சாகச விரும்பிகளுக்கான சொர்க்கம் அட்வென்ச்சர்ஸ் 365!
“பயணங்கள் முதலில் ஆச்சரியங்களை அள்ளித் தந்து உங்களை பேச்சுமூச்சற்று போகச் செய்யும், பின் அனுபவங்களை அள்ளித்தந்து உங்களை தேர்ந்த கதைசொல்லியாய் மாற்றும்” என்கிறார் உலகின் தலைசிறந்த யாத்ரீகர் எனப் புகழப்படும் பட்டூட்டா. அத்தகைய பயணங்களை யாருக்குத்தான் பிடிக்காது? சிலருக்கு தனியாய் போகப் பிடிக்கும். இன்னும் சிலருக்கு கும்பலாய். எப்படி போவதாய் இருந்தாலும் சரி, அது சாகசங்கள் நிறைந்ததாய் இருக்கவேண்டும் என்பார்கள் சிலர். இப்படிப்பட்ட சாகசவிரும்பிகளுக்காகவே பிரத்யேகமாக செயல்படுகிறது அட்வென்ச்சர்ஸ்365.இன் (Adventures365.in) என்கிற இணையதளம். இதுபோன்ற இணையதளங்கள் ஏராளமாக இருந்தாலும், பாதுகாப்பான முறையில் சாகசங்கள் புரிய அனுமதிப்பது, தொழில்நுட்ப உதவிகளோடு சாகசங்களை அணுகுவது உள்ளிட்ட விஷயங்கள் இந்த தளத்தை மற்ற தளங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகின்றன. தாங்களே சொந்தமாய் சாகசங்கள் புரிய வழிசெய்யும் நிறுவனத்தை தொடங்கி விஷப்பரீட்சை செய்வதை விட்டுவிட்டு, புத்திசாலித்தனமாய் அப்படி செய்யும் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இவர்கள்.
அட்வென்ச்சர்ஸ்365 என்ற இந்த தளம் ரோஹன் கேட்கர், ஓம்கார் மேதாவடே என்ற இரண்டு இளைஞர்களால் தொடங்கப்பட்டது. ஓம்கார் புனேயில் பொறியியல் கடைசி ஆண்டு படித்துவருகிறார். ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. எனவே, ரோஹன் இந்த தளத்தின் தொழில்நுட்ப மேம்பாடு, வடிவமைப்பு போன்ற விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துகிறார். ஓம்காருக்கு சாகச நிகழ்ச்சிகளை ஒண்றிணைக்கும் அனுபவம் நிறைய இருப்பதால் அவர் மார்கெட்டிங் வேலைகளை கவனித்துக்கொள்கிறார். சாகசங்களை பாதுகாப்பாக நடத்திக்கொடுப்பது, அதுதொடர்பாக ஆர்கனைஸர்களிடம் பேசுவது ஆகியவையும் ஓம்காரின் வேலைகள்.
“இந்தத் தளத்தை தொடங்கும் எண்ணம் எங்களுக்கு 2014 ஜுன் மாதம் வந்தது. உடனே இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரிடமும் பேசினோம். இருபக்கங்களிலும் இருக்கும் குறைகளை கேட்டறிந்தோம். பின் இதுதொடர்பாக நிறைய தகவல்களை சேகரித்தோம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தளம் தொடர்பான பின்னணித் தகவல்களை சேகரிப்பதற்காகவே செலவிட்டோம். பின் டிசம்பர் 25, 2014ல் தளத்தை லான்ச் செய்தோம்” என்கிறார் ரோஹன்.
ஜனவரி 2014ல் சிறந்த தொழில் நிறுவனத்திற்கான ஐடியாவுக்காக நடத்தப்படும் டாடா பர்ஸ்ட் டாட்(Tata First Dot) போட்டியில் கலந்துகொள்ள தேர்வுபெற்றது இந்த நிறுவனம். கடந்த ஆண்டின் சிறந்த பத்து சுயதொழில் நிறுவனங்களுள் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
தற்சமயம் இந்த நிறுவனத்தின் ஆர்கனைஸர்களோடு தொடர்ச்சியாய் தொடர்பில் இருப்பதற்கெனவே எட்டு பேர் கொண்ட குழு ஒன்று செயல்படுகிறது. தங்கள் நிறுவனத்தில் ஒரு ஆர்கனைஸரை இணைத்துக்கொள்வதற்கு முன்பு, நிறுவனம் சார்பாக ஒரு குழு நேரில் சென்று அந்த ஆர்கனைஸர் ஏற்பாடு செய்யும் சாகச நிகழ்ச்சிகள் தரமிக்கவையா? பாதுகாப்பானவையா? என்றெல்லாம் ஆராய்கிறது. இந்த ஆராய்ச்சியில் திருப்தி ஏற்பட்டால்தான் அந்த குறிப்பிட்ட ஆர்கனைஸரை தங்கள் நிறுவனத்தோடு இணைத்துக்கொள்கிறார்கள்.
சாகச சுற்றுலாவுக்கென முறையான கட்டமைப்புகள் எதுவும் இந்தியாவில் இல்லை. முறையான கட்டணமும் இல்லை. ஆர்கனைஸர்கள் தாங்கள் நினைத்த தொகையை வசூலிப்பதே பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது. இன்னன்ன இடங்களில் இன்னன்ன சாகச விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன போன்ற தகவல்களை அளிப்பதற்கும் போதுமான கட்டமைப்புகள் இல்லை. சில பிரத்யேக வலைப்பூக்கள் மட்டுமே இத்தகைய தகவல்களை அளிக்கும் தளங்களாக இருக்கின்றன.
புகழ்பெற்ற, பெரிய சுற்றுலா விடுதிகள் எல்லாம், ஒன்று சொந்தமாக சாகச விளையாட்டுக்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களை வைத்திருக்கின்றன அல்லது அத்தகைய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன. ஆனால் இந்த சாகச விளையாட்டுக்களை சின்ன முதலீட்டில் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மேல் போதிய வெளிச்சம் படுவதில்லை. நிறைய நிறுவனங்களுக்கு இணையவெளியில் இயங்குவதற்கான கட்டமைப்பு கூட இல்லை என்பதுதான் சோகமே.
பிரச்னைகளுக்கான தீர்வு
இந்தமாதிரியான சின்ன நிறுவனங்களுக்கு இயங்குவதற்கான வெளி கொடுத்து, அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது அட்வென்ச்சர்ஸ்365 தளம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை முன்கூட்டியே தெரிவித்து அவர்களின் பதட்டத்தைக் குறைக்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வித்தியாசமான சாகச விளையாட்டுக்களை விளையாடும் வாய்ப்பைத் தருகிறது இந்த நிறுவனம். பலதரப்பட்ட இடங்கள், பலவகையான விளையாட்டுக்கள் என வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க ஏராளமான விஷயங்கள் இந்த தளத்தில் இருக்கின்றன.
25 வெவ்வெறு வகையான சாசகங்களிலிருந்து நமக்கு பிடித்தவற்றை நாம் தேர்வுசெய்துகொள்ளலாம். படகுப் பயணம், ட்ரக்கிங், நீர்வீழ்ச்சியில் கயிறு கட்டி இறங்குதல், பிரமாண்ட பலூன் பயணம் என இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அத்தனை வகை சாகசங்களும் இந்த பட்டியலில் இருக்கின்றன.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பெரும் பிரிவுகளில் இந்த சாகசங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக பாராச்சூட் கட்டிப் பறக்கும் பாராகிளைடிங் சாகசம் காற்று பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரக்கிங் நிலம் வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக ஆறாவது பிரிவாக பைக் பயணங்களும் உண்டு.
ஏன் ஆர்கனைஸர்கள் ஆகவில்லை?
இந்த தளம் பற்றி படிக்கும் எல்லாருக்கும் ஒரு கேள்வி எழக்கூடும். இவ்வளவு தூரம் அக்கறையாய் செயல்படும் இவர்களே இந்த சாகசங்களை ஏற்பாடு செய்யலாமே? ஏன் ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் செய்கிறார்கள் என. இதற்கு பதிலளிக்கிறார் ரோஹன்.
“ஆர்கனைஸராக இருப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஒரே இடத்தில் நிறைய சாகசங்களை வழங்கமுடியாது. எங்களின் பின்னணியும் அப்படிப்பட்டதில்லை. நாங்கள் அனைவருமே தொழிற்படிப்பை பின்னணியாகக் கொண்டவர்கள். எனவே ஆர்கனைஸர்களை ஒற்ணிணைத்து அவர்களுக்கு வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தும் பணியை செய்வதே எங்களுக்கு எளிமையான வேலையாக இருக்கும் என நினைத்தோம். மேலும் இப்படி ஒரு வெளியில் செயல்படும் நிறுவனங்கள் மிகக்குறைவே” என்கிறார் ரோஹன்.
சாகசங்கள் செய்ய அரசின் அனுமதியும் உரிமமும் பெற்ற நிறுவனங்களுடன் மட்டுமே இந்த நிறுவனம் இணைகிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எல்லாவற்றையும் விட முக்கியம் என இந்த நிறுவனம் நினைப்பதே இதற்கு காரணம்.
வானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கை டைவிங், ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் சாகசமான ஸ்கூபா டைவிங் போன்ற விளையாட்டுக்களில் ஆபத்துகள் நிறைய. இதனால் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தத் தொகையும் கட்டணமாக வசூலிப்பதில்லை. மாறாக, சாசகங்களை மேற்கொள்ளும் ஆர்கனைஸர்களிடம் இருந்தோ, நிறுவனத்திடமிருந்தோ, தங்களுக்கான கட்டணத்தை வசூலித்துக்கொள்கிறது.
அனுபவம் என்பது வெறும் வார்த்தையல்ல!
வாடிக்கையாளருக்கு எந்த விதத்திலும் ஏமாற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அந்த சாகச விளையாட்டு நல்லபடியாக நடந்து முடிந்தபின்னரே ஆர்கனைஸருக்கு சேர வேண்டிய பணத்தைத் தருகிறது அட்வென்ச்சர்ஸ்365. திட்டம் திடீரென கேன்சல் செய்யப்பட்டால் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது இந்த நிறுவனம்.
“வாடிக்கையாளர் தன் திட்டத்தை ரத்து செய்தால் அவர் எப்போது ரத்து செய்கிறார் என்பதை பொறுத்து குறிப்பிட்ட கட்டணத்தை பிடித்துக்கொண்டு மீதியை திரும்ப அளித்துவிடுவோம். இதுவே சாகசங்களை நடத்தும் நிறுவனம் ரத்து செய்தால் வாடிக்கையாளருக்கு முழு பணமும் திருப்பியளிக்கப்படும். அதேபோல் சாகசத்தில் ஈடுபட செல்லும் ஒவ்வொரு குழுவோடும் எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரும் செல்வார். கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கவே இந்த ஏற்பாடு” என்கிறார் ரோஹன்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. இந்த பத்து மாதங்களில் டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட ஆர்கனைஸர்கள், 150க்கும் மேற்பட்ட இடங்கள், 500க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் என பிரமாண்டமாய் வளர்ந்துவருகிறது அட்வென்ச்சர்365 தளம். இப்போது தங்களுக்கான பிரத்யேக செயலியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்தத் தளம்.
தற்போது, ஒரு குழுவிற்கு சராசரியாக ஆறு பேர் வீதம் மாதத்திற்கு நாற்பது, ஐம்பது குழுக்கள் இந்தத் தளம் வழியே சாகச சுற்றுலாவை மேற்கொள்கின்றன. இப்போது மேலும் விரிவுபடுத்த வசதியாய் முதலீடுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள் இவர்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சாகச சுற்றுலாவுக்கென பிரத்யேகமாக செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. க்ரேஸியாத்ரா(CrazyYatra), த்ரில்லோபிலியா(Thrillophilia) போன்றவை அதில் சில. ஆனால் நாளுக்கு நாள் சாகச சுற்றுலாவுக்கான வெளி விரிவடைந்துகொண்டே வருவதால் இன்னும் எண்ணற்ற நிறுவனங்களுக்கு இந்தத் துறையில் வர வாய்ப்பு இருக்கிறது.
சாகசங்களில் ஈடுபட: Adventure365