நீங்களும் 'கதைசொல்லி' ஆகலாம்!- உத்திகளுடன் அனுபவம் பகிரும் வனிதாமணி
குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு வீட்டிலேயே சிறார் நூலகம் ஒன்றை அமைத்துச் செயல்படுத்தி வருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த 'கதைசொல்லி' வனிதாமணி.
'கதைக்களம்' எனும் பெயரில் ஓராண்டு காலமாக விளையாட்டு, பாடல் மற்றும் கதைகள் என இயங்கிவரும் வனிதாமணி, தன்னைப் போலவே குழந்தைகளுக்கான கதைசொல்லிகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
"பட்டாம்பூச்சி, கதைக்களம் என்பது உன்னதமான முயற்சி. கதை சொல்லல் மட்டுமல்லாது, அங்கிருக்கும் நூதனமான நூலகத்தில், ஆம் நூதனமானதுதான் - புத்தகத்தை கையில் திணித்தால் அதைவைத்து முகம்மூடி தூங்கிவிடும் இச்சிறுவர்கள், சுறுசுறுப்பாக புத்தகங்களுக்குள் மூழ்கச் செய்வது நூதனமான செயல்தானே?!'
"வனிதா மேடம், ஞாயிறு அங்கு வந்து கதை கேட்டதில் இருந்து என் குழந்தை தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஒரு கையில் புத்தகம் வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள எல்லோருக்கும் கதை சொல்லிக்கொண்டிருக்கிறாள்."
"கதை சொல்லும் பழக்கத்தை எங்கள் குடும்பத்தில் அறிமுகம் செய்தது 'கதைக்களம்'தான்!"
- 'கதைசொல்லி' வனிதாமணி முயற்சியால் பலனடைந்த பெற்றோர்களில் சிலரது கருத்துகளே இவை.
ஈரோட்டில் வசிக்கும் வனிதாமணி தன் வீட்டில் 'பட்டாம்பூச்சி' என்ற குழந்தைகள் நூலகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், 'கதைக்களம்' என்ற பெயரில் கதைசொல்லியாகவும் இயங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறுகளில் இவரது வீட்டிலேயே 'கதைக்களம்' நிகழ்வு நடைபெறும். கட்டணம் ஏதுமில்லா இந்தக் கதைக்கள முகாமில் ஒவ்வொரு வாரமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
பள்ளிகள், நூலகங்கள், குழந்தைகள் கலை - இலக்கிய நிகழ்ச்சிகளில் 'கதைசொல்லி'யாக வலம்வரும் வனிதாமணி, குழந்தைகள் உடனான பயணம் குறித்து 'யுவர் ஸ்டோரி' தமிழிடம் உற்சாகமாக விவரித்தார்.
"இளங்கலை வேதியியல், எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் படித்து முடித்தேன். எனினும், குழந்தைகளோடு செயல்பட வேண்டும் என்ற உந்துதலில் எம்.ஏ.யோகா படித்தேன். அதன்பின், என் வீட்டுக்கு அருகில் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு தன்னார்வமாக யோகா கற்றுக்கொடுத்தேன். அப்போது, கணவரின் சொந்த அலுவலகத்தில் நிர்வாகம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வந்தேன்.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு யோகா கற்றுக்கொடுத்தாலும், அவர்களுடன் இன்னும் நெருக்கமாக இயங்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. அந்தச் சூழலில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'கதைசொல்லி' சதிஷ் மூலம்தான் 'கதைசொல்லி' என்ற வார்த்தையையே அறிந்தேன். அதன்பின், குழந்தைகளுக்கான கதைகள் மீது நாட்டம் கூடியது.
எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின் என் அன்றாட வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள நேர்ந்தது. என் குழந்தைக்கு தினமும் கதை சொல்லிக்கொண்டே இருப்பேன். எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் தானாகவே கதையைச் சொல்ல ஆரம்பித்து முடிப்பேன். "நிறைய கதைகளை யோசிக்கிறாயே, அதை அப்படியே ஆடியோவில் பதிவுசெய்" என்று என் கணவர் யோசனை தெரிவித்தார். அப்படிச் செய்து பார்த்தபோது, அது சற்றே செயற்கைத்தனமாக இருந்தது. எனவே, அதை நிறுத்திவிட்டேன்.
குழந்தைக்குக் கதைசொல்லி பழகிவிட்ட பிறகு, அலுவலக வேலைகளில் ஈடுபாடு குறைந்துவிட்டது. ஒருநாள் நள்ளிரவில் கணவரை எழுப்பி "நான் கதைசொல்லி ஆகப் போகிறேன்" என்றேன். அவர், "சரி, காலையில் பேசிக்கொள்ளலாம்" என்றார். மறுநாளே 'கதைசொல்லி' ஆவதற்காக தீவிரமாக இயங்கத் தொடங்கினேன்.
"20 ஆண்டுகளாகத் தொடரும் புத்தக வாசிப்பு, குழந்தைகளோடு இயக்கும் விருப்பம், கதை சொல்லும் திறன்... இவை அனைத்தையும் ஒன்றிணைத்து நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற யோசித்தபோது உருவான இலக்குதான் 'கதைசொல்லி' ஆவதற்கான முயற்சி."
'கதைசொல்லி' சதீஷிடம் ஆலோசனை கேட்டேன். அவரைப் போலவே பலரிடமும் ஆலோசனைக் கேட்டேன். சென்னையில் 'கதைசொல்லி'யாக இயங்கிவரும் தோழி பானுமதியிடம் கேட்டபோது, நிறைய உத்திகளைச் சொல்லிக் கொடுத்தார். அது மிகுந்த உதவியாக இருந்தது" என்றார்.
'பட்டாம்பூச்சி' நூலகத்தில் 'கதைக்களம்' காணும் 3-ல் இருந்து 12 வயது வரையிலான குழந்தைகளை முதலில் விளையாட வைக்கிறார். இதில் பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெறும். அதன், ஆடலும் பாடலும் அரங்கேறும். குழந்தைகளிடம் உற்சாகம் கூடியது கதை சொல்லத் தொடங்குவார் வனிதாமணி. விதவிதமான முகபாவனைகளுடனும், ஏற்ற இறக்கக் குரலுடன் இவர் கதைசொல்லும் விதத்தை குழந்தைகள் வெகுவாக ரசிக்கின்றனர். கதை முடிந்த பின்பு, ஒவ்வொரு குழந்தையும் புத்தகங்களை எடுத்து வைத்து, சில வரிகளை வாய்விட்டு வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். தாங்கள் வாசித்தவை பற்றி குழுவாக விவாதிக்கவும் செய்கிறார்கள்.
"குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதுதான் முதன்மை நோக்கம். இதற்கு 'கதைக்களம்' ஓர் ஆயுதம். இந்த முயற்சியால் குழந்தைகள் தன்னிச்சையாக யோசிக்கிறார்கள், படைப்பாற்றலுடன் இயங்குகிறார்கள், கதையை வெவ்வேறு விதமாக உள்வாங்குவதன் மூலம் மாற்று சிந்தனையும் மேலோங்குகிறது... கதை சொல்வதன் மூலம் குழந்தைகளுக்கு இவ்வளவு பலன்கள் கிடைக்கும் என்பதே 'கதைசொல்லி' ஆனபிறகுதான் நேரடியாக தெரியவந்தது. குறிப்பாக, குழந்தைகளை மின்னணு சாதனங்களை விட்டு சற்றே விலகியிருக்க கதைகளும் வாசிப்பும் துணைபுரிகின்றன.
முதலில் அரசுப் பள்ளிகளிலும், பொது நூலகங்களிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தேன். அரசு நூலகங்களில் குழந்தைகளுக்கான புதிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு. எனவே, வீட்டிலேயே ஒரு நூலகம் தொடங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினேன். இப்படித்தான் பட்டாம்பூச்சி நூலகமும், கதைக்களமும் கடந்த செப்டம்பரில் உருவானது. இதற்கு, பொருளாதார ரீதியில் மட்டுமின்றி தொடர்ச்சியாக ஊக்கமளிக்கும் என் கணவரின் பங்கு மிக முக்கியமானது.
'கதைக்களம்' அனுபவங்களை தொடர்ச்சியாக என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்வது வழக்கம். இதன்மூலம் வெளியூர்களிலும் கதைசொல்லியாக வலம்வரும் வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது என் வீட்டுக்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சி நடத்துகிறேன். அரசுப் பள்ளிகள், பொதுநூலகங்களிலும் தொடர்கிறேன். ஆசிரியர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கதை சொல்லும் உத்திகள் குறித்த பயிற்சிகளை அளிக்கிறேன்," என்றார்.
தமிழகத்தில் ஒருவர் முழுநேரமாக 'கதைசொல்லி'யாக இயங்குவதற்கான சூழல் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, தன் அனுபவம் மூலம் கிடைத்த வழிகாட்டுதலையும் பகிர்ந்தார்.
"தமிழில் இப்போது சிறார் இலக்கியம் மீதான கவனம் கூடத் தொடங்கியிருக்கிறது. பெற்றோரும் வாசிப்பின் அவசியத்தை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது தமிழக அளவில் முழுநேரக் கதைசொல்லிகளாக வலம் வரக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். ஆனால், பல ஊர்களுக்குச் சென்று குழந்தைகளைப் பார்க்கும்போது கதைசொல்லிகளுக்கான தேவை மிகுதியாக இருப்பதை உணர முடிந்தது. என் கதைக்களத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர் சிலர் கட்டணம் தர முன்வருதுண்டு. ஆனால், நான் மறுத்துவிடுகிறேன். எனினும், வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது ஏற்பாட்டாளர்கள் உரிய தொகையை வழங்குவார்கள்.
சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் போலவே 'கதைசொல்லி'களுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். குழந்தைகளுடன் இயங்குவது என்பது கொஞ்சம் முயற்சித்தாலே எளிதாக வசப்படும் செயல்பாடுதான். கதைசொல்லிகளுக்கு வாசிப்பு அனுபவம் மிகவும் அவசியம். இந்தத் தளத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இயங்கினால் எல்லா விதத்திலும் உரிய பலன்களை எதிர்பார்க்க முடியும். எனவே, விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் தயக்கமின்றி வரலாம்.
இந்த ஆறு மாதக் காலத்தில் என் முயற்சியை நேரடியாகப் பார்த்து, இதுவரை நான்கு பேர் வீட்டிலேயே நூலகம் அமைத்து குழந்தைகளுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். கதை சொல்லும் உத்திகளையும் அவர்களிடம் பகிர்ந்து வருகிறேன்.
தமிழகத்தில் கதைசொல்லிகள் பலரை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய இலக்கு. இதற்காக, ஒரு பயிற்சி அமைப்பைத் தொடங்கும் யோசனையும் உண்டு. கதைசொல்லி ஆக விரும்பும் எவரும் ஆலோசனைகளைப் பெற என்னைத் தொடர்புகொள்ளலாம்," என்றார் 'கதைசொல்லி' வனிதாமணி.
'கதைசொல்லி' வனிதாமணி - தொடர்புக்கு [email protected]