பலஅடுக்கு விவசாயத்தில் ஆண்டுதோறும் லாபம் ஈட்டும் ‘லட்சாதிபதி’ விவசாயி!
மழை பொய்த்துப் போய்விட்டால் விவசாயம் பொய்த்துவிடும் நிலையில் எப்போதாவது மழை எட்டிப் பார்க்கும் காய்ந்த பூமியில் பல அடுக்கு விவசாய முறையில் ஆண்டு தோறும் வருமானம் ஈட்டி வருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆகாஷ் சௌராசியா.
மத்திய பிரதேச மாநிலத்தின் பண்டல்கண்ட் பகுதியில் உள்ள சாகர் நகரம் வறண்ட பிரதேசம். பெயருக்கு எப்போதாவது மழை எட்டிப்பார்க்கும். இப்படிப்பட்ட பகுதியில் ஆகாஷ் சௌராசியாவிற்கு 2.5 ஏக்கர் (1 ஹெக்டேர்) நிலம் கிடைத்துள்ளது. வானம் பார்த்த பூமிங்க இதுல என்னத்த விளையவெச்சு எப்படி லாபம் பார்க்குறதுன்னு சோர்ந்து போயிடாம குறைந்த செலவில் புதுமையான விவசாயத் தொழில் நுட்பங்களுடன் பயிர் செய்து லாபம் பார்க்க முடிவு செய்து விளைநிலத்தில் கைவைத்துள்ளார்.
நம்பிக்கையோடு மண்ணைத் தொட்ட கைக்கு பொன்பானை பொக்கிஷம் கிடைத்தது போல அள்ள அள்ள குறையாத பயிர் வளத்தை கொடுத்திருக்கிறாள் பூமித் தாய்.
பல அடுக்கு பயிர்செய் முறை, விவசாயம் சார்ந்த பொருட்களான உர உற்பத்தி (மண்புழு உரம்), இயற்கை பூச்சிக்கொல்லி உற்பத்தி மற்றும் பால் விற்பனை என தன்னுடைய பண்ணையில் இருந்து ஏறத்தாழ ரூ.15 லட்சம் சம்பாதித்துள்ளார் ஆகாஷ்.
29 வயது இளைஞரான ஆகாஷ் ஒரு இயற்கைக் காதலர், அவரது குடும்பத்தினர் நகர்ப்பகுதியில் வசிக்க இவர் மட்டும் இயற்கையோடு உறவாடும் வகையில் தன்னுடைய பண்ணையிலேயே வசித்து வருகிறார். இயற்கை விவசாயம் மற்றும் காலநிலைக்கு ஏற்ற ஸ்மார்ட் விவசாய முறை மீது நம்பிக்கைக் கொண்ட ஆகாஷ் செலவு குறைவான சில விவசாய முறைகளை முயற்சித்து பார்த்திருக்கிறார், இதனால் அவர் விவசாயத்திற்கு செய்யும் முதலீடு உண்மையிலேயே குறைந்துள்ளது.
பல அடுக்கு விவசாயம் என்பது பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் முறை. இந்த முறையில் காய்கறி மற்றும் பழங்கள் ஒரே நேரத்தில் விளைச்சலைத்தரும். ஒரே நிலத்தில் பல உயரங்களில் பயிர்கள் பயிரிடச் செய்யப்படுகிறது. திறந்தவெளி நிலங்களில் இந்த முறை விவசாயத்தை செய்ய முடியாது இதற்கென தனியாக நிழல்கூடாரம் அமைக்க வேண்டும்.
ஆகாஷ் தனது நிழல் கூடாரங்களைக் கூட ஆடம்பரமாகவோ அதிக செலவிலோ அமைக்கவில்லை. உள்ளூரில் கிடைக்கும் மூங்கில், காட்டுப்புல் இவற்றைக் கொண்டு நிழல் கூடாரம் அமைத்திருக்கிறார். இந்த பசுமை நிழல் கூடாரம் பயிர்களை வெப்பநிலையில் இருந்து காக்க உதவுவதோடு காய்கறி மற்றும் பழங்களின் கொடிகளையும் தாங்கி நிற்கிறது.
நிலத்திற்கு அடியில் இஞ்சி வளர்ப்பு, அதற்கு மேலே முளைக்கீரை வளர்ப்பு, பந்தல் போடப்பட்டிருக்கும் மூங்கில் குழாய்களில் படர்ந்து ஓடும் சுரைக்காய், சுண்டைக்காய் கொடிகள் நிலத்தில் சிறிது இடைவெளிகள் விட்டு பப்பாளி செடி வளர்ப்பு என 4அடுக்கில் பயிர் செய்து வருகிறார் ஆகாஷ்.
பிப்ரவரி-மார்ச் மாதத்தில் பண்ணையை தயார் செய்கிறார் ஆகாஷ். முளைக்கீரைகள் 2-3 வாரங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடுகிறது. மே-ஜுன் மாதம் வரை கீரை விற்பனை மூலம் தினசரி வருமானம் கிடைக்கும். சுரைக்காய், சுண்டைக்காய்கள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர்-நவம்பர் மாதம் வரை விளைச்சலைத் தருகிறது. இதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் இஞ்சி அறுவடைக்குத் தயாராகி விடுகிறது.
இடைவெளிகள் விட்டு நிலத்தில் வளர்க்கப்படும் பப்பாளியும் நவம்பர் மாதத்தில் பழங்களைத் தரத் துவங்கிவிடுகிறது. வருமானம் வரத்தொடங்கி விட்டால் தொடர் காய்ப்பு, பழங்கள் மற்றும் கீரையின் மூலம் ஜனவரி மாதம் முதல் வருமானத்திற்கு குறைவில்லை. மீண்டும் ஒரு மாத இடைவெளியில் அடுத்த விதைப்புக்குத் தயார் செய்துவிடுவேன் என்கிறார் ஆகாஷ்.
நாட்டு விதைகளையே ஆகாஷ் தன்னுடைய விவசாயத்தில் பயிரிடுகிறார். இதன் மூலம் விதையின் விலை குறைவு என்பதோடு கால நிலைக்கு ஏற்ப விதைகள் தாக்குபிடித்து செடிகள் வளர உதவுகிறது. மேலும் அதிக பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகாது, காய்கறிகள் வளர்ப்பில் செடிகளை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் ஆகாஷ்.
பல அடுக்கு விவசாயத்தால் காய்கறிகள் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப் படுவதில்லை. ஒரே நிலத்தில் 4 விதமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுவதால் குறைந்த பட்ச தண்ணீரே போதுமானதாக இருக்கிறது. எனவே இந்த விவசாய முறை ஆகாஷிற்கு நல்ல வருமானத்தை கொடுக்கும் தொழிலாகத் திகழ்கிறது.
நாட்டில் தண்ணீர் பிரச்னையால் விவசாயம் கானல் நீராகி வருகிறது. 80 சதவிகித விவசாயிகள் 5 ஏக்கருக்கு குறைவான நிலத்தை வைத்துள்ளனர். சிக்கனமான செலவில் வருமானம் தரக்கூடிய பல அடுக்கு விவசாய முறை விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதுஎன்பதற்கு அனுபவ சாட்சியாக திகழ்கிறார் ஆகாஷ் சௌராசியா.
தகவல் உதவி : டவுன் டூ எர்த் | தமிழில் கட்டுரை : கஜலெட்சுமி