அனைத்தையும் கல்லூரியில் நான் முயற்சி செய்வேன்; என் நண்பர்களுக்கும் சொல்லித் தருவேன்.
ஒருமுறை "உனக்கு வீண் அலைச்சல் வேண்டாம்; இரவில் அலுலகத்திலேயே தங்கிக்கொள்" என்று ஆண்டனி சார் சொல்லிவிட்டார். இரண்டாம் ஆண்டு முழுவதும் அப்படியே செய்தேன். மூன்றாவது ஆண்டில் நான் கல்லூரிக்கே அதிகம் செல்வதில்லை. படித்துக்கொண்டே அஸிஸ்டெண்டாக இருப்பதால், கல்லூரியிலும் எனக்கு ஆன் டியூட்டி அண்டெண்ட்டன்ஸ் கொடுத்துவிட்டார்கள். எனவே, கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே சினிமா எடிட்டிங்கை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.
எனக்கு கம்ப்யூட்டரில் ஆர்வம் என்பதால், என்னை எடிட்டிங் தொடர்பான எல்லாவித அப்டேட்களையும் பின்தொடரச் சொன்னார். அதில் தீவிரம் காட்டினேன். அதனால், அவர் எடிட்டிங்கும் செய்யும்போது மிக நெருக்கமாக இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது எடிட் செய்யவும் வைப்பார். எந்த ஸ்டூடியோ போனாலும் என்னைக் கூடவே அழைத்துச் செல்வார். உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள் பலருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால், இளம் வயதிலேயே சினிமா சூழலை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.
2009-ல் என் நண்பர் ஸ்ரீகாந்த் ஒரு படம் இயக்கவிருந்தார். அதில் எடிட்டராக பங்காற்ற இருந்தேன். 'உனக்கு நம்பிக்கை இருந்தால், நிச்சயம் படம் பண்ணு' என்று ஆண்டனி சாரும் அனுப்பினார். ஆனால், அந்தப் படம் துரதிர்ஷ்டவசமாக ட்ராப் ஆனது. 'சரி, என்ன பண்ணலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
நண்பர் விக்ரம் ஆனந்த் மூலமாக 'தமிழ்ப் படம்' குழுவில் இணைய தயாநிதி அழகிரியை சந்தித்தேன். அவர் இயக்குநர் அமுதனிடம் என்னைப் பரிந்துரை செய்தார். அமுதனுக்கு இது முதல் படம். எனவே, அனுபவம் வாய்ந்த எடிட்டரிடம் பணியாற்றலாம் என்று முடிவு செய்திருந்தார். கடைசியில் என்னிடம் மூன்று காட்சிகள் தந்து எடிட் செய்யச் சொன்னார்கள். நானும் செய்து கொடுத்தேன். அமுதனுக்கு முழு திருப்தி. என் முதல் படம் ஆனது 'தமிழ்ப் படம்'.
ஆண்டனி சாரிடம் இருந்து வந்தவன் என்பதால் எனது முதல் படம் 'காக்க காக்க' போலவோ அல்லது 'கஜினி' போலவோ எடிட்டிங்கில் நல்ல ஸ்கோப் உள்ள படத்தில் பணிபுரிய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் முதல் பட வாய்ப்பை அதைவிட சவாலாக அமைந்தது. ஏனெனில், ஸ்பூஃப் வகை சினிமா என்பது நம்மூருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதது. ஒவ்வொரு சீனும் அந்தந்த மூடுக்கு ஏற்றபடி எடிட் செய்ய வேண்டியிருந்தது. ஒரே படத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு தானாக அமைந்தது. நான் யாரையெல்லாம் லெஜண்ட் ஆக கருதி வாய்ப்புகளைத் தேடிப் போனேனோ, அந்த எடிட்டர்களின் படக் காட்சிகளை அவர் போலவே கச்சிதமாக எடிட் செய்ய வேண்டியிருந்தது. அதைப் பாராட்டும்படி செய்ததே பெரிய சாதனையாகக் கருதுகிறேன். தியேட்டரில் மக்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்ததை நேரில் கண்டதும் மறக்க முடியாத அனுபவம்.
எடிட்டிங்கை பொறுத்தவரை வெறுமனே வெட்டி ஒட்டும் வேலை இல்லை. ஒவ்வொரு காட்சியை எடிட் செய்யும்போது, அந்தக் காட்சியை நேரடியாக பார்ப்பதுபோல் 'எம்பத்தைஸ்' செய்துகொண்டு வெவ்வேறு பார்வையின் ஊடாக கச்சிதமாக எடிட் செய்வதையே பின்பற்றி வருகிறேன்.
நான் எதையும் திட்டமிட்டு செய்வதே இல்லை. என் திரைப் பயணமே எதிர்பாராதவையால் நிரம்பியவைதான். எனக்குக் கிடைக்க வாய்ப்புகளை அதன்போக்கில் மிகச் சிறப்பாக பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். 'கட் வித் யுவர் கட்' என்று சினிமா எடிட்டிங் குறித்து சொல்வார்கள். இதை எடிட்டிங்கில் மட்டுமின்றி, 'தமிழ்ப் படம்' முடித்த பிறகு என் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். ஆம், ப்ளஸ் டூ முடித்த பிறகு விஸ்காம் எடுத்தது, படிக்கும்போதே அஸிஸ்டெண்ட் ஆனது, 'தமிழ்ப் படம்' வாய்ப்பு கிடைத்தது எல்லாமே இப்படித்தான்.
சினிமாவில் திறமையை மீறி, யார் நேரத்துக்கு வேலையை டெலிவரி செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம். உங்களுக்கு மிகுதியான திறமை இருக்கலாம்; ஆனால், சரியான நேரத்துக்கு குறிப்பிட்ட வேலையைச் செய்யவில்லை என்றால் உங்கள் திறமை வீணாகிவிடும். இதுபோன்ற கற்றல்தான் தெளிவை நோக்கி நகர்த்துகிறது. முதல் படம் செய்பவராக இருந்தாலும் முப்பது படங்கள் முடித்தவராக இருந்தாலும் சரி, எந்த இயக்குநரையுமே ஒரே விதமாக அணுகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு எடிட்டராக எது சரி என்று தோணுதோ அதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
டெக்னிக்கல் சார்ந்த திரைத் துறையினரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளுமே சவால்களை எதிர்கொண்டாக வேண்டும். குறிப்பாக, நேரம் காலம் பார்க்காமல் வேலையை முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்கள் கமிட் ஆகி திணற வேண்டியிருக்கும். சினிமாவில் போகப் போகத்தான் நேர மேலாண்மைப் புலப்படும். எடிட்டிங்கை பொறுத்தவரையில் மன அழுத்தம் எளிதில் தழுவக் கூடிய பிரிவு. எடிட்டர் கிஷோர் மரணத்துக்குப் பிறகு, மற்ற வேலைகள் போலவே மன இறுக்கம் இல்லாத சூழலுடன் எடிட்டிங்கில் ஈடுபடுவதை கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். இப்போதெல்லாம் வீட்டுப் படியேறியதும் என் மனத்திரையில் திரைக்காட்சிகள் எதுவுமே விரியாது. அனுபவம்தான் வாழ்க்கையை எளிதாக்கும்.
'தமிழ்ப் படம்' முடிந்த பிறகு தீராத விளையாட்டுப் பிள்ளை, தூங்காநகரம், காதலில் சொதப்புவது எப்படி முதலான படங்களில் பங்குவகித்தேன். பிரியதர்ஷன் சாருடன் மலையாளத்திலும் இந்தியிலும் ஐந்து படங்கள் பணியாற்றினேன். சந்தோஷ் சிவன் சாரிடம் வாய்ப்பு கிடைத்து 'இனம்' படத்துக்கு எடிட்டர் ஆனேன். அமுதனின் 'இரண்டாவது படம்' நிறைவு தந்த படங்களில் ஒன்று. ஆனால், அது இன்னும் வெளியாகவில்லை. திரு இயக்கத்தில் 'மிஸ்.சந்திரமெளலி'யில் பணிபுரிகிறேன். இதோ இப்போது மீண்டும் 'தமிழ்ப் படம் 2'-ல் தீவிரம் காட்டி வருகிறேன். எடிட்டிங்கில் எனக்கு சவாலாக அமையும் இந்தப் படமும் முதல் பாகம் போல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று நம்புகிறேன்.
டி.எஸ்.சுரேஷ் (32): தமிழ் சினிமாவில் துடிப்பான இளம் எடிட்டர். தமிழின் முதல் ஸ்கூஃப் சினிமாவான 'தமிழ்ப் படம்' மூலம் அறிமுகம். 'காதலில் சொதப்புவது எப்படி', 'மாயா', 'தமிழ்ப் படம் 2' உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் முதலானோருடன் பங்காற்றியவர். திரைத் தொழில்நுட்பத் துறைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு இவர் கடந்து வந்த பாதை உத்வேகமாக அமையும்.
முந்தையை அத்தியாயம்: அஞ்சேல் 15 | கெத்தாக இருக்கப் பழகு - கலை இயக்குநர் ஜெயஸ்ரீ
'அஞ்சேல்' தொடரும்...