பழைய ஆடைகளை மதிப்பு கூட்டி ஏழை மக்களுக்கு நன்கொடையாக அளிக்கும் Twirl!
கொல்கத்தாவைச் சேர்ந்த சுஜாதா சாட்டர்ஜி Twirl.Store என்கிற நிறுவனத்தைத் தொடங்கி மக்களிடமிருந்து பழைய ஆடைகளை பெற்றுக்கொண்டு தேவையிருப்போருக்கு நன்கொடையாக வழங்குவதுடன் மறுசுழற்சி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் மாற்றுகிறார்.
பலர் தங்களது தேவைக்கும் அதிகமாக ஆடைகளை வாங்கிக் குவித்துவிடுவதுண்டு. கடைக்கு சென்று வாங்குவது போதாதென்று, இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், வீடு தேடி வேறு வந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் அவற்றை வைப்பதற்கு இடம் தேடும் நிலைமை ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க எத்தனையோ பேர் அணிந்துகொள்ள ஆடை இன்றி கந்தல் துணிகளை அணிந்திருக்கும் காட்சிகளையும் பார்க்கிறோம். இந்த இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படுகிறார் சுஜாதா சாட்டர்ஜி.
”நான் எந்த மாதிரியான மாற்றத்தைப் பார்க்க விரும்பினேனோ, அதை நானே உருவாக்கத் தீர்மானித்தேன்,” என்கிறார் சுஜாதா.
துணிகள் வீணாகும் அளவைக் குறைக்கவேண்டும்; பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்கவேண்டும்; இயற்கையைப் பாதுகாக்கவேண்டும்; ஏழை மக்கள் போட்டுக்கொள்ள துணி கிடைக்கவேண்டும்; இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தும் நோக்கத்துடன் சுஜாதா 2017-ம் ஆண்டு Twirl.Store தொடங்கினார்.
கீழே இருக்கும் புகைப்படம் சுஜாதாவின் விருப்பத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது:
Twirl செயல்பாடுகள் மற்றும் வெகுமதி புள்ளிகள்
பரிசு, வெகுமதி இதையெல்லாம் விரும்பாதவர்கள் இருப்பார்களா என்ன? Twirl மக்களிடமிருந்து ஆடைகளை சேகரித்துக்கொண்டு அவர்களுக்கு வெகுமதி புள்ளிகளை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி அவர்கள் மறிசுழற்சி செய்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை Twirl வலைதளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
“மக்கள் தங்களிடம் இருக்கும் தேவையற்ற ஆடைகள், பெட்ஷீட், மேஜை விரிப்பு என துணியால் ஆன பொருட்களை எங்களுக்கு அனுப்பலாம். அவர்களுக்கு வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். இதைக் கொண்டு பரிசுப்பொருட்கள், ஆக்சசரீஸ் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் தேவை இருப்போருக்கு அவர்கள் நேரடியாக உதவுகிறார்கள். அல்லது மறைமுகமாக பெண்கள் வருவாய் ஈட்ட உதவுகிறார்கள். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இலவச பிக்-அப் வசதி உண்டு. ஒரு நல்ல விஷயத்தையும் செய்துவிட்டு அதற்கான வெகுமதியும் கிடைப்பது மகிழ்ச்சிதானே?” என்கிறார் சுஜாதா.
Twirl குழுவினர் துணி வகைகளை மக்களிடமிருந்து சேகரிக்கின்றனர். அவை அப்படியே நன்கொடையாக வழங்கப்படுகிறது. அல்லது மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய தயாரிப்புகளாக மாற்றப்படுகிறது.
பெறப்படும் துணிகள் அனைத்தையும் குழுவினர் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த முடிந்த துணிகள் துவைத்து சுத்தம் செய்யப்பட்டு ஸ்டீம் செய்யப்படுகிறது. பிறகு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு ஆக்சசரீஸ், பைகள் போன்ற தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன. மற்றவை என்ஜிஓ-க்கள் உதவியுடன் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன.
“கொல்கத்தாவிலும் சாந்தினிகேதன், சுந்தர்பன் போன்ற கிராமங்களிலும் நன்கொடை முயற்சி ஏற்பாடு செய்தோம். இதுகுறித்து எங்கள் ஆதரவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முன்னரே தெரியப்படுத்துவோம். இந்நிகழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. உதவி செய்தவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இது ஊக்கமளிக்கும்,” என்கிறார் சுஜாதா.
பெண்களுக்கு வாய்ப்பு
கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நெசவு மற்றும் தையல் வேலைகளில் ஆர்வமும் திறனும் பெற்றிருப்பார்கள். இந்தப் பெண்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ள சுஜாதா திட்டமிட்டார்.
துணிகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தும் வேலைகளை பெரும்பாலும் கிராமப்புறப் பெண்களே மேற்கொள்கின்றனர். இது அவர்களுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது. Twirl ஏராளமான பெண்களுக்கு நிதிச்சுதந்திரம் அளித்துள்ளது.
”இளம் பெண்கள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்திருக்கிறோம். சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான சிந்தனைகளை தகர்த்தெறிவதே எங்கள் நோக்கம். Twirl அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குகிறது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தக் குழுவில் பல்வேறு திறன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தயாரிப்பு, நிர்வாகம் என அனைத்தையும் பெண்கள் திறம்பட நிர்வகிக்கிறார்கள்,” என்று பெண்கள் மட்டுமே அடங்கிய குழு குறித்து சுஜாதா விவரிக்கிறார்.
எதிர்மறை கருத்துக்கள்
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் சுஜாதா. எலக்ட்ரிக்கல் பொறியியல் முடித்த சுஜாதா மார்க்கெட்டிங் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். ஐடி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவமிக்கவர்.
படிப்பிற்கும் வேலை செய்த அனுபவத்திற்கும் தொடர்பில்லாத ஒரு புதிய பிரிவில் செயல்படத் தொடங்கியபோது பலர் எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
”நான் Twirl முயற்சியைத் தொடங்கிய சமயத்தில் என்னைச் சுற்றி பலர் எதிர்மறையான கருத்துகளைக் கூறினார்கள். ஒரு பெண்ணாக தொழில்முனைவில் ஈடுபட்டு புதிய பிரிவில் செயல்படமுடியுமா என்கிற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் விமர்சனங்கள் அதிகரித்தபோது இதில் செயல்படவேண்டும் என்கிற உத்வேகமும் அதிகரித்தது. எதிர்மறையான விஷயங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு நம்பிக்கையுடன் தொடங்கினேன்,” என்கிறார்.
உறவினர்களும் நண்பர்களும் ஆதரவளிக்காதபோதும் அறிமுகமில்லாத பலர் இவரது முயற்சியைப் பாராட்டியுள்ளனர். அவர்களும் இணைந்துகொண்டு மற்றவர்களுக்கும் பரிந்துரைத்துள்ளனர்.
பொறுமை, விடாமுயற்சி, மன வலிமை ஆகியவையே தொடர்ந்து செயல்பட ஊக்கமளித்ததாகத் தெரிவிக்கிறார் சுஜாதா.
நன்கொடையளிக்கும் வட்டம்
Twirl சுயநிதியில் தொடங்கப்பட்டது. மக்களைச் சென்றடைய சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக்கொண்டாலும் பரிந்துரை மூலமாகவே பலர் இணைந்துள்ளனர்.
“Twirl செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகப்பெரிய சவால்,” என்கிறார் சுஜாதா.
சுஜாதாவின் குடும்பத்தினர் சிறு வயதிலேயே சமூக நலனில் அக்கறை காட்டும் குணத்தை வளர்த்தெடுத்துள்ளனர்.
“என் பெற்றோர் என்னை சுதந்திரமாக வளர்த்தார்கள். குடும்பத்தினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனிலும் அக்கறை காட்டவேண்டும் என்பதை என் பெற்றோரிடமிருந்தும் தாத்தா பாட்டியிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். என் தம்பி எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இன்று என் குழந்தைகள் எனக்கு ஊக்கமளிக்கிறார்கள்,” என்கிறார்.
Twirl செயல்பாடுகளுக்கு தனிநபர்கள் மட்டுமல்லாது கார்ப்பரேட் நிறுவனங்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் போன்றவை ஆதரவளிக்கவேண்டும் என்பதே சுஜாதாவின் விருப்பம்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா