ஊருணி அறக்கட்டளை வழங்கும் ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'- விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னையில் இயங்கும் ’ஊருணி அறக்கட்டளை’ பல்வேறு துறைகளைச் சார்ந்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது’ 'Working Women Achievers Award' விழாவிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய அளவில் உழைக்கும் பெண்களில் சிறந்த 50 சாதனையாளர் பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்க உள்ளதாக ஊருணி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பணியில் உள்ள பெண்கள் பல சவால்களை சந்தித்து, இடையில் ஏற்படும் பணி இடைவெளிகளைத் தாண்டி, தாங்கள் இருக்கும் துறையில் சிறப்பாக செயல்பட்டு உயரிய பதவியை அடைவதே பெரும் சாதனையாக உள்ளது. அப்படி அவரவர்கள் துறையில் தங்களுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ள பெண்களை அங்கீகரிக்கவே இவ்விருது விழா.
உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, கலைத்துறை, ஊடகத்துறை, சில்லறை வர்த்தகம், அரசு சார்ந்த நிறுவனம், பொதுத்துறை, கல்வி, தொழில்முனைவோர், சுயதொழில், அமைப்புச்சாரா தொழில் நிறுவனம், ஆகிய துறைகளில் பணிபுரியும் பெண்களில் சாதனையாளர்களை அடையாளம் கண்டு முதன்முறையாக விருது வழங்க உள்ளது ஊருணி அறக்கட்டளை. இது பற்றி மேலும் விளக்கிய ஊருணி அறக்கட்டளை நிறுவனர் ரத்தினவேல் ராஜன்,
”மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு சமூகத்தில் கல்வி, பணி, தொழில்துறை என்று அனைத்திலும் சமவாய்ப்பு கிடைக்க வழி செய்ய உதவும் ஒரு அறக்கட்டளையாக ஊருணி-யை 3 ஆண்டுகள் முன்பு தொடங்கினோம். இதில் பல தனியார் மற்றும் பொதுத்துறையில் பணிபுரிவோர், தன்னார்வமாக வார இறுதிநாட்களில் ஒன்று கூடி பணிகள் செய்து வருகிறார்கள்,” என்றார்.
சர்வதேச அளவில் பணிக்கு செல்லும் பெண்கள் சதவீதத்தில் இந்தியா, 120-வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் குடும்பச்சூழல், இன்னல்கள் பலவற்றுக்கு இடையில் 27% பெண்கள் மட்டுமே பணிக்கு செல்கின்றனர். அதனால் அவர்களில் திறமையானவர்களையும், சாதித்த பெண்களையும் அடையாளம் கண்டு அங்கீகரிக்க விரும்பி இந்த விருது விழாவை நடத்துகிறோம் என்றார் ரத்தினவேல். மார்ச் 3-ம் தேதி இவ்விருதுகள் சென்னையில் வழங்கப்படும்.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் ஏற்கும் கடைசி நாள்: 31-ம் ஜனவரி 2018.
விண்ணப்பிக்க வேண்டிய படிவம்: Ooruni WWAA Awards
மேலும் விவரங்களுக்கு: Ooruni Foundation